பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4

உடையார்பாளையம் நுழைந்த தளபதியின் வாகனம் அண்ணா சிலை அருகில் நின்றது. தாமதத்தில் 5 நிமிடம் குறைக்கப்பட்டிருந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது. பத்து மணிக்காவது குன்னத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

                   

கிரிக்கெட் மேட்சில், சேஸிங்கில் ரன்னையும், மிச்சமிருக்கும் பந்து எண்ணிக்கையையும் மாறி மாறி கணக்கு பார்ப்பது போல, போக வேண்டிய தூரத்தையும், மிச்சமிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் தளபதி ஒரு நிமிட உரையை முடித்திருந்தார்.

விளாங்குடி கைக்காட்டி நோக்கி கான்வாய் பறந்தது. தளபதி அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வந்தார்கள். மற்றக் கட்சிகளின் பணி, வேட்பாளர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கைக்காட்டியில், அரியலூர் ஒ.செ ஜோதிவேல் காத்திருக்க, அதற்கு அடுத்த பாயிண்டில் இருவர் பரபரத்திருந்தனர்.

அடுத்த பாயிண்ட்டான கீழப்பழூரில் திருமானூர் ஒ.செ கென்னடியும், மா.து.செ தனபாலும் தான் பரபரத்திருந்தனர். காரணம், கீழப்பழூரை கட் செய்து, நேராக அரியலூர் போகப் போவதாக அவர்களுக்கு செய்தி. யார் சொன்னார்கள் என்று தெரியாமலே வதந்தி பரவி விட்டது.

பல வருடங்களாக, திருமானூர் ஒன்றியப் பகுதிக்கு தளபதி அவர்களின் சுற்றுப்பயணம் அமையாத காரணத்தால், இந்த வாய்ப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து, கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. கேட்பவர்களிடம் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

9.15 (6.45). கைகாட்டியை அடைந்த போது இந்த செய்தி கிடைத்தது. அவர்களை அழைத்து கீழப்பழூர் வருவதை உறுதி செய்தோம். கைக்காட்டியிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருவதால், அந்தப் பாதையில் சென்றாலும் தாமதமாகும். அதற்கு கீழப்பழூர் சென்று அரியலூர் செல்வதே சரி.

கைக்காட்டியில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும் தளபதி அவர்களுக்கு மனம் கொள்ளவில்லை, “இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள், அதிக நேரம் பேச முடியவில்லையே” என. ஒரு நிமிட உரை, கிளம்பினோம்.

இதற்குள் காரில் சார்ஜ் செய்யப்பட்டு எனது மொபைல் உயிர் பெற்றது. அரியலூர் நகர செயலாளர் முருகேசனை அழைத்து, அரியலூர் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து நிலையம் வழியாக பாதையை மாற்றச் சொன்னேன், பத்து நிமிடம் மிச்சமாகும் என்பதால்.

9.30 (7.00). கீழப்பழுரை அடைந்தோம். ஒரே நிமிட உரை. கூடியிருந்தவர்களுக்கு வருத்தம், தளபதி அதிக நேரம் பேசவில்லையே என, தளபதி அவர்களுக்கு வருத்தம், அதிக நேரம் பேச முடியவில்லையே என. அந்த இருவருக்கும் மகிழ்ச்சி, தளபதி வந்தாரே என. எனக்கும் மகிழ்ச்சி, இவர்களையும் ஏமாற்றவில்லை, குன்னமும் அடைந்து விடலாம் என்று.
( தொடரும்)....