பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

வெளிநாட்டு கனவுகள் : (பாஸ்போர்ட் புராணம் - 2)

வழக்கம் போல பாஸ்போர்ட் அப்ளிகேஷன வாங்கின பிறகு, நம்ம சோம்பேறித்தனத்தில ரெண்டு நாட்கள் போச்சி. அப்பதான் நண்பர் முத்துஎழிலன் கிட்டேயிருந்து அழைப்பு. “மாம்ஸ், ஒரு இண்டர்வியூ இருக்கு. உடனே பெங்களுர் கிளம்பி வா”

அப்புறம் பெங்களுர் கிளம்பியாச்சி. ஒன்றரை வருஷம் பெங்களூருல வேலை. ஊருக்கு அதிக நாட்கள் வர முடியாம போனதால, அப்ளிகேஷன் அம்பேல். திடீர்னு வேலை பார்த்த நிறுவனத்தில் மெட்ராஸ் (அப்போ மெட்ராஸ் தான்) போய் மூன்று மாத கோர்ஸ் ஒன்று படிக்க அறிவுறுத்தல். அது முடிச்ச உடனே வெளிநாட்டு வேலை, கம்பெனி மூலமா.

                 

வெளிநாட்டு கனவுகளோடு மெட்ராஸ் வந்தாச்சி. சில நாட்கள் தான். ஒரு நாள் சரியான ஜுரம். டாக்டர்கிட்ட போனா, “டைபாய்ட். மெட்ராஸ் தண்ணி தான் பிரச்சினை. ஊருக்கு போய் உடம்பு சரியான பிறகு மெட்ராஸ் வாங்க”. ஊருக்கு போய் பதினைந்து நாட்கள் மருத்துவம், ஓய்வு. உடம்பு சரியானது. தீபாவளி வந்தது. அசைவம் சாப்பிட்டேன். மீண்டும் டைபாய்ட்.

உள்ளூர் டாக்டர்,”ஆறு மாசம் மெட்ராஸ் பக்கம் போக வேண்டாம். உடம்பு நல்லா தேறட்டும்” சொல்லிட்டார். ஆறு மாசம்ன உடனே, வெளிநாட்டு கனவு கலைந்தது. ஓய்வு. அப்போ தான் பெங்களூரில் பார்த்த ‘அண்ணாமலை” படத்து ரஜினி கனவுல வந்து “வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்” பாட்ட, தினம் பாட ஆரம்பிச்சாரு.

சரி, ஆறு மாசம் சும்மா இருக்கறத, அண்ணாமலை (அதாங்க தொழிலதிபர்) ஆகறதுன்னு முடிவெடுத்து, தீவிரமா குதிச்சாச்சி. அவ்வளவு தான் பாஸ்போர்ட். பிளைட்டெல்லாம் மறந்து எம்-80 பறந்தது. தொழிலதிபரும் ஆயாச்சி. 1996, உள்ளாட்சித் தேர்தல். கால சூழல், அரசியல் உள்வாங்கியது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் அப்படின்னு ஓட்டம்.

2006 வரை அரசியல் பணி, கட்சிப் பணி, மாநாடுகள், தேர்தல்கள்னு பிசியானதில் பாஸ்போர்ட் மறந்தே போனது. 2006 சட்டமன்ற தேர்தல். எம்.எல்.ஏவும் ஆகியாச்சி. இந்தக் காலகட்டத்தில் தான் விமானக் கட்டணம் குறைய ஆரம்பித்தது. வெளிநாட்டில் பணிபுரியும் கல்லூரித் தோழர்கள் சுற்றிப் பார்க்க, அழைப்பு விடுத்தார்கள்.

“பாஸ்போர்ட் இல்லை” அப்படின்னு வழிந்தேன். அவ்வளவு தான், நண்பர்கள் குரூப்பா இருக்கும் போது மாட்டினேன்னா ஒரு மணி நேரத்திற்குள் பத்து தடவையாவது,”மாப்பிள்ள பாஸ்போர்ட் எடுத்தாச்சா?” அப்படின்னு கேட்டு கலாய்ப்பது அவர்களுக்கு தொழிலானது.

சென்னையில் நண்பர்கள் ஸ்ரீதர், டாக்டர்.ராஜன் சந்திக்கும் போதெல்லாம் இது தான் கேள்வி “டிக்கெட் போடவா?”. சிங்கப்பூரிலிருந்து கலைவாணன், மீனாட்சிசுந்தரமும் இதே கேள்வி. நானும் சளைக்காமல் “இந்த மாசம் எடுத்திடனும்” அப்படின்னு சொல்வேன். அவர்கள் சலித்து போய் கேட்பதையே விட்டு விட்டார்கள்.

ஏதாவது பணிகள் தொடர்ந்து இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம், இந்த எண்ணத்தில் காலம் கடந்து போனது. ஒரு முறை வெளிநாட்டுப் பயண அழைப்பை ஏற்று உறுதி செய்யலாம் என்ற நேரத்தில் ஒரு இடைத் தேர்தல் அறிவிப்பு. அவ்வளவு தான் பயணம்.

2011 குன்னம் ச.ம.உ ஆன பிறகு அழைப்புகள் அதிகமானது. காரணம் குன்னம் தொகுதியை சேர்ந்தவர்கள் அவ்வளவு பேர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். அதிலும் லப்பைகுடிகாட்டை சேர்ந்த கழகத் தோழர்கள் துபை கிளைக் கழகம் என்றே செயல்படுகிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உடன் படித்தவர்கள் நூற்றுக்கணக்கில் சிங்கப்பூரில். அழைப்புகள் தொடர்ந்தன.

ஆனா நம்ம கதைய சுருக்கமா சொல்லனும்னா, நாய்க்கு வேலை இல்லை, ஆனா நிக்க நேரமில்ல. பாஸ்போர்ட் எடுக்கவேயில்லை.

இந்த சமயத்தில் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16,17 தேதிகளில் அண்ணாமலைப் பலகலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் சாப்டர் சார்பாக Annamalai Alumni International Conference AAIC-2014 சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள சென்னை நண்பர்கள் ஏற்பாடு செய்து டிக்கெட் போட்டுவிட்டு தகவல் சொன்னார்கள். பாஸ்போர்ட் கேட்டார்கள்.

# பாஸ்போர்ட்டா அது எங்க இருக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக