பிரபலமான இடுகைகள்

திங்கள், 20 அக்டோபர், 2014

கம்பப் பெருமானே போற்றி; மங்கான் கண்டவனே போற்றி

அன்று முருகேசன் தொடர்ந்து ஒரு கோரிக்கை வைத்தார், ஒரு கோவிலுக்கு வந்து அன்னதானத்தை துவங்கி வைக்க வேண்டுமென. நானும் மறுத்து பார்த்து, ஒரு கட்டத்தில் ஒப்புக் கொண்டேன். 

அரியலூர் நகர கழக செயலாளர், நகர் மன்றத் தலைவர் முருகேசன் எங்கள் மாவட்டத்து பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன். எப்போதும் நெற்றியில் குங்குமம் பிரகாசிக்க இருப்பார். 

               

அவர் அழைத்தது கல்லங்குறிச்சி கோவிலுக்கு. இப்படித் தான் அந்தக் கோவில் வெகுஜனங்களால் அழைக்கப்படும். இன்னும் பரம்பரை ஆதினகர்த்தர்களால் நிர்வகிக்கப்படுவது.

அந்த ஆதினகர்த்தர் ராமச்சந்திரன் பலமுறை அழைத்தும், “வருகிறேன்” என்பதோடு இருந்தேன். கடந்த முறை ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, ஒரு ச.ம.உறுப்பினர்கள் குழுவில் சென்று வெளியோடு வந்து விட்டேன்.

கோவில் கூடாது என்பதல்ல, எளிய மக்களின் சிறுதெய்வ கோவில்களுக்கு அவர்கள் அழைபின் பேரில் செல்வது உண்டு. திணிக்கப்படும் தெய்வங்களின் கோவில்களை விபரம் தெரிந்த பிறகு தவிர்த்து விடுவது வழக்கம்.

ஆனால் சிறுவயதில் சென்ற நினைவு பஞ்சு மிட்டாய் இனிப்பாக மனதில் நிறைந்திருக்கிறது. ஏப்ரல் மாதங்களில் அங்கு தேர் திருவிழா மிகப்பிரபலம். அப்போது இரவுகளில் திண்டுக்கல் “அங்கிங்கு புகையிலை” குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா செம ஹிட். கூட்டம் திமிரும்.

அப்போது அரியலூரில் இருந்து ஐந்து, ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று பங்கேற்பது மக்கள் வழக்கம். இப்போது அரசின் ஸ்பெஷல் பஸ் டிரிப் உண்டு. இப்போதும் கூட்டம் தொடர்கிறது. ஏழை மக்கள் கூடி மகிழும் கோவில்.

கோவிலுக்கு போனோம். அன்னதானத்தை தொடங்கி வைத்தோம். தரிசனத்திற்கு வந்த ஏழை மக்கள் வந்து உணவருந்தினர். கோவில் நிர்வாகத்தார் வந்து வரவேற்றனர். தரிசிக்க அழைத்தனர். எங்கும் கூட்டம். மாடுகள், மக்களால் தானமாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

சரி என்று உள்ளே சென்றேன். வித்தியாச அனுபவம். கர்ப்பகிரகத்திற்கு அழைத்து சென்றனர். உள்ளே நுழையும் போதே “கம்பப் பெருமானே போற்றி; மங்கான் கண்டவனே போற்றி” என தமிழில் அர்ச்சனை. பூணூல் இல்லா பூசாரி.

தீபாரதனை காட்டினர். விக்கிரகத்தை உற்று பார்த்தேன், உருவம் இல்லை. கண்களை விரித்துப் பார்த்தேன். நாமம் தெரிந்தது, ஆனால் உருவம் இல்லை. தீர்த்தம், துளசி கொடுத்தனர். பின்புறம் அழைத்து சென்றனர்.

ஒரு கம்ப உருவமே தெரிந்தது. பூசாரியாரை பார்த்தேன். “ஆமாம், இங்கு பெருமாள் கம்ப உருவில் தான் இருக்கிறார்” என்றார். அடுத்த அடி எடுத்து வைத்தால் சிறு கற்சிலைகள் இரண்டு. பார்த்தேன். “இந்தக் கோவிலை எடுப்பித்த மங்கான் படையாட்சி மற்றும் அவர் மனைவி சிலைகள் இவை” என்றார்.

மங்கான் படையாட்சியால் 1751-ல் கட்டப்பட்ட கோவில் என வரலாறு தெரிவிக்கிறது. சோழர் கால கோவில்களின் வழியில். ஸ்தல விருடசத்தை காட்டினர். நானூறு வயதான மகாலிங்க மரம், இன்னும் உயிரோடு.

கோவில் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பெருந்தலைவர் காமராஜர், சி.சுப்ரமணியன், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என மூத்தத் தலைவர்கள் கோவிலுக்கும், கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிக்கும் வருகை தந்த போது எடுத்தப் புகைப்படங்கள் நிறைந்திருந்தன.

மடப்பள்ளியிலிருந்து புளியோதரை வந்தது. நல்ல ருசி. வெளியில் வந்தோம். நல்ல மழை. மக்கள் உணவருந்தி கிளம்பிக் கொண்டிருந்தனர். உறவினர் ஒருவர் மொட்டையடித்து அமர்ந்திருந்தார். “வேண்டுதல்” என்றார்.

முக்கியமான செய்தி. எங்கள் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு, மாமன்னன் “ராஜேந்திரன்” பெயருக்கு பிறகு அதிகம் வைக்கப்படும் பெயர் “கலியபெருமாள்”. "கலியுக வரதராஜப் பெருமாள்" என்பதன் மருவு தான் இது. அவர் தான் இந்தக் கம்பப் பெருமாள்.

உள்ளிருந்து அர்ச்சனைக் குரல் தமிழில் வந்துக் கொண்டிருந்தது...

# ஏழைப் பங்காளா போற்றி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக