பிரபலமான இடுகைகள்

சனி, 13 டிசம்பர், 2014

மணமகளின் உரிமை முழக்கம் !

அது சுயமரியாதைத் திருமணம். மணவிழாத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அய்யா இராசகிரி தங்கராசு அவர்கள். அவர் உறுதிமொழியை சொல்ல, சொல்ல மணமகள் கோப்பெருந்தேவி முதலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

                       

“மணமகன் என்னிடத்தில் என்ன உரிமையை எதிர்பார்க்கிறாரோ, அதே உரிமையை அவரிடம் எதிபார்க்க எனக்கும் உரிமை உண்டு”. இந்த வரியை சொல்லும் போது, மணமகள் ஒரு சின்ன இடைவெளி கொடுத்து “எனக்கும் உரிமை உண்டு” என்பதை அழுத்தமாக சொன்னார்.

லேசான புன்னகையோடு மீண்டும் தொடர்ந்தார்,”இந்த ஒப்பந்தத்தின் பேரில் நான் ரவிக்குமார் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்கிறேன்”.

மணமக்கள் இருவரும் டாக்டர்கள். மணமகன் ரவிக்குமார் M.D(குழந்தை நலம்). மணமகள் கோப்பெருந்தேவி M.B.B.S முடித்து M.E.M படிக்கிறார் (அவசர சிகிச்சை).

ஒரு காலத்தில் திருமணம் ஆன பிறகும், கணவர் பெயரை சொல்ல மனைவியர் தயங்கியது உண்டு. இன்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு சமத்துவம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது. காரணம் பெரியார். இருந்தாலும் மைக் முன்னால் வந்து நின்று விட்டால், மணமகள் மணமகன் பெயரை சொல்ல இன்னும் தயங்குகின்றனர்.

ஆனால் இங்கு கோப்பெருந்தேவிக்கு அந்த தயக்கம் இல்லை. அதைத் தாண்டி அழுத்தம் இருந்தது. காரணம், அவர் பெரியாரின் பெயர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட்டவர். தலைமைக் கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் தன் மகளை அப்படி வளர்த்திருக்கிறார்.

அண்ணன் பெருநற்கிள்ளி குடும்பமே பெரியாரின் வழிவந்தவர்கள். தமிழ் உணர்வாளர்கள். அவரது தந்தையார் ஆசிரியர் அரிகோவிந்தன் தன் பிள்ளைகளுக்கு இட்ட பெயர்களை பார்த்தாலே தெரியும். அன்பினுருவன், எழிலோவியன், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி, அசோகன், இளையகுமார். இன்றும் அந்தக் குடும்பத்தில் நல்ல தமிழ் பெயர்கள் தொடர்கின்றன.

அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் பெரியார் திடல் மாணவர். இன்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பரப்பி வருபவர். அதனை தன் வாழ்வில் அவசியம் கடைபிடிப்பவர், அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டி வந்தாலும்.

மகளுக்கு காது குத்தாமலே விட்டுவிட்டார் அண்ணன் பெருநற்கிள்ளி, கொள்கையால். திருமணத்தன்று மணமகள் தோடு அணிந்திருக்க வேண்டுமென்று மணமகன் தாயார் விரும்ப, ஒரு வார விவாதத்திற்கு பிறகே ஒப்புக் கொண்டார். கால ஓட்டத்திற்கேற்ப சில சமரசங்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமென நான் பேசியும் வாதம் செய்தார்.

திருமணத்திற்கு அண்ணன் பெருநற்கிள்ளி துவக்க உரை ஆற்றினார். அதுவே அரை மணி நேரம் நீடித்தது. மகள் கல்யாணத்தில் இவரே அரைமணி நேரம் பேசுகிறாரே, முகூர்த்த நேரம் தாண்டுகிறதே என்று சிலர் முணுமுணுத்தனர். நான் சொன்னேன், “முகூர்த்த நேரம் தாண்ட வேண்டுமென்று தான் அண்ணன் பேசிக் கொண்டிருக்கிறார். தன் கொள்கையை நிலை நாட்டுகிறார்”.

அண்ணன் கிள்ளி அவர்கள் உரையில் குறிப்பிட்டது, “இது சுயமரியாதைத் திருமணமாக இருந்தாலும் எனக்கு மன நிறைவு இல்லை. காரணம், நான் மகள் திருமணத்தை செவ்வாய் கிழமையில் மாலை நேரத்தில் நடத்த விரும்பினேன். ஆனால் மணமகன் தாயார் ஒப்புக் கொள்ளவில்லை”

கொள்கை சமரசம் செய்ததால் ஏற்பட்ட வருத்தத்தை, மகள் திருமணத்திலேயே, பதிவு செய்யும் கொள்கையாளர் தான் அண்ணன் பெருநற்கிள்ளி.

# பெரியார் வாழ்கிறார், கொள்கையாளர் உணர்வில் !
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக