பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 1

23.03.2014. வைத்தீஸ்வரன்கோவில். மாலை 3.00 மணி.

கி விட்டார்கள் என தகவல் வந்தது. வெளியில் வெயில் கடுமையாக இருந்தது. முதல் நாள் நாகை மாவட்டம் சீர்காழியில் பொதுக்கூட்டத்தில் பேசிய தளபதி அவர்கள், வைத்தீஸ்வரன்கோவிலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

கடலூர் மாவட்ட எல்லையான வல்லம் படுகையில் மாலை 3.00 மணிக்கு பிரச்சாரம் ஆரம்பிப்பதாக திட்டம். இரண்டு நாளாகவே மாலை 5.00 மணி வரை வெயில் கடுமையாக தகிக்க ஆரம்பித்திருந்தது. அதனால் சற்று தாமதமாக ஆரம்பிக்கலாம் என அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் நானும் ஆலோசித்திருந்தோம்.


                         


4.00 மணிக்கு கிளம்பினார்கள் தளபதி. பிரச்சாரம் செய்ய வசதியாக மேலே திறக்கும் வசதி உள்ள வேன். வேனில் தளபதி அவர்களுக்கு உதவியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் அசேன் முகம்மது ஜின்னாவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்.

தளபதியின் சுற்றுப்பயண விபரங்கள், பேசிய பேச்சுகள், பத்திரிக்கை செய்திகள், அன்றைய சுற்றுப்பயண விபரங்கள், பிரச்சார இடங்கள், அவை குறித்த விபரங்கள், ரூட் மேப் என தயாராக இருக்கிறார்கள். தற்போதைய செய்திகள் குறித்து அப்டேட்கள். ஜின்னா மூன்று மொபைல்களை வைத்துக் கொண்டு தகவல் தொடர்பில் பிஸி.

தளபதி அவர்கள் வாகனத்தில் வேட்பாளரோடு மாவட்டசெயலர்கள் பயணிப்பது வழக்கம். அதனால் எனக்கும் அந்த வாய்ப்பு. வேட்பாளர் அண்ணன் திருமா, கடலூர் மாவட்ட செயலர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் பா.துரைசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் ஆகியோரோடு நானும்.

மணி 04.15. கொள்ளிடம் பாலம் தாண்டும் போதே மேளதாள முழக்கம் கேட்டது. கொள்ளிடக் கரையில் அமைக்கப்பட்டிருந்த சாலையை தளபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார் எம்.ஆர்.கே, “இந்த சாலை நம் ஆட்சிக்காலத்தில் தான் அமைக்கப்பட்டது. எனது சொந்த ஊரை நேரடியாக இணைக்கிறது. தூரம் குறைகிறது”

சாலையை பார்த்தேன். தொலைவில் ஒரு டி.வி.எஸ்50 பறந்து வந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். வரும் போதே தளபதி வாகனத்தை பிடித்து விட்ட குஷி முகத்தில் தாண்டவமாடியது. வண்டியில் நேராக வந்து மோதி விடுவாரோ என எனக்கு பயம். குழந்தைகள் வேனை நோக்கி ஆர்வமாக கையாட்டினார்கள்.

தளபதி அவர்கள் வாகனம் வல்லம்படுகையை அடைந்தது. மேள, தாளம் முழங்க, ஓயிலாட்டத்தோடு அந்தப் பகுதியே அதிர்ந்தது. சாலையே தெரியவில்லை. வேனின் மேற்புறம் மெல்ல திறந்தது. தளபதி அவர்களும் திருமாவும் மேற்புறம் தோன்ற உற்சாகக் குரல்கள்.

தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார்கள். உற்சாகமான ரெஸ்பான்ஸ் கழகத் தோழர்களிடமிருந்தும், விடுதலை சிறுத்தைகளிடமிருந்தும். முதல் இடமே சிறப்பாக அமைந்த குஷியில் எல்லோரும், குறிப்பாக அண்ணன் எம்.ஆர்.கே.பி, சொந்த மாவட்டம் அல்லவா...

(தொடரும்)