பிரபலமான இடுகைகள்

திங்கள், 5 மே, 2014

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குவது, கொடுப்பது குறித்த விவாதம் உச்சம் தொடுகிறது. 

                     

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் “எல்லோரும்”, ஓட்டை விலைக்கு விற்கிறார்கள் என்று சொல்வது சரி கிடையாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போர், தினம் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு நிச்சயம். ஓட்டு போட செல்ல ஒரு நாள் வேலையை இழக்கிறார்கள்.

சம்பளம் இல்லையென்றால், அன்றைய குடும்ப நிலை அதோகதி தான். அவர்கள் வங்கி கணக்கு உள்ளவர்கள் கிடையாது, எனவே கையிருப்பு இருக்காது. கூடுதல் பணம் இருந்தால், அது தான் டாஸ்மாக்கிற்கு போய்விடுமே. இவர்களை பொறுத்த வரை இந்தப் பணம் அன்றைய கூலி.

பொதுவாக மத்திய தட்டு மக்கள் மன நிலை, ஒரு சில விஷயங்களில் ஒரே நிலையில் இருக்கும். பொருட்காட்சிகளில் பார்த்திருக்கலாம், பாப்கார்ன் இயந்திரம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஸ்டாலில், சாம்பிள் கொடுப்பார்கள். அங்கு கூட்டம் மொய்த்தெடுக்கும்.

இலவசப் பொருட்கள் குறித்த மன நிலை அது தான். தங்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி தான் விடுவோமே என்ற எண்ணம். இதை கடந்த ஆட்சிக் காலத்தில் நேரடியாக உணர்ந்தேன், இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில்.

வீட்டில் ஹாலில், படுக்கையறையில், டைனிங் ஹாலில் என்று தனித்தனி டி.வி வைத்திருப்பார்கள். அவர்கள் தான் முதல் ஆளாகக் கேட்பார்கள், “எங்களுக்கு எப்போ டி.வி தருவீங்க?”. இவர்களில் எல்லோரும் இலவசம் என்பதால் மாத்திரம் கேட்பதில்லை.

இது நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், திருப்பி தரும் இலவசப் பொருள் தானே, எனவே நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது என்ற எண்ணம் தான். வரிசையில் நின்று வாங்கவும் தயங்குவது இல்லை. உரிமையோடு கேட்கவும் தயங்குவது இல்லை.

அது போன்று நடுத்தர வர்க்கத்தின் மனநிலை, ஏன் நாம் செலவு செய்து, ஆட்டோவிலோ, பைக்கிலோ சென்று வாக்களிக்க வேண்டும்? யாரோ ஆட்சிக்கு வரப்போகிறார்கள், யாரோ சம்பாரிக்கப்போகிறார்கள் அதற்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமும்.

அன்றைய சம்பளமோ, ஆட்டோ செலவோ ஏதோ ஒன்றை கொடுத்தல் அவர்களை வாக்களிக்க வர செய்ய தூண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

அதை அரசியல் கட்சிகள் கொடுப்பது தான் தவறு. இந்த ஆண்டு தேர்தல் நடத்த ரூபாய் 3500 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டுள்ளது. 


                     

கட்சிகள் செய்யும் செலவு ரூபாய் 30,000 கோடியை தாண்டி விடும். 81.45 கோடி வாக்காளர்களுக்கு செலவுக்கு அரசே கொடுத்துவிட்டால், ரூபாய் 200 கொடுத்தால் 16,290 கோடி செலவாகும்.

# ஆம், அரசே பணம் கொடுத்து விடலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக