பிரபலமான இடுகைகள்

சனி, 6 டிசம்பர், 2014

வணக்கம் பாண்டியன் !

கடந்த நவம்பர் மாதம் முழுதும் பத்திரிக்கை, முகநூல் எங்கும் ஒரு முகம் கண்ணில் பட்டது. அதுவரை பார்த்திராத முகம். ஆனால் பளிச்சென்று மனதில் பதியும் முகம். தீர்க்கமானப் பார்வை. திருத்தமான மீசை. அந்த முகம் மனதில் பதிந்தது. கவனத்தை ஈர்த்தது.

                   

யார் என்று தேடியதில் திராவிடவியல் ஆராய்ச்சியாளர் என தெரிய வந்தது. பெயர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். அவர் குறித்து அறியும் ஆர்வம் அதிகமானது. தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்தார். பத்திரிக்கைகளில் அவர் குறித்த கட்டுரைகள் வந்தன.

புத்தகங்களும், கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார். எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிக்கையில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுபவர். அதிலும் குறிப்பாக திராவிட அரசியலை இந்திய அளவில் இந்தக் கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றிருக்கிறார்.

பெரியார் கொள்கைகளை சுவாசிப்பவர். ஈழ ஆதரவுக் கருத்துகளை முக்கிய வெளிகளுக்கு கொண்டு சென்றவர். திரைப்படங்களை ஆய்ந்து அதன் அரசியலை வெளிக் கொணர்ந்தவர். எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டு, அரசியல் வெற்றியை ஈட்டியது என்று ஆராய்ந்து புத்தகம் எழுதியுள்ளார்.

                    

டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அரசியல் பிண்ணனி வாய்ந்தது. சூடான அரசியல் களமாகவும் விளங்குவது. அங்கு தமிழகத்தின் குரலாக ஒலித்திருக்கிறார். அதைத் தாண்டி அங்கு ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, காஷ்மீர், வடகிழக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியிருக்கிறார்.

இவருக்கு  “காட்சிப்பிழை” இதழ் நினைவரங்கம் நடத்தும் செய்தியை பார்த்தேன். ஊருக்கு அவசரமாக பயணிக்க வேண்டி இருந்தாலும், சிறிது நேரம் ஒத்திவைத்து பங்குக் கொண்டேன். தவற விடாமல் இருந்தேனே என்று ஆறுதல் அடைந்தேன். விட்டிருந்தால், பெரும் ஆளுமையின் புகழ்களை கேட்க தவறியிருப்பேன்.

                  

எஸ்.வி.ராஜதுரை, விடுதலை ராஜேந்திரன், நீதியரசர் சந்துரு, அ.மார்க்ஸ், புனித பாண்டியன், சுபகுணராஜன் என்று உணர்வாளர்களின் நினைவுரைகள் கேட்டோரை செதுக்கின. பாண்டியனின் மாணவர்கள் இருவரும், சகப் பேராசிரியர் ஒருவரும் வந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்த முகமறியா அறிஞருக்காக 500 பேருக்கான அரங்கம் நிறைந்திருந்தது, பெரிய விளம்பரம் கிடையாது. சென்னையில் இந்தக் கூட்டம் கூடியது அவரது உழைப்பால்.

பாண்டியனின் மனைவி, சித்தப்பா, தங்கை ஆகியோர் அவர் வாழ்வை நம் முன் நிறுத்தினர். அவரது மனைவி ஆனந்தி “கடைசியாக பாண்டியனோடு நானும், மகளும் சந்தித்த போது உரையாடியது அம்பேத்கர்-காந்தி குறித்த உரையாடல். மகளின் கட்டுரைக்கு கருத்து கொடுத்தார். நாங்கள் சென்னையில் இருக்க, அவர் டெல்லியில் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் தான் பணிபுரிந்து மறைந்தார் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே” என்ற போது எல்லோர் கண்களிலும் நீர்த் துளிகள்.

ஒவ்வொருவருடைய நினைவுரையும் மனதில் நிற்கக் கூடியவை.

விடுதலை ராஜேந்திரன் சொன்னது உச்சம். “தன் கொள்கைக்காக எந்த அதிகாரத்தையும் எதிர்க்கக் கூடியவர் பாண்டியன். சமீபத்தில் மத்திய மோடி அரசு ஹிந்தி திணிப்பிற்காக அறிவிப்பு கொடுத்தது. மறுநாள் காலை பாண்டியன், டெல்லியில் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது துறை முகப்பில் மாட்டியிருந்த பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்திருக்கிறார். பாண்டியன் இறந்த அன்று, அவரது மாணவர்கள் அந்த வளாகத்தில் இருந்த பல பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்திருக்கிறார்கள்”

“எப்போது போன் செய்தாலும் பாண்டியன் வணக்கம் சொல்ல மாட்டார். அவர் பழக்கம் அப்படி. நேராக, ராஜேந்திரன் என்று அழைத்து செய்தியை சொல்லுவார். பிறகு எனக்கும் அப்படியே பழக்கமாகி விட்டது. இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன். ‘வணக்கம் பாண்டியன்’” என்று விடுதலை ராஜேந்திரன் முடித்த போது சபை அமைதியில் மூழ்கியது.

எம்.எஸ்.எஸ். பாண்டியனின் திறமைகளையும், பெருமைகளையும் அறிந்தபிறகு எனக்கும் சொல்லத் தோன்றுகிறது, அந்த முகமறியாப் பெருமகன் பாண்டியனிடம்

# வணக்கம் பாண்டியன். உங்கள் புகழ் நிலைக்கும் !