பிரபலமான இடுகைகள்

திங்கள், 20 அக்டோபர், 2014

மூன்றும் முத்தான நிகழ்ச்சிகள்

கடந்த மாதத்தில் ஒரு நாளில் நடந்த மூன்று நிகழ்ச்சிகள் கவனிக்கத் தக்கவையாக அமைந்தன.

***********************************************

பெரம்பலூர் அண்ணன் செல்வநாயகம் அவர்களது மகன் டாக்டர்.வளவன் திருமணம். அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாக நடந்தது. மங்கல நாணை எடுத்துக் கொடுக்கும் போது தான் கவனித்தேன், வித்தியாசமாக இருந்தது.

வழக்கமான தாலி வடிவில் இல்லாமல் இதய வடிவில் டாலர். அதில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் இனிஷியல் பொறிக்கப்பட்டிருந்தது. அடிமைச் சின்னமாக இல்லாமல், அடையாள சின்னமாக அமைத்ததற்கு அண்ணன் செல்வநாயகத்திடம் மகிழ்ச்சி தெரிவித்தேன்.

*************************************************

பூவாணிப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகோதரர் பி.கே.கண்ணன் புதிய இல்லம் கட்டித் திறப்புவிழா மேற்கொண்டார். மதியம் அவரது மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா.

அந்த இடைவெளியை சிறப்பான முறையில் ஒரு பட்டிமன்றத்தைக் கொண்டு நிரப்பினார். “குடும்ப மகிழ்ச்சிக்கு துணையிருப்பது உறவுகளா? சடங்குகளா?” என்ற தலைப்பு. கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்க, கருத்து செறிவானப் பட்டிமன்றமாக அமைந்தது.

நடுவர் உட்பட பங்கேற்ற ஏழு பேரில் ஆறு பேர் பெண்கள். நடுவர் சென்னை செல்லம்மாள் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் விமலா அண்ணாதுரை. கிராமத்து மக்கள் கலையாமல் அமர்ந்து கேட்டனர். பயனுள்ள நிகழ்ச்சி. தன் குடும்ப நிகழ்ச்சி, மற்றோருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நினைப்பது வாழ்த்துக்குறியது.

*****************************************************

கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி அவர்களது மகள் டாக்டர் கோப்பெருந்தேவியின் திருமண நாள் உறுதி செய்யும் நிகழ்ச்சி. புரோகிதர் இல்லாத நிகழ்ச்சி. முழுதும் தமிழ் முறைப்படி நடந்தது. மணமகன் தந்தையும், மணமகள் தந்தையும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து பேசினார்கள்.

மணமகனும் மணமகளும் திருமணம் செய்து கொள்ள உறுதி கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அண்ணன் ஆ.ராசா உள்ளிட்ட எங்களை மேடைக்கு அழைத்து தினத்தந்தி வெளியீடான “ இலங்கை தமிழர் வரலாறு“ புத்தகம் வழங்கப்பட்டது. புத்தகமாக வழங்கியது சிறப்பு.

மணமகனின் தந்தை உரையாற்றும் போது, சொன்னது தான் ஹைலைட். “மற்ற இடங்களில் பெண் பார்க்கும் போது, நாங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. பெருநற்கிள்ளி அவர்களிடம் பேசிய போது, “என் மகளுக்கு ஜாதகம் கிடையாது” என்று அவர் சொன்னது தான் உடனே சம்மதிக்க வைத்தது.”

அண்ணன் பெருநற்கிள்ளி பெரியாரின் கொள்கைகளை பேசுவது மாத்திரமில்லாமல் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துபவர். நிகழ்ச்சி அழைப்பிதழில் மனைவி பெயரை முதலில் போட்டு தன் பெயரை பின்னால் அச்சிட்டார். அய்யா பெரியார் படம் தாங்கிய அழைப்பிதழ்.

அதே போல ஜாதகம் எழுதாமலே, மகளுக்கு ஒத்தக் கருத்துள்ள இல்லத்தில் மணம் நிச்சயித்து, தனது கொள்கையை நிலை நிறுத்திவிட்டார்.

# மனதில் நிற்கும் நிகழ்வுகள், நடைமுறைப்படுத்தவும் தேவையானவை !