பிரபலமான இடுகைகள்

புதன், 23 ஏப்ரல், 2014

ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன்...

ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை வேட்பாளர் அண்ணன் திருமா சந்திக்கும் நிகழ்ச்சி.

முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தனர். முதல் வரிசையில் ஒருவர் தனித்து தெரிந்தார். பேசுவோரின் பேச்சைக் கேட்டு ஏக ரெஸ்பான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் நிகழ்ச்சிகள் என்றால் இது போல் ஒருவர் அவசியம் இருப்பர்.

முகத்தில் காட்டிய ரெஸ்பான்ஸ் தாண்டி, கைகளிலும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். பேசுவோரின் கருத்துகளை நாட்டியம் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கண்களில் டாஸ்மாக் எபெக்ட். யாராவது கண்டித்தால், அவர்களை பதிலுக்கு கண்டித்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பகுதியில் மலையப்பநகர் என்ற பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று அண்ணன் திருமா அந்தப் பகுதியில் ஒரு சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு வந்திருந்த நரிக்குறவ சமுதாயத்தினர் அண்ணன் திருமா அவர்களுக்கு, தங்கள் வழக்கப்படி “பாசிமணி மாலை” அணிவித்தனர். 


                  

அப்போது நமது ஆள், அவரும் அணிவிப்பது போல ஆக்ட் கொடுத்தார்.

மாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி பேசும் போது, காமெடி கவுண்ட்டர் கொடுத்தார் நமது ஆள். நான் பேசும் போது, என்னைப் பார்த்து சைகை காட்டினார். பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

அண்ணன் திருமா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மா.செ அண்ணன் துரைசாமி, ஒ.செ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி என நிர்வாகிகளுக்கு சால்வை போடும் போது, தானும் தலையை நீட்டினார் நம்ம ஆள். அணிவித்த சால்வையை பார்த்து திருப்தி ஆனார் .

திடீர் பிரமுகர் ஆன சந்தோஷத்தில் எங்களோடு உணவருந்த வந்தார். அங்கும் அதையும் இதையும் பேசி செண்டர் ஆப் அட்ராக்ஷன் ஆனார். உணவருந்தி வெளி வந்தோம். வெளியே வந்தவுடன் என்னை உற்றுப் பார்த்தார். “ஆகா, சிக்கிக்கிட்டோம்”.

“ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன் எம்.எல்.ஏ”. நான் பேசுவதற்குள் முந்தினார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காட்டுராஜா. “சித்தப்பா, அவரு ஊரோட நம்ம ஊருக்கு தான் அதிகம் எம்.எல்.ஏ வந்திருப்பாரு” என்று சொல்லி நான் அந்த ஊரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மேற்கொண்ட பணிகளை பார்வையிட வந்ததையும், திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு வந்ததையும் பட்டியலிட்டார்.

“அப்படியா?” நம்ம ஆள். “அவரு வந்தப்ப நீ எங்கேயாவது போயிருப்ப, அதுக்கு என்ன செய்யறது?” காட்டுராஜா சொல்ல, “அட, ஆமால்ல” என்றவர் என்னை பார்த்தார். “நான் அரியலூர்ல தான தங்கியிருக்கேன். வரும் போது பார்க்கலாம்” என்றேன்.

இப்போ அவரு கொடுத்தாரு டிவிஸ்ட். “அட அது தெரியும் எம்.எல்.ஏ. நான் தினம் அரியலூர் வருவேன். உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கற அந்த ஆபிஸால நான் அந்த தெருவுக்கு வர்றதில்ல”. 

“எந்த ஆபிஸ்?” 
“கலால் ஆபிஸ்”

கலால் ஆபிஸ்னா மதுவிலக்கு காவல்துறை அலுவலகம்.

# நான் தான் அவுட். நம்ம ஆள் செம ஸ்டெடி தான் !