பிரபலமான இடுகைகள்

திங்கள், 9 பிப்ரவரி, 2015

போர்களமான மணல்குவாரி

அலைபேசியில் பேசிய தனவேல் "நேரில் சந்திக்க வேண்டும், மணல் குவாரி போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி பெறுவதற்காக" என்றார். " நான் அவசியம் கலந்து கொள்கிறேன். அனுமதி பெறுவதற்காக அலைய வேண்டாம்." என்று நான் சொல்லிய போதும், என்னை சந்திக்க வந்தனர், தனவேல் தலைமையில் பாமக-வினரும், நன்னன் தலைமையில் திமுக-வினரும்.

    Displaying IMG-20150204-WA0040_1.jpg

பிப்ரவரி 4 போராட்ட தேதி என்று முடிவு செய்யப்பட்டது. திருவரங்கம் இடைத்தேர்தல் பணி இருப்பினும், வந்து விடுவதாக உறுதியளித்தேன். துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டனர் ஊர் பொதுமக்கள்.

அவ்வளவு தான் எனது அலைபேசி ஓயாமல் அலற ஆரம்பித்தது. முதலில் பேசியவர் கடலூர் மாவட்ட காவல்நிலையம் ஒன்றின் இன்ஸ்பெக்டர். ஒரு வகையில் தெரிந்தவர். நட்பு முறையில் பேசியவர், நான் வருவது உறுதி தானா என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்து அரியலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர். பிறகு உளவுத்துறையை சேர்ந்த ஒருவர். அடுத்து பேசிய கடலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர்,”அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஊர் மக்கள் தேவையில்லாமல் பெரிது படுத்துகிறார்கள். உங்களுக்கு இடைத்தேர்தல் பணி இருக்குமே, அதை பாருங்கள்” என்றார்.

அடுத்து பேசிய ஒரு காவல்துறை மேலதிகாரி சொன்ன ஒரு வார்த்தையால், சிறு வாக்குவாதமானது. கைதானாலும், நான் வருவது உறுதி என்று தெரிவித்தேன். மொத்தம் அய்ந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அந்த மேலதிகாரி பேசியது தான். ஆனால் மணல் அள்ளும் பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, வருவாய் துறை அதிகாரிகளோ பேசவில்லை.

இடைத்தேர்தல் பணி முடித்து 9.30க்கு கிளம்பினேன். காவல்துறை மிரட்டல் மூலம் போராட்டத்தை குலைக்க நடந்த முயற்சி, கடைசி வரை கைவிடப்படவில்லை. கைது செய்யப்படலாம் என்று தெரிவித்தனர். போராட்ட இடத்தை நான் அடையும் வரை போன் வந்த வண்ணமே இருந்தது. சன்னாசிநல்லூரை அடைந்த போது மணி 11.30.

வெள்ளாற்றின் இக்கரையில் அரியலூர் காவல்துறை, அக்கரையில் கடலூர் மாவட்டக் காவல்துறை. காத்திருந்த மக்களோ ஆயிரத்தை தொடுவர். சரிபாதி பெண்கள். அவர்கள் முகங்களை பார்த்த யாருக்குமே பாதிப்பின் விளக்கத்தை தனியாக சொல்லத் தேவை இருக்காது. அவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்.

       

ஊர் மக்கள் சார்பில் மணல் கொள்ளையால் ஏற்படும் பாதிப்பை விளக்கி பேசினார்கள். தேமுதிக சார்பில் இளைஞரணி ராஜா, மாவட்ட பொருளாளர் மணிமாறன், விசிக சார்பில் வழக்கறிஞர் செல்வநம்பி, மாவட்ட செயலாளர் அன்பானந்தம், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, கொள்கை பரப்பு அணி துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

       

முடிவில் நான் உரை ஆற்றிய பிறகு, மணல் குவாரியை நோக்கி முற்றுகையிட நடக்க ஆரம்பித்தோம். கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிலேயே ஆறு ஆரம்பித்து விடும். ஆற்றில் இறங்கினோம். ஆற்றின் மையத்தில் குவாரி. பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன்கள் இயங்குவதை பார்த்த மக்கள் ஆவேசமாயினர்.

           

          


         Displaying 20150204_123300.jpg
பெண்களும், இளைஞர்களும் ஓட ஆரம்பித்தனர். நாங்களும் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம். முன்பாக சென்றடைந்த இளைஞர்களும், பெண்களும் பொக்லைன் எந்திரத்தை சுற்றி நின்று முற்றுகையிட்டனர்.

           
போலீசார் லத்தியோடு முன்னேறுவதை பார்த்த நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். மணலில் நடந்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் உள்ளூர் மக்கள் வேகமாக சென்று விட்டனர். எங்களால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

         

போலீசார் லத்தியால் தாக்க, பெண்களிடமிருந்து அழுகுரல். இளைஞர்கள் சிதறி ஓடுவதை காண முடிந்தது. இங்கும் அங்குமாக அனைவரும் ஓடியதில் மணல் புழுதியாக பறந்தது. போர்களம் போல் தோன்றியது. நாங்கள் வேகமாக சென்று அந்த இடத்தை அடைந்தோம்.

        

ஆனால் அதற்குள் அய்ம்பது பேருக்கு மேலானோர் காவல்துறையின் கண்மூடித் தாக்குதலுக்கு உள்ளாகி விட்டனர். இருதரப்புக்கும் இடையில் நாங்கள் போய் நின்றோம். நாங்கள் போனதும் போலீசார் தாக்குதலை நிறுத்தி ஒதுங்கி நின்றுக் கொண்டனர்.

      

இந்தப் பக்கம் நின்ற பெண்கள், கோபத்தில் கடுமையாக காவல்துறையினரை பேச, போலீசார் முறைக்க, சூழ்நிலை மீண்டும் சூடாக ஆரம்பித்தது. மீண்டும் பிரச்சினையானால் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படும் நிலை. யோசித்த நான் அந்த இடத்திலேயே மணலில் உட்கார்ந்து, உடன் வந்தவர்களையும் அமர வைத்தேன்.
        
     

    
போலீசார் நடவடிக்கையை கண்டித்தும், அதற்கு தக்க பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தர்ணா போராட்டமாக அமர்ந்தோம். உச்சி வெயில். சிறிது நேரம் போராட்டத்திலே கழிந்தது. காவல்துறையினர் மிரட்டும் தோரணையில் அணிவகுத்து நின்றனர். இதற்குள் அடிபட்ட பெண்களை எங்களுக்கு முன்பு கொண்டு வந்து படுக்க வைத்தனர்.

    

பெரும்பாலும் முதியோர். நடக்கவே இயலாமல் துவண்டு போயிருந்தனர். இளைஞர்கள் முதுகைக் காட்டினர். லத்தியால் அடித்ததில் பட்டை பட்டையாக சிவந்து, வீங்கி இருந்தது. பார்க்கவே மிகப் பாவமாக இருந்தனர். 108 வரவழைக்க ஏற்பாடு செய்தோம்.

    

அவர்கள் வலியால் துடிக்க, மீண்டும் பதட்ட சூழல். அப்போது திட்டக்குடி டி.எஸ்.பி பேச விரும்புவதாக தெரிவித்தனர். சென்று கேட்டேன். “விருத்தாசலம் ஆர்.டி.ஓ வந்திருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டால் பேச தயாராக இருக்கிறார்” என்றார் டி.எஸ்.பி.

      

“முதலில் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். அதற்குள் ஏற்கனவே அழைக்கப்பட்டதால் ஒரு 108 ஊர்தி வந்த்து. அதில் சிலர் ஏற்றப்பட்டனர். அங்கே நின்ற அரசு ஜீப் ஒன்றையும் டி.எஸ்.பி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர்கள் செந்துறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

     Displaying 20150204_135111.jpg

இதற்கிடையில் ஆர்.டி.ஓ வந்தார். இளைஞர். நடந்த சம்பவத்திற்கு சங்கடப்பட்டார். அவர் காலையிலேயே பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தும், அரியலூர் மாவட்ட வருவாய் துறையினரோ, காவல் துறையினரோ அதனை எங்களிடம் தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

    

“எப்போது சொல்கிறீர்களோ, அப்போது பேசி பிரச்சினையை தீர்க்கலாம்” என்றார் ஆர்.டி.ஓ. ஊர்காரர்களை கலந்தே சொல்ல முடியும் என்று சொல்லி விட்டு, ஊர்காரர்களிடம் “என்னக் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும், எப்போது வைத்துக் கொள்ளலாம்” என்று கேட்டேன்.

    

கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து பேசி வந்தனர். “பதினைந்து நாட்கள் கழித்து பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வது. இரு தரப்பும் அங்கு ஆதாரங்களோடு வந்து, குவாரி குறித்த பிரச்சினைகள் பேசுவது” என டி.ஆர்.ஓ-விடம் பேசி தீர்மானிக்கப்பட்டது.

     

அங்கிருந்து மக்களை அழைத்துக் கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் துவங்கிய போது மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர போர் முடிவுக்கு வந்தது போல் இருந்தது.

    

ஜெயங்கொண்டம் சென்று, தளபதி அவர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு, சென்னையிலிருந்து பெரம்பலூர் வரும் தளபதி அவர்களை வரவேற்க மாவட்ட எல்லையான தொழுதூர் டோல்கேட்டிற்கு செல்ல வேண்டிய அவசரம்.

       

இருப்பினும் கரையை அடைந்த பின், மீண்டும் மக்களிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசி விட்டு கிளம்பினேன்.

     

காவல்துறையை கொண்டு மக்களை மிரட்ட நினைக்கும் அதிமுக அரசு அடிபட்டவர்கள் சிந்திய ரத்தத்திற்கும், அவர்களது பாதிப்பிற்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

# வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - திருக்குறள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக