பிரபலமான இடுகைகள்

சனி, 10 ஜனவரி, 2015

காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

தளபதி மு.க.ஸ்டாலின் என்றால் இன்று நாடறியும். அது தலைவர் கலைஞரின் மகனாக அறியப்பட்ட நேரம். ஆனால் அவர் அப்படி நடந்துக் கொள்ளவில்லை. கழகத்தின் தொண்டனாகவே நடந்து கொண்டார். பள்ளிப் பிராயத்திலேயே கழக ஈடுபாடு.

                       

பேரறிஞர் அண்ணாவை அழைத்து கழகப் பிரச்சார நாடகம் நடத்த நாள் கேட்டு, நடத்துகிறார். பேராசியர் அன்பழகன் அவர்களை அழைத்து வந்து, தன் வயதை ஒத்த  மாணவர்களை ஒருங்கிணைத்து “இளைஞர் திமுக” என்ற அமைப்பை துவங்குகிறார்.

இந்தப் புகைப்படம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தப் புகைப்படம். பதினைந்து வயது இளைஞராக காட்சியளிக்கும் தளபதி. அப்போது இந்த அணி பெரும் உருவெடுக்கும், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் என்று எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை.

பெரும் திட்டம் தீட்டும் வயதும் அல்ல அது. மற்ற பிள்ளைகள் விளையாட்டில் நாட்டம் கொள்ளும் நேரத்தில், இவர் கொள்கையில் நாட்டம் கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, 1980-ல், இளைஞரணி ஒரு  அமைப்பாக உருவெடுத்தது, அவரது உழைப்பால்.

மற்ற தலைவர்கள் வீட்டுப் பிள்ளை போல எதுவும் இவருக்கு எளிதாக வாய்த்திடவில்லை, கடும் உழைப்பு இருந்தும். அதற்காக அவர் கிஞ்சித்தும் துவள்வதும் இல்லை. தன் உழைப்பை நிறுத்துவதுமில்லை.

1975-ல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து, சித்ரவரை செய்து அவரது தியாக உணர்விற்கு சான்றிதழ் கொடுத்தது இந்திரா அரசு.

1989-ல் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர், அவரது உழைப்பிற்கு அதுவே தாமதம் தான். 1996-ல் கழகம் ஆட்சி அமைத்த போது, அமைச்சர் ஆவார் என்று நாடே ஆவலாக பார்த்தபோது, தலைவர் கலைஞர் தவிர்த்தார், தன் மகன் என்பதால்.

ஆனாலும் அசரவில்லை தளபதி அவர்கள். சென்னை மேயரானார். சிங்கார சென்னையாக செதுக்கினார். அவர் கட்டிய மேம்பாலங்கள் தான், இன்றும் சென்னை சீராக இயங்க காரணம். தன் முத்திரையை பதித்து, 2001-ல் கழகம் ஆட்சியை இழந்த போதும், மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா, இவருக்காக ஒரு சட்டத்தையே கொண்டு வந்து மேயர் பதவியை பறித்தார். ஆனாலும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தன் பணி தொடர்ந்தார். இன்னொருபுறம் கழகத்தின் இளைஞரணி செயலாளராக பணியாற்றியவர், துணை பொதுச் செயலாளரானார்.

எல்லாமே படிப்படியான வளர்ச்சி, உயர்வு. ஆனாலும் அவர் உழைப்புக்கானவை அல்ல. தலைவரின் மகன் என்பதால் தூக்கி விடப்பட்டார் என விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதனாலேயே தாமதம். கடந்த கழகத் தேர்தலில், பொருளாளர் ஆனார். இந்தப் பொதுக்குழுவில் பதவி உயர்வு பெறுவாரா என பத்திரிக்கைகள் பட்டிமன்றங்கள் நடத்தின.

இந்தியாவின் மற்ற தலைவர்களின் மகன்கள் முதல்வராகி விட்டனர் என எழுதிப் பார்த்தார்கள். வதந்தீ’களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைத்தார் தள்பதி. இரண்டாவது முறையாக மீண்டும் பொருளாளர் பொறுப்பு. தலைவர் கலைஞர் முத்திரை பதித்த அதே பொறுப்பு. இவரும் முத்திரை பதித்தார்.

தலைவர் கலைஞரே சொன்னது போல, தளபதி என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. தனக்கான காலத்திற்காக இவர் காத்திருக்கவில்லை, உழைத்துக் கொண்டே இருக்கிறார்.


# காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக