பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள்....

நான் அப்போது நான்கு மாதக் குழந்தையாக இருந்திருப்பேன். அப்போது கிலுகிலுப்பையை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்திருப்பேன். எனக்கு அன்றைய நாட்டு நடப்பு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

                

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த ஆண்டு. கழகம் என்ன செய்யப் போகிறது என்று, இன்று போல அன்றும் பத்திரிக்கைகள் ஆருடம் எழுதிக் கொண்டிருந்த நேரம். அண்ணா வகித்த முதல்வர் பதவி தலைவர் கலைஞரை தேடி வருகிறது.

அப்போது கழகத்தின் நான்காவது பொதுக்குழு கூடியது. தலைவர் கலைஞர், கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் முறை. அப்போது யாருக்கும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், இந்தத் தலைவர் பெரும் சாதனைகளை படைக்கப் போகிறார் என்று.

அதற்கு பிறகு, இரண்டு முறை கழகத்தை பிளக்க, சிதைக்க முயற்சி நடந்தது. நெருக்கடி மிசா காலத்தில் கழகத்தை கரைத்து விட ஆன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தாண்டி இன்றும் கழகத்தை வலுவோடு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

பதிமூன்று ஆண்டு காலம் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி. வனவாசம் போன்ற எதிர்கட்சி பயணம். பல வித நெருக்கடிகள். அத்தனை சோதனைகளையும் தகர்த்து, மீண்டும் 1989-ல் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்.

ஒன்றரை ஆண்டு கால ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜிவ்காந்தி கொலை பழியை கழகத்தின் மீது சுமத்தி, வரலாறு காணாத தோல்வியை ஏற்படுத்தினார்கள். அந்தப் பழியையும் துடைத்து எறிந்து, மீண்டும் அரியணை ஏறினார்.
விபரம் தெரியும் வயது வரை தந்தையின் தலைவர், நமக்கும் தலைவர் என்று நேசித்து வந்தேன். விபரம் தெரிய ஆரம்பித்த பிறகு, அவரது இந்தக் கடும் பயணத்தை உணர்ந்து பிரமிக்க ஆரம்பித்தேன். அவருக்கு வந்த சோதனைகள் வேறு மனிதனுக்கு வந்திருந்தால், நூறு முறை இதயம் நின்றிருக்கும்.

2000-ல் நடைபெற்ற பதினோராவது கழக அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிட்டு மாவட்ட செயலாளராகி, அந்தப் பொதுக்குழுவில் தலைவர் கலைஞர் எட்டாவது முறையாக தலைவரானதை நேரடியாக பார்க்கின்ற வாய்ப்பை பெற்றேன்.

இப்போது பதினான்காவது கழக அமைப்புத் தேர்தல் முடிந்து, இன்று (09.01.2015) நடைபெற்ற பொதுக்குழுவில் பதினோராவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைஞர். இன்றும் பிரமிப்பு குறையாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆட்சி மாற்றங்கள், காட்சி மாற்றங்கள் எதற்கும் களைத்துப் போகாமல், மாரத்தான் பந்தயத்தில் ஓடுகிற வீரனைப் போல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

பலர் வாழ்வும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். சிலர் வரலாற்றை படித்தும், ரசித்தும் வாழ்கிறார்கள். சிலருக்கே வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாகின்ற வாய்ப்பு கிடைக்கும். மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள். அந்த மிகச் சிலரில் ஒருவர் தலைவர் கலைஞர்.

# வாழும் வரலாறு தலைவர் கலைஞர் வாழ்க !