பிரபலமான இடுகைகள்

புதன், 15 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு வந்த தீர்ப்பு

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 45 நாட்களே ஆயிருந்தன. அது 2001 ஆம் ஆண்டு. ஜூன் 29-ம் தேதி. மாலையிலிருந்தே காவல்துறை தலைமையிடத்தில் ஒரு இனம் புரியாத பதட்டம்.

                

நேரம் ஆக, ஆக கீழ்மட்ட அதிகாரிகளுக்கு ஆணைகள் பறக்கின்றன. ஏதோ ஒரு நெருக்கடி போல தோற்றம். சென்னை மாநகரம் மெல்ல மெல்ல காவல்துறையின் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் புரியவில்லை. மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருந்தனர். இரவு வளர்ந்துக் கொண்டிருந்தது. மர்ம நாவலின் காட்சிகள் போல் திக்திக் என காவல்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஆச்சர்யாலு ரகசியமாக சி.பி.சி.ஐ.டி அலுவலகம் செல்கிறார். ஒரு புகார் கொடுக்கிறார். காவல்துறை தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. உடனே எப்.ஐ.ஆர் போடப்படுகிறது. மணி இரவு 9.00.

பத்து மணிக்கு மேல் எல்லா நடமாட்டங்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன. காவல்துறை உயரதிகாரிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருந்தனர். எந்த எந்த இடங்களில் காவல் பலம் அதிகரிக்கப்பட வேண்டுமென திட்டமிட்டனர்.

இரண்டு போலீஸ் படைகள் கிளம்பின. ஒன்று மயிலாப்பூர் நோக்கி விரைந்தது. மற்றொன்று கோபாலபுரம் நோக்கி விரைந்தது. விடியற்காலை மணி 1.30-ஐ தாண்டியது. அப்போது தான் சில போலீஸ் அதிகாரிகளுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.

யாரையும் அனுமதி கோராமல் வீட்டுக்குள் போலீஸ் அத்துமீறி நுழைகிறது. மாடிக்கு ஏறிச் சென்று கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் கழகத் தலைவருமான தலைவர் கலைஞர். அப்போது அவருக்கு வயது 78.

பதறி எழுகிற அவரை கைது செய்வதாக அறிவிக்கிறார்கள். என்ன வழக்கு, எதற்கு என்றெல்லாம் பதில் இல்லை. மற்றவர்களுக்கு தகவல் சொல்ல அனுமதிக்கவில்லை. அப்படியே பிடித்து தூக்குகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அப்போது ஒரு காவல்துறை அலுவலருக்கு செல்லில் அழைப்பு வருகிறது. பயந்து பயந்து பேசுகிறார் அதிகாரி. “கைது செய்து விட்டோம். உடனே கொண்டு செல்கிறோம்” என்று பதிலளிக்கிறார். பக்கத்திலிருந்தவருக்கு கண்ணை காட்டுகிறார். உடனே கலைஞரை தரதரவென இழுத்து செல்கிறார்கள்.

               

கைது காட்சியை வீடியோ பார்த்திருப்பீர்கள். செல் லைவில் இருக்கிறது. அந்த முனையில் இருப்பவர் இங்கு நடப்பதை கேட்டு ஆனந்தப்படுகிறார். கலைஞர் அலைகழிக்கப்படுகிறார். போலீஸார் எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு வழியாக அங்கு இங்கு சுற்றி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். நீதிபதியிடம் அழைத்து செல்கிறார்கள். நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞரும், காவல்துறை அதிகாரிகளும் தடுமாறுகிறார்கள்.

15 நாட்கள் ரிமாண்ட். “உங்கள் இதயம் தசையாலனதா, இரும்பாலனாதா” என்ற புகழ்ப் பெற்ற கமெண்ட் நீதிபதியிடமிருந்து.

சென்னை நகரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது 2001 ஜூன் 29. கடும் விசாரணை எல்லாம் செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2005 ஆம் ஆண்டு. ஜெயலலிதா ஆட்சி எவ்வளவோ முயற்சி செய்தும் வழக்கை ஜோடிக்க முடியவில்லை. வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

காட்சி மாறுகிறது...

2014 செப்டம்பர் 27 சனிக்கிழமை.

பூஜை புனஸ்காரம் முடிந்து ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கிளம்புகிறார். மதிய உணவுக்கு வீடு திரும்பி விடுவதாகத் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட 14 கி.மீ தூரத்தில் உள்ள விமான நிலையம். பத்தடிக்கு ஒரு போலீஸ் நின்று காவல் காக்கிறார்கள்.

முதல்வர் கான்வாய்க்காக சிக்னல்கள் நிறுத்தப்படுகின்றன். ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முதல்வரின் கான்வாய் பறக்கிறது. சிகப்பு விளக்கு சுழல முதல்வர் கார் கடக்கும் போது, காவலுக்கு நிற்கிற காவலர்கள் இயந்திரகதியில் வணக்கம் வைக்கிறார்கள், காருக்கு.

விமானநிலையம். அரசின் உயரதிகாரிகளும், காவல்துறை அலுவலர்களும் பூங்கொத்து கொடுத்து வணக்கம் வைக்கிறார்கள். வழக்கமான பெருமிதப் புன்னகையோடு எதிர்கொள்கிறார் ஜெயலலிதா. தனி விமானம் காத்திருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பிவிட்டார்.

பெங்களூரு. பார்ப்பன அக்ரஹார சிறை வளாகம். விடியற்காலை முதலே அதிமுக தொண்டர்கள் குவிந்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய ஊடகங்கள் குவிந்துக் கொண்டு இருக்கின்றன. அமைச்சர் பெருமக்கள் வரிசையில் நின்று கர்நாடக போலீஸ் அனுமதியோடு கோர்ட் வளாகத்தை நெருங்குகிறார்கள்.

தமிழகத்திலிருந்து சென்றிருந்த காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் மப்டியில் இருந்தவாறு சூழ்நிலை குறித்து மேலிடத்திற்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர். விமானநிலையத்தில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் பாதையை கர்நாடக போலீஸ் ஒருபுறமும், மப்டியில் இருந்த தமிழக போலீஸும் டிரையல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதாவின் தனிவிமானம் தரை இறங்கியது. ஹெலிக்காப்டர் ஏறினார். தரை இறங்கினார். ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தார். தேசியக் கொடி கட்டப்பட்ட காரில் ஏறினார். 23 வாகனங்கள் கொண்ட கான்வாய் கிளம்பியது. பார்ப்பன அஹ்ரகார கோர்ட் வளாகம்.

                

கோர்ட் உள் செல்கிறார் ஜெயலலிதா. நீதிபதி குன்ஹா வருகிறார். “நீங்கள் குற்றவாளி” என தீர்ப்பளிக்கிறார். முகம் இருண்டு போகிறார். ஜெயலலிதா வந்த காரில் பறந்த தேசியக் கொடி அகற்றப்படுகிறது சாதாரண கான்ஸ்டபிளால்.

மாலை தீர்ப்பின் முழு விவரத்தை படித்த நீதிபதி குன்ஹா, காவல்துறை இன்ஸ்பெக்டர் பாதுகாப்பில் ஜெயலலிதாவை குற்றவாளியாக ஒப்படைத்தார். முதல்வராக உள்ளே நுழைந்தவர், நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாக வெளியே வந்தார்.

               

காலை தமிழகக் காவல்துறையின் தலைமையதிகாரியின் சல்யூட்டை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு வந்தவர், என்.எஸ்.ஜி பாதுகாப்பு படையிடமிருந்து தள்ளுமுள்ளுக்கு பிறகு கர்நாடகக் காவல்துறையின் கடைநிலை காவலர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, 160 வாய்தா வாங்கி சாதனை படைத்த வழக்கு முடிவுக்கு வந்தது.

கலைஞர் மீது போடப்பட்ட வழக்கிற்கு காரணமான மேம்பாலங்கள் உறுதியாக நின்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தளபதி அவர்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் அவரது அடையாளமாக திகழ்கிறது.

# நீதி நின்றும் ஆடுகிறது !