பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 3

சோழத்தரத்தில் உரையாற்றி விட்டு, காட்டுமன்னார்கோவில் சென்ற போது 7.45. பெரும் ஆரவாரத்திற்கு இடையே தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார். 

                     


இப்போது 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதம். இத்தோடு கடலூர் மாவட்டம் முடிவடைகிறது. அடுத்து அரியலூர் மாவட்டம்.

மின்னல் வேகத்தில் சென்றால் தான் குன்னம் செல்ல முடியும். தளபதி ஓட்டுனர் பாலுவிடம் நிலைமையை சொன்னேன். “கவலைப்படாதீங்கண்ணே, புடிச்சி போயிரலாம்” என்றார். நிர்வாகிகளை மொபைலில் பிடித்து, முன்னால் எந்த வாகனமும் செல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்னேன்.

5.40-க்கு மீன்சுருட்டியில் இருந்திருக்க வேண்டும். 8.15-க்கு நுழைந்தோம். மூன்று ரோடு சந்திக்கும் இடம். மக்கள் வெள்ளம். மகிழ்ச்சிக் கூக்குரல். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க.கண்ணன், தருமதுரை ஆகியோர் நின்று வரவேற்றனர்.

தளபதி மேடை ஏற எழுந்தார்கள். இடையில் நின்ற என்னைப் பார்த்தார். “அண்ணா, சுருக்கமாக பேசினா போதும். அப்போ தான் கூட்டத்திற்கு சென்றடைய முடியும்”. சிரித்துக் கொண்டே மேடை ஏறினார்கள் தளபதி. இரண்டே நிமிடம், ரத்தினச் சுருக்கமாய் பேசி, அண்ணன் திருமாவிற்கு வாக்கு கேட்டு முடித்தார். இறங்கும் போது சிரித்தார்,”என்ன சரியா ?”. “ரொம்ப நன்றிங்க அண்ணா”

வேன் வேகமெடுத்து, சிட்டாய் பறந்தது. குறுக்கு ரோட்டில் ஒரு பெரும் கூட்டம் நின்று மறித்தது. ஹாரனை அழுத்தியபடியே, லாகவமாய் ஒதுக்கி ஓட்டினார் பாலு. தளபதி அவர்கள் கூடியிருந்தோருக்கு வணக்கம் வைத்தபடியே வந்தார்கள், சமாதானப்படுத்தும் விதமாக.

மாலை 6.00 மணிக்கு சென்றிருக்க வேண்டிய ஜெயங்கொண்டத்தை அடைந்த போது இரவு 8.35. சிதம்பரம் சாலையில் பேசும் இடம். இரண்டு பர்லாங் தூரத்திற்கு மனிதத் தலையாகக் காட்சியளித்தது. தளபதி அவர்களுக்கு மனமில்லாமல் மூன்று நிமிடத்தில் பேச்சை முடித்தார்கள். “இவ்வளவு நேரம் தானா ?”என நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தவித்தார்.

ஜெயங்கொண்டம் பகுதிக்கு, கழக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்த குறிப்புகளை என்னிடத்தில் காட்டி சிரித்தார் ஜின்னா. தளபதி பேச்சில் குறிப்பிடுவதற்காக தயார் செய்யப்பட்டது. நேர நெருக்கடியால், பேச முடியவில்லை.

கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, தளபதி அவர்களுக்கு இறங்க மனமில்லை. நான்கு ரோடு சந்திப்பு வரை மேடை மேலே நின்றவாறு, மக்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியவாரே வந்தார். சால்வைகள் கொடுத்தனர். தூரத்தில் நின்ற ஒரு தோழர், தான் கொண்டு வந்த எலுமிச்சைப் பழத்தை கொடுக்க இயலாமல் தூக்கி வீச, அதை தளபதி அனாயசமாகக் கேட்ச் பிடிக்க, உற்சாகக் கூச்சல்.

மேடையிலிருந்து கீழே இறங்கிய அண்ணன் திருமா, படிக்கட்டிலேயே அமர்ந்துக் கொண்டு தளபதி அவர்களோடு உரையாடிக் கொண்டு வந்தார். தளபதி அவர்களும் தன் இருக்கையை திருப்பி உட்கார்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியை அண்ணன் சுபா.சந்திரசேகர் தன் மொபைலில் படம் பிடித்தார். “எவ்வளவு இணக்கமான கூட்டணி என்பதற்கு எளிதான விளக்கம் இந்தக் காட்சி. எவ்வளவு எளிமையான தலைவர்கள். வேறு எந்தக் கூட்டணியிலும் இது போல் காட்சியை காண இயலாது” என்றார்கள் ஜின்னாவும், சுபாவும்.


                      

நேரம் ஆகிறது என, குன்னத்தில் இருந்தோர் அடித்து, அடித்து என் மொபைல் சார்ஜ் காலி.

(தொடரும்...)