பிரபலமான இடுகைகள்

வியாழன், 2 அக்டோபர், 2014

அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

உண்மையில் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அரசியலில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர். கட்சியின் கீழ்மட்ட பொறுப்பில் இருந்து வளர்ந்தவர். அரசியல், கட்சி போல் தொழிலிலும் மக்களோடு பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தவர். எனவே எந்தவிதத்திலும் மக்கள் மனம் அறிந்தவர்.

           

மக்கள் மனம் கவர்ந்ததால் தான் இப்போது மூன்றாம் முறை சட்டமன்ற உறுப்பினர். அதற்கு முன்பும் உள்ளாட்சியில் பணிபுரிந்தவர். முதல்முறை சட்டமன்ற உறுப்பினர் ஆன போதே அமைச்சர் ஆகிவிட்டவர்.

முதல்முறை அமைச்சர் ஆனவுடனே முதலமைச்சர் ஆகிவிட்டவர். தலைநகர் அரசியலின் அரிச்சுவடியை அறியும் முன்பே பல்கலைகழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு விட்டார். ஆனால் அதன் நெளிவு சுளிவுகளை அறிந்து மிக சூதானமாக நடந்துக் கொண்டார்.

தன்னை ஆளாக்கிய ஜெயலலிதாவின் மனம் கோணால், மற்றோர் பொறாமை கொள்ளாமல் தனது நாட்களை கடத்தினார். ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட்டதும் முதல்வர் பதவியிலிருந்து விலகி மீண்டும் தனது சகஜ வாழ்க்கைக்கு திரும்பினார்.

இதுவே இந்த வாய்ப்பு வேறு யாராவது ஒருவருக்கு கிடைத்திருந்தால் எங்காவது சறுக்கியிருப்பார்கள், குறைந்தபட்சம் பேச்சு, உடல்மொழி என. ஆனால் இவர் எங்கும் சிறிதளவும் பிசிறடிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவு செய்தார்.

முதலமைச்சர் மட்டுமல்ல, ஜெயலலிதா எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்க விரும்பாத நேரத்தில், அந்தப் பணியை செய்தார். அதிலும் விலகிக் கொள்ள வேண்டிய நேரத்தில் விலகினார். உட்கட்சி அரசியலில் அவர் கட்சி மாறப் போவதாக வதந்தி பரப்பப்பட்ட நேரத்திலும் அசைந்து கொடுக்காமல் உறுதியாய் நின்றுக் காட்டினார்.

கடந்த முறை எதிர்கட்சியாக பணியாற்றியப் போதும் சரி, இப்போது மீண்டும் அமைச்சர் ஆன பிறகும் சரி ஜெயலலிதாவிடம் எவ்வளவு பணிவு காட்டினாரோ, அதே அளவு மற்றவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன். கடைநிலை ஊழியர் வணக்கம் வைத்தால் கூட அலட்சியப்படுத்தாமல் பதில் வணக்கத்தை மரியாதையாக வைப்பார்.

ஜெயலலிதாவிடம் அவர் காட்டும் பணிவு உலகப் புகழ் பெற்றது. ஜெயலலிதா அவையில் இருக்கும் போது, அவர் முகக்குறிப்பறிந்து நடந்து கொள்வதாக இருந்தாலும், தன் சொந்த ஊருக்கு ஜெயலலிதா வரும் போது ஊரார் பார்த்திருக்க அவர் வேன் டயரை வணங்கி விசுவாசம் காட்டுவதாக இருக்கட்டும் அவர் தான் அதிமுகவில் நம்பர் ஒன்.

இப்படிப்பட்டவருக்கு அமைச்சராக பெயரெடுக்க வாய்ப்பு கிட்டவில்லை, ஜெ அமைச்சரவையில் அனைத்து புகழும் அவருக்கு தானே. இப்போது முதல்வராகவும் பணியாற்றி பெயரெடுக்க வாய்ப்பு கிடைக்காது. அவருக்கு எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்படாது. அனைத்து முடிவுகளும் ஷீலாபாலகிருஷ்ணனுடையதாகத் தான் இருக்கும், ஜெயலலிதா கண்ணசைவில்.

எனவே அண்ணன் ஓ.பி.எஸ்க்கு பெயரெடுக்கும் வாய்ப்பு அவரது "பணிவு" மூலம் தான். அதில் அவரை விஞ்ச யாராலும் முடியாது.

# அண்ணன் "பணிவு"செல்வத்திற்கு வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக