பிரபலமான இடுகைகள்

சனி, 29 மார்ச், 2014

வழக்கமாக நான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை...

வழக்கமாக நான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை, அது தனி நிகழ்வு என்பதால்.

போன வருடம் சொன்ன மாதிரியே, யாருக்கும் தெரியாமல் பிறந்தநாளை கடத்தி விடலாம் என்று இருந்தேன். ஆனால் மார்ச் 23 அன்று, தளபதி சுற்றுப்பயணம் என்று அறிவிப்பு வந்தது. கதை கிழிந்தது என்று அப்பவே முடிவுக்கு வந்துவிட்டேன்.

முன்தினம் இரவு 11.59. மூத்த மகன் சிவசரண் அழைத்தார் மொபைலில். வாழ்த்தினார். அடுத்து வாழ்விணையர் காயத்ரி வாழ்த்தினார். இரண்டாவது மகன் சிவசூர்யா, தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருப்பதால், அவருக்கு தெரியாது. மாலை, சொல்லவில்லை என கோபித்துக் கொண்டார்.

கடந்த வருடம் முகநூலில் வந்த செய்திகளால் மெல்ல பரவியிருந்தது. அதனால் விடியற்காலையே அரியலூர் வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன், வாழ்த்துகளை தவிர்ப்பதற்கு.

குன்னம் சென்று பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்த்தேன். அங்கிருந்து கிளம்பினேன். தளபதி அவர்கள் வரும் பாதையான அரியலூர், கீழப்பழூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி வரை பயணித்து ஏற்பாடுகளை பார்வையிட்டேன்.

முகநூல் உபயத்தால் ஓரளவு தோழர்களுக்கு தெரிந்து விட்டது, ஆங்காங்கு கைக்குலுக்கி வாழ்த்தினர். ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி மட்டும் கடந்த வருட நிகழ்வை நினைவு வைத்திருந்து சால்வையோடு துரத்தினார், வாழ்த்தினார் நிர்வாகிகளோடு.

காலையிலேயே மகேஷ் அழைத்த போதே லேசாக யோசனை, இன்னைக்கு பிளாஷ் நியூஸ் தான் என்று. மகேஷ் மனதார வாழ்த்தினார். மகேஷ்- ரைசிங் ஸ்டார் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

வாழ்த்துவதற்காக, முகநூல் பார்த்த நண்பர்களின் அழைப்பால், மொபைல் மெல்ல சார்ஜ் இழந்தது. சிதம்பரம் நுழைந்த போது, மொத்தமும் காலி. ஒரு கார் சார்ஜர் வாங்கி மீண்டும் உயிரூட்டினேன் மொபைலை.

அண்ணன் எம்.ஆர்.கே உதவியாளர் பாலமுருகனும், இளைஞரணி கார்த்தியும் வாங்கிக் கொடுத்த பிரியாணி தான் பிறந்தநாள் விருந்து.

வைத்தீஸ்வரன்கோவில் அடைந்தோம். முதல் நாள் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர், மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு சேகரித்த தளபதி அவர்கள், சீர்காழியில் பிரச்சாரம் முடித்து, வைத்தீஸ்வரன்கோவிலில் தங்கியிருந்தார்.

பிரச்சாரத்திற்கு வந்த அண்ணன் திருமா, சால்வை போர்த்த பரபரப்பானது. பிற்ந்தநாள் கதை அனைவருக்கும் தெரிந்து விட்டது. வாழ்த்து மழை. நெளிந்தேன்...

தளபதி அவர்களை வரவேற்று வேட்டி அணிவித்தபோது, நம்ம மகேஷ் அருகில் வந்தார். தளபதி அவர்களை பார்த்து சொன்னார், “அண்ணனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்”. தளபதி உற்று பார்த்தார் புன்னகையோடு, கை பிடித்து குலுக்கினார்.

ஒரு அடி எடுத்து வைத்தவர், நின்றார். 

“எத்தனாவது பிறந்தநாள் சங்கர் ?” 
“45 அண்ணா”. 
“வாழ்த்துக்கள் !”

# வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள் உள்ளிட்ட வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!