பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015

எத்தன புத்தகம் வாங்கியிருக்கீங்க ?

ருசிக்கறமோ இல்லையோ, பொங்கல் அன்னைக்கு கரும்பு வச்சு படைக்கினும்கிறது எப்படி மரபாயிடுச்சோ, அது போல வாங்கற புத்தகத்த படிக்கிறமோ, இல்லையோ புத்தகக்காட்சி அறிவிப்பு வந்தாலே கால் அரிக்க ஆரம்பிச்சிடுது, போகனும்னு.

         


போன வருசம் வாங்கின புத்தகத்துல பாதி தூங்குது, இந்த வருசம் தேவையா என்ற எண்ணமும் இருந்தது. இருந்தாலும், கண்ட்ரோல் பண்ண முடியல. போறதுன்னு முடிவு பண்ணியாச்சி. போன வருசம் மாதிரி அவஸ்தை படக் கூடாதுன்னு திட்டம் போட்டேன்.

இரண்டு நாட்கள் போறது, ஒரு நாளைக்கு பாதிப் பகுதி, அடுத்த நாள் மீதிப் பகுதின்னு திட்டம். பையன கூப்பிட்டேன். உங்கக்கூட அவ்வளவு நேரம் சுத்த முடியாதுன்னு மனசுல வச்சிக்கிட்டு, “பரிட்சை இருக்கு. நேரம் இல்லை. எனக்கு பாடம் சம்பந்தமா ரெண்டு புத்தகம்னு ஆர்டர் போட்டார்.

“பையன் பரிட்சையால நானும் வரல, அப்படின்னு துணைவியார் அவங்க துறை சம்பந்தப்பட்ட மருத்துவப் புத்தகம் கேட்டு ரெக்வஸ்ட்.

         

முதல் சுற்று போனேன். முதல் வரிசையில கூட்டம் நெரிஞ்சுது. சரின்னு நேரா கடைசி வரிசைக்கு போய் ஆரம்பிச்சேன். மனசக் கட்டுபடுத்திக்கிட்டு பையன் புத்தகத்தை தேடினேன். அப்படிப் பட்ட புத்தகமே கண்ணுல படல. கண்ணுல பட்டதெல்லாம், நம்ம சம்பந்தப்பட்டதாவே இருந்தது.

அரை மணி நேரம் தான். முடியல, ஒரு அரங்குல நுழைஞ்சேன். எதப் பார்த்தாலும் வாங்கனும்னு தோனுச்சி. காவிரி, கச்சத்தீவு சம்பந்தமான சின்ன சின்ன புத்தகமா வாங்கினேன். மறுபடியும் மனச ஒரு நிலைப் படுத்தி துணைவியாருக்கான புத்தகம் தேடினேன். கிடைக்கல.

அடுத்த அரங்கு. தொ.பரமசிவன் புத்தகங்கள் இருந்தன. ரெண்டு செட் வாங்கினேன். அப்புறம் அவ்வளவு தான். பெரிய புத்தகங்களா வாங்கக் கூடாது, சின்னப் புத்தகங்களா மட்டும் வாங்கறதுன்னு ஆரம்பிச்சேன். புத்தகப் பைகள் விரல்கள அறுக்க ஆரம்பிச்சிது.

சரி, மீதி அடுத்த நாள்ன்னு கிளம்பினேன். விட்ட இடத்த ஞாபகம் வச்சிக்கறதுக்காக அந்த அரங்கப் பார்த்தேன். “கதவை திறகுரூப். ஆமாங்க, நித்தியானந்தாவுக்கு ஒரு அரங்கு. என்ன கொடும சார் இது?

ஒரு செட் ‘தொ.ப புத்தகங்களை அண்ணன் ஆ.ராசா அவர்களிடம் கொடுத்தேன். புத்தகங்களைப் பார்த்தவர், இவரு, சுப.வீ போன்றவர்கள் எழுதுவதால் தான் இந்துத்துவா அமைப்புகளோட உண்மை ரூபம் வெளியில் வருதுன்னார்.

அடுத்த நாள் நித்திக்கு எதிர் அரங்கிலிருந்து துவங்கினேன். அப்போ ஒரு வி.ஐ.பியோட கூட இருக்கறவரு கிராஸ் பன்னினாரு. கொஞ்சம் தலைமறைவானேன். காரணம் நான் இருந்த கோலம் அப்படி. பேண்ட், கலர் சர்ட். தோளில் ஷோல்டர் பேக், புத்தகப்பைகள் கைய அறுத்த அனுபவத்தால.

இரண்டாம் சுற்றும் இனிதே முடிவுற்றது. ஷோல்டர் பேக் தோள் கனக்க ஆரம்பித்தது. வீட்டுக்கு வந்தேன். மகன் கேட்டார், என்னப்பா, என் புத்தகம் வாங்கினீங்களா?. “இல்லப்பா. நீ சொன்ன பப்ளிகேஷன தவிர மீதி எல்லாம் இருந்துச்சு, நீ சொன்னது மட்டும் இல்ல. என்றேன்.

“அட போங்கப்பா. சரி, உங்களுக்கு எத்தன புத்தகம் வாங்கியிருக்கீங்க?”. “ஒரு பத்து இருக்கும்பா. எண்ணிப் பார்த்தார், இது தான் பத்தா? முப்பது புத்தகம் இருக்கும்மா. “ஹி, ஹி. சரி இந்தக் காமிக்ஸ் படிப்பா என்று கொடுத்தேன். என் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் காமிக்ஸ் ஹீரோ “இரும்புக்கை மாயாவி”. ஆசையாய் வாங்கியிருந்தேன்.

“இது காமிக்ஸு? காமெடி பண்ணாதீங்கப்பா. தலைமுறை இடைவெளி. துணைவியாரின் மருத்துவத் துறை புத்தகமும் கிடைக்கவில்லை. சமாளிக்க வாங்கியிருந்த மருத்துவர் கு.சிவராமனின் “ஆறாம் தினையை பெருமிதமாகக் கொடுத்தேன்.

“உன் புத்தகமும் கிடைக்கல. உனக்கு புடிச்ச புத்தகம் இந்தாம்மா என்றேன். ஆவலாய் வாங்கிப் பார்த்தவர்,ஆஹா. இது போன மாசமே வாங்கிட்டனே என்றார். அடுத்த பல்பு. அந்த காமிக்ஸ படிச்சிட்டு அவர் மகிழ்ந்தது, கொஞ்சம் ஆறுதல். இரும்புக்கை மாயாவி தலைமுறை.

அந்த வி.ஐ.பி கூட வர்றவரு பத்தி சொன்னேனே. அந்த வி.ஐ.பி பற்றி நினைச்சிக்கிட்டே புத்தகக் காட்சிய விட்டு வெளியே வந்தேன். அங்கே அவரது கார். ஓட்டுனர்கிட்ட போய் “அண்ணன் வந்துருக்காங்களா?ன்னு கேட்டேன். அவர் என்னை மேலும் கீழூம் பார்த்துட்டு, “நீங்க? அப்படின்னாரு.

“நான் சிவசங்கர்.... எம்.எல்.ஏ... என்று இழுத்தேன். படக்குன்னு சீட்ட விட்டு கீழ இறங்கியவர், “அண்ணே நீங்க தானா அது. அண்ணன் வந்திருங்காங்க என்று மீண்டும் ஒரு முறை மேலும் கீழுமாகப் பார்த்தார். “யாருக்கும் தெரிய வேண்டாம்னு இந்த டிரெஸ். அண்ணன் என் கண்ணில் படல என்றேன்.

சுதாரித்து கேட்டேன், அண்ணன் வேட்டி, சட்டைல வந்திருக்காங்களா?. இப்போ அவர் சிரித்தார். “இல்ல. அண்ணன் பேண்ட் சர்ட்ல தான் வந்திருக்காங்க.

“ஆஹா, அண்ணனோட ஒரு செல்பி எடுத்துடுவோம்னு மணி பார்த்தேன். ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. முத்துநகர் விரைவு ரயிலை பிடிக்க வேண்டும். ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். மனச தேத்திக்கிட்டு கிளம்பினேன்.

அந்த வி.ஐ.பி.... அவரும் ஒரு புத்தகக் காதலர்.

முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம்.தென்னரசு. “அண்ணே, ரகசியத்த வெளியிட்டுட்டேன்னு கோவிச்சுக்காதீங்க.


# சரி, நீங்க எல்லாம் போனீங்களா, இல்லையா ?