பிரபலமான இடுகைகள்

சனி, 8 மார்ச், 2014

பாகிஸ்தானியை கேப்டனின் துப்பாக்கி துளைத்தது....

ஓடி வந்த கேப்டன் எதிரில் இருந்த உயரமான சுவரை பார்த்தார். ஒரு நிமிடம் தான், இடது புறம் இருந்த சுவரில் இடது காலால் உதைத்து எம்பினார். அப்படியே தம் பிடித்து வலது காலால் வலது சுவற்றில் ஒரு உதை. காற்றிலே தாவினார். மேலிருந்து தொங்கிய கயிற்றை பிடித்தார். பிடித்த கயிற்றில் தொங்கிக் கொண்டே ஊஞ்சலாடினார். கட்.

பிளாஷ் பேக். சிங்கப்பூரில் முஸ்தஃபா மாலில் பர்சேஸில் இருக்கும் கேப்டனின் மொபைல் அலறுகிறது. எடுத்து எண்ணை பார்க்கிறார். பார்க்கும் போதே கண் சிவக்கிறது. காதில் வைக்கிறார். தலை மட்டும் அசைகிறது. எதிரில் இருப்பவருக்கு தெரியாது என்பதால், "ஊம் " என்கிறார். உடனே கிளம்புகிறார். ஏதோ தேசியப் பேரிடர் என மட்டும் புரிகிறது.

விமானத்தில் ஏறியவர் கடிகாரத்தை பார்த்தபடியே இருக்கிறார். பணிப்பெண் தண்ணீர் தருகிறார். சிந்தனையில் இருக்கும் கேப்டன் "எப்ப இறங்கும் ?" என்கிறார். "அளவைப் பொறுத்து" என்கிறார் பணிப்பெண். "நான் பிளைட்ட கேட்டன்" என்கிறார் கேப்டன். "நானும் அதான் சொன்னேன். போக வேண்டிய தூர அளவைப் பொறுத்து". "டெல்லி போகனும்"

                                

"இதோ. இப்போ". விமானம் இறங்கும் போதே கேப்டன் கதவை ஒரு கையால் இழுக்கிறார். திறக்கிறது. விமானத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல நிறுத்தியிருந்த குஜராத் "நானோ' காரில் குதிக்கிறார். காரின் மேற்புறம் இருந்த திறப்பு வழியாக, டிரைவர் சீட்டில் குதிக்கிறார். விமான நிலையத்தில் இருந்து சீறிப் பாய்ந்த கார் டெல்லியில் நுழைந்தது.

கேப்டன் கார் வேகத்தை பார்த்து டெல்லி டிராபிக் ஸ்தம்பித்தது. கேப்டனின் "வேகம்" தெரிந்த டிராபிக் போலீஸார், அனைத்து டிராபிக்கையும் குளோஸ் செய்து, கேப்டன் காரை மட்டும் விட்டனர். ஜன்பத் சாலை வழியாக கார் விரைந்தது. சாலை ஓரமாக, பைஜாமா ஜிப்பாவில் பாவமாக நின்று கொண்டிருந்த டிராஜடி காந்தியை பார்த்தார் கேப்டன்.

பாகெட்டில் இருந்த சிங்கப்பூர் சாக்லெட்டை எடுத்து சுண்டினார், நேராக போய் காந்தி வாயில் விழுந்தது. சிறு பிள்ளையாய் மகிழ்வுடன் கையாட்டினார் காந்தி. டாட்டா காட்டிய கேப்டன் காரின் வேகத்தை கூட்டினார். கார் செங்கோட்டையை நோக்கி பறந்தது. மொபைலை எடுத்து அழுத்தினார். "இன்னும் பத்து நிமிஷத்துல சென்னை வந்துருவேன். உங்கள பார்க்கறேன்" என்றவர் தனக்கு தானே சிரித்துக் கொண்டு "அக்காங்" என்றார்.

இப்போது அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த காரை பார்த்தார். தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன், "செங்கோட்டை எக்ஸ்பிரஸ்" என்று எழுதியிருந்தது. பழைய நினைவுகள் வந்தன. ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொண்ட பலா சுளையையும், வெவிச்ச கடலையையும் அடித்து பிடிங்கிய நினைவுகள்.

"இதான் சான்ஸ்" முணுமுணுத்தவர், ஸ்டியரிங்கை இடதுபுறம் முழுதும் திருப்பினார். எக்ஸ்பிரஸின் முன்புறத்தை நானோவின் பின்புறத்தால் லேசாக தட்டினார். நீண்ட தொலைவு பயணத்தில் களைத்திருந்த எக்ஸ்பிரஸ் ரோட்டை விட்டு விலகியது. சாலையின் இடதுபுறம் ஓடிய கங்கை ஆற்றில் எக்ஸ்பிரஸ் இறங்கியது. மெல்ல விசில் அடித்தார் "கடை வீதி கலகலக்கும்..."

செங்கோட்டையை கார் நெருங்கியது. ஓடும் காரில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தார் கேப்டன். கட்...

ஊஞ்சலாடிய கயிற்றை பார்த்தார். கயிற்றில் தலைக்கு மேல் இந்திய தேசியக் கொடி. கொடி தரையில் விழாமல் அவசரமாக மேல்புறம் இழுத்தார். சுவற்றில் ஓங்கி உதைத்தார். சுவற்றின் மாடத்தில் நின்றுக் கொண்டிருந்த ராணுவ வீரனின் கையில் இருந்த துப்பாக்கி-ஐ பறித்தார். கொடிக் கயிற்றை துப்பாக்கியால் சுட்டு, கொடியை தரையில் வீழ்த்தியதாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானியை கேப்டனின் துப்பாக்கி துளைத்தது.

                             

எதிர் புறக் கயிற்றை இழுத்து கொடியோடு கோட்டைக்கு மேல் போனார். கோட்டையின் மேல் கொடிக் கம்பத்தின் கீழ் நின்றுக் கொண்டிருந்த தந்திர கோடியின் கண்கள் கலங்கியிருந்தன. "கேப்டன், நீங்க கொடிய மட்டும் காக்கல. என் மானத்தையும் தேச மானத்தையும் சேர்த்து தான்". "கலங்காதீங்க. இது என் கடமை" என்றார் கேப்டன். "கேப்டன் ஜிந்தாபாத்" கோஷம் விண்ணை பிளக்கிறது.

"அப்படியே சைனா பார்டர் போங்க கேப்டன். போன வாரம் டைப்பிங் மிஸ்டேக்கோட இருந்த பேச்ச ஒப்பிச்சிட்டேன். அதுல சைனா இந்தியாவின் ஒரு மாநிலம் அப்படின்னு நான் பேசிட்டேன். அதுக்கு எதிர்ப்பா பார்டர்ல மிலிட்டரிய குவிச்சிருக்காங்கலாம். ஒன் மேன் ஆர்மி நீங்க தான் காப்பத்தனும்". கண்கள் சிவக்க எதிரில் இருந்த மேஜையை ஓங்கி குத்தினார் கேப்டன்.

மேஜை மேலிருந்த கண்ணாடி கிளாஸ்கள் பறந்து ஸ்லோமோஷனில் தரையில் மோதுகின்றன. பொன்னார் உலுக்க கேப்டன் விழித்து பார்க்கிறார். டெல்லி குஜராத் பவன். "கேப்டன், அக்ரிமெண்ட்டுக்கு டெல்லி வந்ததிலிருந்து ஒடைஞ்ச கிளாஸுக்கு தேச்சே என் டெபிட் கார்ட் தேஞ்சிப் போச்சு" புலம்பிக் கொண்டே டெபிட் கார்டோடு எழுந்தார் இல.கணேசன். கேப்டன் லேசாக கண் அயர்ந்தார். பிண்ணனியில் பாடல்.

# அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக