பிரபலமான இடுகைகள்

சனி, 20 செப்டம்பர், 2014

முகூர்த்த நேரம் நெருங்குது, தாலி எங்க ?

அரியலூர் - தஞ்சை சாலையிலிருந்து ஏலாக்குறிச்சி சாலைக்கு திரும்பும் போது மணி 10.00. அங்கிருந்து தேளூர் 15 கி.மீ என்றாலும், அரைமணி நேரத்தில் சென்றுவிடலாமா என்ற சந்தேகம் வந்தது, காரணம் அது கிராமச்சாலை.

தேளூரில் திருமணம். முகூர்த்த நேரம் 9.00 - 10.30. சுயமரியாதைத் திருமணம் என்றாலும், உறவினர்கள் சங்கடப்படக் கூடாது என்பதற்காக, முகூர்த்த நேரத்திற்குள் திருமணம் நடத்தி வைத்து விடுவது வழக்கம். கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நேரத்திற்குள் போயிடலாமா?" "10.20க்கு போயிடலாம்ணே" தைரியம் கொடுத்தார் மாவட்ட துணை செயலாளர் தனபால். தேதி வாங்கும் போதே, அன்று அண்ணா பிறந்தநாள் என்பதால் முப்பெரும் விழா இருக்கும் எனத் தயங்கினேன்.

ஆனால் தேதி கேட்ட மணமகனின் தந்தையாரின் ஆர்வத்தை எடுத்துக் கூறி ஒன்றிய செயலாளர் கென்னடி வற்புறுத்தினார். மணமகனின் தந்தையார் பெயரை கேட்டதும் ஒப்புக் கொண்டேன். காரணம் அவர் பெயர் இந்திரஜித்.

இந்திரஜித் என்பது ராமாயணத்தில் வருகின்ற இராவணனின் மகன் பெயர். அந்த பெயரை வைத்த அவர் தந்தை திராவிடர் கழகத்தவராக இருக்க வேண்டும். அடுத்து தேளூர் மிக உள்ளடங்கிய கிராமம், அங்கு கழகத் திருமணம் நடப்பது மகிழ்ச்சி.

மணமகன் பெரியசாமி சிங்கப்பூரில் பணிபுரிவதால், அந்த தேதியில் திருமணம் நடத்துவது, மணமகனுக்கு விடுப்பு எடுக்க வசதியாக இருக்கும் என்று கூறினார்கள். ஒப்புக் கொண்டேன். அதனால் அதற்கு தகுந்தாற் போல் பயணத் திட்டதை வகுத்தேன்.

காலை 6.30 க்கு அரியலூரிலிருந்து கிளம்பி 7.30-க்கு ஜெயங்கொண்டம் சென்றேன். அண்ணாசிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த போது 8.00. கழகத் தோழர் இலையூர் மணி திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு 8.20-க்கு செந்துறை கிளம்பினேன்.

செந்துறை சென்ற போது மணி 8.50. அங்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். அடுத்து அரியலூரை அடைந்த போது 9.30. அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தான் மேலே குறிப்பிட்ட பயணம். எங்கும் நேரம் விரயமாகாமல் விரைந்தோம்.

ஏலாக்குறிச்சி தாண்டி அழகியமணவாளம் கிராமத்தில், நாங்கள் வருவதை கேள்விபட்டு, அங்குள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கும் மாலை அணிவித்து காரை விரட்டி தேளூரை அடைந்த போது 10.25.

பந்தல் நிரம்பியிருந்தது. எல்லோரும் ஆவலோடு எங்களை எதிர்பார்த்திருந்தனர். முகூர்த்தம் முடிய 5 நிமிடம் தான் இருக்கிறது என்ற பதற்றத்தோடு மேடை ஏறினோம். மணமகன் மட்டும் மேடையில் இருந்தார்.

10.26. மணமகள் வந்தார். எனக்கு டென்ஷன் எகிற ஆரம்பித்தது. மாலையை தேடினால் காணோம். கேட்டப் பிறகு ஒருவர் ஓடி பக்கத்திலிருந்த வீட்டிலிருந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்தார். பிரித்து மாலையை எடுத்துக் கொடுத்தார்கள. 10.28.

மணமக்களின் பெற்றோரை அழைத்து, மணமக்கள் அருகே நிறுத்திவிட்டு மங்கல நாணை தேடினேன். "முகூர்த்த நேரம் நெருங்குது, தாலி எங்க ?" . உறவினர்களிடம் ஆசி வாங்க கீழே எடுத்துப் போயிருப்பார்கள் என பார்த்தோம். அப்போது தான் மணமகனின் தந்தைக்கு நினைவு வந்து, உறவினரை வீட்டிற்கு அனுப்பினார்.

போனவரை காணவில்லை. காத்திருந்தோம். என் கடிகாரத்தில் மணி 10.30. அடுத்த ஆளை அனுப்பினோம். அப்போது தான் தெரிந்தது, மங்கலநாணுக்கு நூல் கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

மணமகனை பார்த்தேன், பதற்றமில்லாமல் இருந்தார். சரி, கழகக் குடும்பம். மணமகளை பார்த்தேன். அவரிடமும் பதற்றமில்லை. அவரும் கழகக் குடும்பமோ எனப் பத்திரிக்கையைப் பார்த்தேன். இல்லை. ஆனால் அவரதுத் தாயார் பெயர் "பகுத்தறிவு பாப்பா". சரி தான்.

மங்கல நாண் வரும் வரை ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றி, இருவர் வாழ்த்துரையும் வழங்கினர். மங்கலநாண் வந்தது. மணமக்கள் பெற்றோரிடம் கொடுத்து மணமகன் கையில் கொடுக்க, அணிவித்தார்.

                    

நேரம் 10.40, என் கடிகாரத்தில். மணமகன் கடிகாரத்தை பார்த்தேன், சிங்கப்பூர் நேரமாக இருக்குமோ என. இந்திய நேரம் தான். சரியாக 10.30. மேடையில் இரண்டு, மூன்று பேர் கடிகாரத்தை பார்த்தேன். எல்லாமே 10.30-ஐ கடந்திருந்தது.

மணமக்கள் வீட்டார் யாரும் முகூர்த்த நேரம் குறித்து சிறிதும் கவனம் கொள்ளவில்லை. நான் தான் மிகுந்த கவனத்தில் இருந்தேன், அவர்கள் சங்கடப்பட்டு விடக்கூடாதே என.

# யார் நேரம் சரியான நேரம்? எது நல்ல நேரம்? எல்லாம் மனசு தான்...