பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2

தளபதி கான்வாய் சிதம்பரத்தில் நுழைந்தது. தெற்குரத வீதியிலிருந்து, மேலரத வீதிக்கு திரும்பும் போதே, வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. போலீஸ் ஸ்டேஷன் கடக்கும் போதே, வேனின் இருபுறமும் அலையடித்து ஒதுங்குவது போல் மக்கள் வெள்ளம். 


                   

பஸ் நிறுத்தம் அருகில், பேசும் இடம். தளபதி அவர்களும் திருமாவும் வேனின் மேற்புறம் செல்லும் போது எழுந்த உற்சாகம் சில நிமிடங்கள் நீடித்தது. நாங்கள் எழுந்து வேனின் நான்குபுறமும் சுற்றிப் பார்த்தோம், ஆனந்தம். மனிதக் கடலுக்கு நடுவே தீவு போல மிதந்தது, தளபதி அவர்களின் வாகனம்.

பேச ஆரம்பித்த தளபதி அவர்கள், கூடியிருந்தவர்களின் உணர்வை பிரதிபலித்து, உற்சாக மிகுதியில் இருந்தார். பேசும் நேரம் கூடிக் கொண்டே போனது. 


                           


ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளியது. “நான் சாலை வழியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். பிரச்சாரத்திற்கு ஜெ எப்படி வருவார் ?” எனக் கேட்டு தளபதி தன் கையை “ஹெலிகாப்டர் காற்றாடி” போல் சுழற்றி காட்ட, “ஹோ” என்று எழுந்த ஓசை உச்சம் தொட்டது.

வேனின் கடைசி சீட்டில் இருந்த மகேஷ் தீவிரமாக செல்போனில் ஷூட் செய்து கொண்டிருந்தார். ஒரு டாஸ்மாக் நபர் தளபதியின் பேச்சுக்கு, தீவிரமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் ரசிக்கத்தக்க அளவில் இருந்தது. மகேஷ் அனேகமாக இதை குறும்படமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது.

வேனின் முன் சீட்டை ஒட்டி, நின்று பேசும் மேடை. அதை அடுத்து இரண்டு இருக்கைகள். ஒன்றில் அண்ணன் எம்.ஆர்.கே.பி, இன்னொன்றில் அண்ணன் திருமா. அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கை, அதில் மகேஷ். இன்னொரு இரண்டு இருக்கை, அதில் அண்ணன்கள் துரைசாமி, சுபா.

இடையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு என்னை இருத்தினார் மகேஷ். ஜின்னா நட்த்துனராக உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார், ஏதாவது எழுதும் பணி என்றால் நிற்கும் மேடையின் படிக்கட்டில் அமர்ந்து எழுதுவார். கலகலப்பாக கல்லூரி டூர் போல இருந்தது.

3.40-க்கு செல்ல வேண்டிய கீரப்பாளையத்திற்கு செல்லும் போது மணி 5.50. சரியாக இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்கள் தாமதம். அங்கேயும் நல்லக் கூட்டம். அடுத்தப் பாயிண்டான ஒரத்தூர் செல்வதற்குள், வழியில் மூன்று ஊர்களிலும் மக்கள் திரண்டு நின்று வேனை மறிக்க முயன்றனர். தளபதி கையசைத்து சமாளித்து வந்தார்.


                           

சேத்தியாத்தோப்பை அடையும் போதும் அதே தாமதம்(4.20-6.30). நல்லக் கூட்டம், எழுச்சியான வரவேற்பு. குமாரக்குடி செல்லும் போது மணி 6.50, தாமதம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆனது. இது போன்ற டூர்களில் நேரத்தை குறித்துக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்வது என் வழக்கம். அதனால் இந்தப் புள்ளி விபரம். அது தான் காப்பாற்றியது என்னை.

பயணத் திட்டத்தில், கடைசியாக குன்னம் கூட்டத்திற்கு 7.40க்கு செல்வதாக திட்டம். 9.30-க்கு சென்றால் கூட போதும். 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம் என்றால் சரி செய்யலாம். ஆனால் சோழத்தரத்தில் பேசும் போது 2 மணி நேரம் 25 நிமிட லேட். இதே நிலையில் போனால் குன்னம் போகும் போது இரவு பத்தாகிவிடும். அதற்கு மேல் பேச அனுமதி கிடையாது.

லேசாக எனக்கு ஜுரம் வரும் போல இருந்தது....

(தொடரும்...)