பிரபலமான இடுகைகள்

சனி, 27 செப்டம்பர், 2014

இந்தத் தீர்ப்பை இவரைத் தவிற வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது !

இந்தத் தீர்ப்பை இன்னொரு நீதிபதி வேண்டுமானாலும் கொடுத்திருக்க முடியும். இதை விட கடுமையாகக் கூட கொடுத்திருக்க முடியும். இதை விட விரைவாகக் கூட கொடுத்திருக்க முடியும், வேறு யாருக்கும் எதிராக என்றால்….

ஆனால் இந்தத் தீர்ப்பு, சந்திரலேகா அய்.ஏ.எஸ்-க்கு ஏற்பட்ட அவலம் தெரிந்தும், பலம் பொருந்தியவர்களை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

                 

இந்தத் தீர்ப்பு “கண்ணுக்கு எதிரே எதிரிகளே இல்லாத தன்னிகரற்றவருக்கு” எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு அரசு நிலத்தை நடத்தைவிதிகளை மீறி வாங்கியிருந்தாலும் மனசாட்சிப்படி திருப்பிக் கொடுத்தவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்ட ஓராண்டுத் தண்டனையை போகிறப் போக்கில் தட்டியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு 18 ஆண்டுகள் இழுத்தடித்து, பல நீதிபதிகளை கதறடித்து, சிதறடித்த வழக்கு வன்மையாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்த தீர்ப்பு நீதிபதி வீட்டுக்கே குடிநீர் இணைப்பை துண்டித்த பலம் பொருந்தியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு வழிக்கு வராத நீதிபதி மருமகன் மீது, கஞ்சா வழக்குப் போடும் அறிவாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இன்தத் தீர்ப்பு எந்த உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சாமல், உயிர் பயத்தை மீறி,  நீதியின் மீதுள்ள பற்றால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.

இந்தத் தீர்ப்பு எந்த விலை கொடுக்க தயாராக இருந்தோருக்கும் மசியாமல், நேர்மையின் மீது நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.


# இந்தத் தீர்ப்பை இவரைத் தவிற வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது !

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

படிச்சா, அடுத்த இலக்கு....(பாஸ்போர்ட் புராணம் - 1)

எங்க தலைமுறையில் பத்தாம் வகுப்பு பாஸ் செய்தால், உடனே சில சடங்குகள் உண்டு. அவற்றில் முதன்மையானது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல். அரசாங்க வேலைக்கு போறது தான் அப்போ முதல் நோக்கம்.

                    

அதனால பத்தாவது பாஸ் செஞ்ச உடனே பதிஞ்சிட்டா சீனியாரிட்டியில இருப்போம்னு பெரியோர் அட்வைஸ். ரிசல்ட் வந்த உடனே அந்த ஆபிஸ தேன்கூட்டை போல் பசங்க மொய்ப்பாங்க.

அடுத்த நோக்கம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது. காரணம் அப்போ வெளிநாட்டு வேலை தான் ஹிட். பத்தாவதோ, பிளஸ் டூ-வோ பெயிலாயிட்டா உடனே வெளிநாட்டு ஏஜெண்ட புடிச்சி வேலைக்கு முயற்சி ஆரம்பமாயிடும்.

இப்பவும் எங்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து வேலை தேடி வெளிநாடு செல்வோர் எண்ணிகை அதிகம் தான். அதே போல வெளிநாட்டில் இன்னைக்கும் வேலை செய்யறவங்களும் நிறைய.

ஆனா இப்போ படிச்சவங்களும் வேலை தேடி வெளிநாடு செல்வது அதிகமாயிடிச்சி. மற்றவங்க அய்.டி, அது, இதுன்னு அமெரிக்கா, அய்ரோப்பான்னு போறாங்க. எங்க பக்கமிருந்து வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் பக்கம் நிறைய.

சரி மேட்டருக்கு வருவோம். பத்தாவது பாஸ் செஞ்சாச்சி. அடுத்த நாளே வகுப்பு நண்பர்கள்லாம் படையா கிளம்பினாங்க, எம்ப்ளாய்ண்ட்மெண்ட் எக்ஸேஞ்சுக்கு. நானும் கிளம்பினேன்.

வீட்டில கேட்டாங்க,”இதுக்கு மேல படிக்க போறதில்லையா? காலேஜ் போகப் போறதில்லையா? காலேஜ்ல படிச்சி பெரிய வேலைக்கு போகனும்னா, இப்போ பதிவு பண்ண வேண்டியதில்லையே”

“காலேஜ் முடிச்சி பதிஞ்சிக்கலாம்”. அவ்வளவு தான். பத்தோடு, பிளஸ் டூ-வும் போச்சி. எம்ப்ளாய்மெண்ட் எக்ஸேஞ்சும் போகல. பாஸ்போர்ட்டும் அப்ளை பண்ணல. காலேஜ் போயாச்சி.

கல்லூரி படிக்கும் போதே பல நண்பர்கள் வெளிநாட்டு மேற்படிப்புக்காக தேர்வுகளுக்கு தயாரானதோட, பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிச்சாங்க. எங்க கோஷ்டிக்கு தெரியும், நாமலாம் வெளிநாடு போயி, இந்தியாவ யார் காப்பத்தறது?

கல்லூரி முடிஞ்சது. ஒரு வழியா சென்னை வந்து தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு பண்ணியாச்சி. அடுத்த இலக்கு, பாஸ்போர்ட்டு தான். ஒரு வழியா வாங்கினேன் அப்ளிகேஷன...

# பாஸ்போர்ட் புராணம் !

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா....

ஒரு திரைப்படப் பாட்டு நம்மை பல ஆண்டுகளுக்கு பின் இழுத்து செல்லும் என்பதை இன்று உணர்ந்தேன். அப்படியே 1986க்கு கொண்டு சென்று விட்டது. வயது குறைந்து விட்டது. அந்த நாள் நினைவுகள்.

     

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பொறியியல் புலம். முதலாண்டு. மின்னியல் மற்றும் மின்ணணுவியல். வீட்டிலிருந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற நேரம். கட்டுபாடுகள் தளர்ந்து வாழ்க்கையின் சிறகுகள் விரிந்த நேரம்.

பள்ளிப்படிப்பு காலத்தில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் அம்மாவிடம் அனுமதி பெற வேண்டும். கல்லூரி, ஹாஸ்டல் வந்த பிறகு, நாமே நமக்கு தலைவன். அது தான் பல ரசனைகள் பிடிபட்ட காலம்.

பள்ளி காலத்திலேயே டிரான்சிஸ்டரை தலையணைக்கு கீழ் வைத்து பாடல்கள் கேட்ட இளையராஜா ரசிகக் கூட்டத்தின் தலைமுறை. இளையராஜா பாடல்களை கேட்டே பசியாற்றும் கூட்டத்தின் அங்கம்.

அந்த இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்த படம் என்றால் எவ்வளவு ஆர்வம் கிளம்பியிருக்கும்? அப்படி தான் அந்த படம் எங்களுக்கு அறிமுகம். ரிலீஸ் அப்போது.

படம் பார்க்க சென்றோம். லேனா தியேட்டர். கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்றோம். அது தான் நகரத்தில் சினிமா பார்க்க சென்று, கும்பலில் நின்ற முதல் அனுபவம். தோளில் ஏறி குதித்து செல்கிறார்கள்.

டிக்கெட் கவுண்டரை நெருங்குகையில் சட்டை கசங்கி, வியர்வை பெருத்து, தலை கலைந்து, நிலை குலைந்து போனோம், எங்கள் கேங். ஆனாலும் டிக்கெட் வாங்கி, வாழ்க்கையின் உச்சம் எட்டினோம்.

பாடல்கள் தான் படத்தின் பலம். டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன். பல வெற்றிப் படங்களின் டைரக்டர். மெல்லிய உணர்வுகளை கொண்டு திரைக்கதை நெய்யக் கூடியவர். ஆனால் இந்தப் படம் இசை மேல் கட்டப்பட்டது. மெல்லத் திறந்தது கதவு.

இன்று ஜெயா டிவியில் "குழலூதும் கண்ணனுக்கு" பாடல் பார்த்தேன். நம்ம "மைக் மோகன்" புல்லாங்குழல் வைத்துக் கொண்டு குழலூதூகிறார். ராதா கண்டாங்கி சேலைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் ஓடி பாடுகிறார்.

உடலை ஒட்டிய சட்டை. பல நிறங்கள் கொண்ட சட்டை. டைட்டான கருப்பு பேண்ட். இது மோகன். நீல நிற சேலை. மேக்கப் பெரிதாக இல்லாத ராதா. இவர்களை கொண்டு படமாக்கப்பட்ட பாடல். ஆனால் ஹிட் பாடல். அது அந்த காலம்.

இசை, பழைய நினைவுகள்.....

# பாடலில் வரும் மோகனை போல மனம் பழைய நினைவுகளை தேடி அலைகிறது !

சனி, 20 செப்டம்பர், 2014

முகூர்த்த நேரம் நெருங்குது, தாலி எங்க ?

அரியலூர் - தஞ்சை சாலையிலிருந்து ஏலாக்குறிச்சி சாலைக்கு திரும்பும் போது மணி 10.00. அங்கிருந்து தேளூர் 15 கி.மீ என்றாலும், அரைமணி நேரத்தில் சென்றுவிடலாமா என்ற சந்தேகம் வந்தது, காரணம் அது கிராமச்சாலை.

தேளூரில் திருமணம். முகூர்த்த நேரம் 9.00 - 10.30. சுயமரியாதைத் திருமணம் என்றாலும், உறவினர்கள் சங்கடப்படக் கூடாது என்பதற்காக, முகூர்த்த நேரத்திற்குள் திருமணம் நடத்தி வைத்து விடுவது வழக்கம். கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நேரத்திற்குள் போயிடலாமா?" "10.20க்கு போயிடலாம்ணே" தைரியம் கொடுத்தார் மாவட்ட துணை செயலாளர் தனபால். தேதி வாங்கும் போதே, அன்று அண்ணா பிறந்தநாள் என்பதால் முப்பெரும் விழா இருக்கும் எனத் தயங்கினேன்.

ஆனால் தேதி கேட்ட மணமகனின் தந்தையாரின் ஆர்வத்தை எடுத்துக் கூறி ஒன்றிய செயலாளர் கென்னடி வற்புறுத்தினார். மணமகனின் தந்தையார் பெயரை கேட்டதும் ஒப்புக் கொண்டேன். காரணம் அவர் பெயர் இந்திரஜித்.

இந்திரஜித் என்பது ராமாயணத்தில் வருகின்ற இராவணனின் மகன் பெயர். அந்த பெயரை வைத்த அவர் தந்தை திராவிடர் கழகத்தவராக இருக்க வேண்டும். அடுத்து தேளூர் மிக உள்ளடங்கிய கிராமம், அங்கு கழகத் திருமணம் நடப்பது மகிழ்ச்சி.

மணமகன் பெரியசாமி சிங்கப்பூரில் பணிபுரிவதால், அந்த தேதியில் திருமணம் நடத்துவது, மணமகனுக்கு விடுப்பு எடுக்க வசதியாக இருக்கும் என்று கூறினார்கள். ஒப்புக் கொண்டேன். அதனால் அதற்கு தகுந்தாற் போல் பயணத் திட்டதை வகுத்தேன்.

காலை 6.30 க்கு அரியலூரிலிருந்து கிளம்பி 7.30-க்கு ஜெயங்கொண்டம் சென்றேன். அண்ணாசிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த போது 8.00. கழகத் தோழர் இலையூர் மணி திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு 8.20-க்கு செந்துறை கிளம்பினேன்.

செந்துறை சென்ற போது மணி 8.50. அங்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். அடுத்து அரியலூரை அடைந்த போது 9.30. அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தான் மேலே குறிப்பிட்ட பயணம். எங்கும் நேரம் விரயமாகாமல் விரைந்தோம்.

ஏலாக்குறிச்சி தாண்டி அழகியமணவாளம் கிராமத்தில், நாங்கள் வருவதை கேள்விபட்டு, அங்குள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கும் மாலை அணிவித்து காரை விரட்டி தேளூரை அடைந்த போது 10.25.

பந்தல் நிரம்பியிருந்தது. எல்லோரும் ஆவலோடு எங்களை எதிர்பார்த்திருந்தனர். முகூர்த்தம் முடிய 5 நிமிடம் தான் இருக்கிறது என்ற பதற்றத்தோடு மேடை ஏறினோம். மணமகன் மட்டும் மேடையில் இருந்தார்.

10.26. மணமகள் வந்தார். எனக்கு டென்ஷன் எகிற ஆரம்பித்தது. மாலையை தேடினால் காணோம். கேட்டப் பிறகு ஒருவர் ஓடி பக்கத்திலிருந்த வீட்டிலிருந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்தார். பிரித்து மாலையை எடுத்துக் கொடுத்தார்கள. 10.28.

மணமக்களின் பெற்றோரை அழைத்து, மணமக்கள் அருகே நிறுத்திவிட்டு மங்கல நாணை தேடினேன். "முகூர்த்த நேரம் நெருங்குது, தாலி எங்க ?" . உறவினர்களிடம் ஆசி வாங்க கீழே எடுத்துப் போயிருப்பார்கள் என பார்த்தோம். அப்போது தான் மணமகனின் தந்தைக்கு நினைவு வந்து, உறவினரை வீட்டிற்கு அனுப்பினார்.

போனவரை காணவில்லை. காத்திருந்தோம். என் கடிகாரத்தில் மணி 10.30. அடுத்த ஆளை அனுப்பினோம். அப்போது தான் தெரிந்தது, மங்கலநாணுக்கு நூல் கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

மணமகனை பார்த்தேன், பதற்றமில்லாமல் இருந்தார். சரி, கழகக் குடும்பம். மணமகளை பார்த்தேன். அவரிடமும் பதற்றமில்லை. அவரும் கழகக் குடும்பமோ எனப் பத்திரிக்கையைப் பார்த்தேன். இல்லை. ஆனால் அவரதுத் தாயார் பெயர் "பகுத்தறிவு பாப்பா". சரி தான்.

மங்கல நாண் வரும் வரை ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றி, இருவர் வாழ்த்துரையும் வழங்கினர். மங்கலநாண் வந்தது. மணமக்கள் பெற்றோரிடம் கொடுத்து மணமகன் கையில் கொடுக்க, அணிவித்தார்.

                    

நேரம் 10.40, என் கடிகாரத்தில். மணமகன் கடிகாரத்தை பார்த்தேன், சிங்கப்பூர் நேரமாக இருக்குமோ என. இந்திய நேரம் தான். சரியாக 10.30. மேடையில் இரண்டு, மூன்று பேர் கடிகாரத்தை பார்த்தேன். எல்லாமே 10.30-ஐ கடந்திருந்தது.

மணமக்கள் வீட்டார் யாரும் முகூர்த்த நேரம் குறித்து சிறிதும் கவனம் கொள்ளவில்லை. நான் தான் மிகுந்த கவனத்தில் இருந்தேன், அவர்கள் சங்கடப்பட்டு விடக்கூடாதே என.

# யார் நேரம் சரியான நேரம்? எது நல்ல நேரம்? எல்லாம் மனசு தான்...

வியாழன், 18 செப்டம்பர், 2014

1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்டவர்...

“ திரு. நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்குபடும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய் தெரியும்.

அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த  இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம்.

பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நட்த்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.

மேலே குறிப்பிடப்படும் நாயக்கர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான், நாயக்கர் என்று அன்னியோன்யமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவ்வளவு அன்போடு குறிப்பிட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் அவர்கள். இந்தக் கருத்தை வெளிப்படுத்திய ஆண்டு 1928.

1928-லேயே அய்ரோப்பாவில் உள்ள பார்லிமெண்டில் பிரிட்டிஷின் அடிமை தேசமான இந்தியாவின் ஒரு கடைகோடியில் இருக்கிற தமிழகத்தின் பிரமுகரைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்றால் அவர் ஏற்படுத்திய அதிர்வு எத்தகையதாக இருந்திருக்கும்?

அது வரை காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றி வந்தவர், 1925 காஞ்சி காங்கிரஸ் மாநாட்டிலேயே “இனி காங்கிரஸை ஒழிப்பதே என் முதல் வேலை என்று முரசறிவித்து வெளியேறினார்.

பின் குடியரசு பத்திரிக்கையை துவங்கி சுயமரியாதைக் கொள்கையை வலியுறுத்தி எழுத ஆரம்பித்தார். வருணாசிரமக் கொள்கையை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்த ஆரம்பக் கட்ட்த்தில் தான் வ.உ.சி, பெரியாரை மேற்கண்டவாறு பாராட்டினார்.

1928-க்கு பிறகு பெரியார் ஆற்றிய பணி அளவிட இயலாதது. அவற்றை எல்லாம் படித்தால் தான் பெரியாரின் பெருமையை உணர முடியும். 1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்ட அவரது வரலாற்றை நாம் 2015-லாவது படித்திருக்க வேண்டும்.


# தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள் ! 

புதன், 17 செப்டம்பர், 2014

அவர் தான் அண்ணா !

பேரறிஞர் அண்ணா ஒரு முறை சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். இரவுப் பொதுக்கூட்டம் முடித்துக் கொண்டு கிளம்புகிறார். அண்ணாவின் பொதுக்கூட்டங்கள் இரவு நேர பாடச்சாலை.

                               

சமயங்களில் நள்ளிரவு தாண்டியும் நடக்குமாம். அப்படி கூட்டம் முடித்துப் புறப்படுகிறார். ஓட்டுனரை ஓட்டச் சொல்லி பின்னிருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். பயணம் நீள்கிறது.

"களைப்பானால் வண்டியை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்கிறார். உடனிருப்போரை அக்கறையோடு கவனிப்பது அண்ணாவின் வழக்கமாம். அதே அன்போடு சொல்லி தூங்கிப் போகிறார்.

கார் நிறுத்தப்படுவதை உணர்ந்து அண்ணா விழிக்கிறார். கும்மிருட்டு. சாலை ஓரம் கார் நிற்கிறது. அண்ணா ஓட்டுனரை பின்னிருக்கையில் படுக்கச் சொல்கிறார். ஓட்டுனர் தயங்குகிறார்.

நீட்டிப் படுத்தால் அசதி நீங்கும் என வற்புறுத்தி ஓட்டுனரை பின்னிருக்கையில் படுக்க வைக்கிறார். அண்ணா முன்னிருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். ஓட்டுனர் தூங்கிப் போகிறார்.

மெல்லிய வெயில் முகத்தில் பட்டு ஓட்டுனர் விழித்துப் பார்க்கிறார். கார் மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதை உணர்கிறார். அண்ணாவுக்கு கார் ஓட்டத் தெரியாதே என்று பதைத்து எழுந்துப் பார்க்கிறார்.

அண்ணா தான் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். "என்ன அய்யா இது? என்னை எழுப்பியிருக்கலாமே" ஓட்டுனர் பதறுகிறார்.

காரை நிறுத்திய அண்ணா சொல்கிறார்,"எனக்கு தூக்கம் விலகியது. உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் நானே காரை ஓட்டினேன். பயண தூரமும் குறைந்ததல்லவா"

பேரறிஞர் அண்ணாவிற்கு பல அடையாளங்கள் உண்டு. அதில் மிகப் பிரசித்தமானது அவரது இந்த எளிமை தான். அண்ணாவின் திறமைகளை நாம் அடைய முடியாது. ஆனால் அவரது இந்த எளிமையை நாம் கடைபிடிக்க முடியும்.

# அண்ணா 106-வது பிறந்தநாள் விழா !