பிரபலமான இடுகைகள்

திங்கள், 9 மார்ச், 2015

சட்டசபையில் தாதுமணல்; தாதுமணல்_ஊழல்‬ 5

தாதுமணல் பிரச்சினை குறித்து தளபதி அவர்கள் பல முறை சட்டமன்றத்தில் குரல் எழுப்ப முயன்றார்கள். அப்போதெல்லாம் சாமர்த்தியமாக சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. இந்தக் கூட்டத் தொடரிலும் 19.02.2015 அன்று, தாது மணல் பிரச்சினைக் குறித்து தளபதி அவர்கள் பேச முனைந்தார்கள்.

      

ஆளுநர் உரை மீதான விவாதக் கூட்டத் தொடரில் ‘ஜீரோ அவர்’ கிடையாது என்று மறுத்து விட்டார் சபாநாயகர். ஆளுநர் உரை மீதான விவாதத்தில், நான் உரையாற்றும் போது, இந்தப் பிரச்சினை குறித்து பேச என்னை தளபதி பணித்தார்கள்.

நான் சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஆரம்பித்து, “தாதுமணல் குறித்து Economics Times பத்திரிக்கையிலே” என்ற உடனே தொழில் துறை அமைச்சர் துள்ளி எழுந்தார். என்னை பேசவே விடவில்லை. அவராகவே “இது குறித்து சிவசங்கரால் ஆதாரம் கொடுக்க முடியுமா, சவாலுக்கு தயாரா?” என்று கொதித்தார்.

உடனே எழுந்த தளபதி அவர்கள், “இது குறித்து விவாதிக்க தயார். ககன்தீப் சிங் பேடி அறிக்கையை பெற்ற ஜெயலலிதா, ஏன் இன்னும் வெளியிடவில்லை” என்று கேட்டார்கள். உடனே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கொண்டார்.

10 பக்கத்திற்கு நீண்ட விளக்க அறிக்கையை படித்தார். அதில் இது வரை நடைபெற்ற சம்பவங்களையே தொகுத்து கூறியிருந்தார். அதில் குவாரி நடத்தும் வேறு சிலருடைய பெயரை குறிப்பிட்டாரே தவிர, வைகுண்டராஜன் பெயரை குறிப்பிடவில்லை. மிக கவனமாகத் தவிர்த்தார்.

அதே போல அறிக்கை வெளியிடாததற்கு கோர்ட் உத்தரவு என்றார். கோர்ட் என்ன சொல்லி இருக்கிறது என்றால்,” பேடி குழு ஆய்வில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்பது தான். அதாவது மற்ற மாவட்டங்களில் ஆய்வு செய்வது குறித்து தான்.

தூத்துக்குடி மாவட்ட ஆய்வு முடிந்து அரசுக்கு வந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி காட்டிக் கொண்டு பினாமி அரசு இழுத்தடிக்கிறது. இது குறித்தும் தளபதி தொடர்ந்து வினா எழுப்பினார்கள். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

மீண்டும் பேச எழுந்த நான்,” தொழில்துறை அமைச்சர் ஒரு சவால் விட்டார், இதிலே ஏதாவது நடவடிக்கை எடுக்கிறீர்களா என்று” என்றேன். அமைச்சர் குறுக்கிட்டார். சபாநாயகர் குறுக்கிட்டார்.

“அவர் சவால் விட்டதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமல்லவா?. நாங்கள் சி.பி.அய் விசாரணைக்கு தயார். அவர் தயாரா?” என்று கேட்டேன். அவரிடமிருந்து பதில் இல்லை.

அப்போது தான் தொடர்ந்து சொன்னேன்,” இருட்டிலே தூங்கிக் கொண்டிருந்த திருவரங்கத்து ரங்கநாதன் கையை தொட்டுப் பார்த்தால் தாதுமணல்.”

இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பிலிருந்து சின்ன சலசலப்பும் இல்லை. பெரிய எதிர்ப்பை எதிர்பார்த்தேன். அசைவே இல்லை. புரியவில்லையோ என மீண்டும் சொன்னேன்.

”ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் கையிலே தாதுமணல் இருக்கிறது. அதனாலே தாதுமணல் தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம்”. இப்போதும் அசைவில்லை. சபாநாயகர்,”இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லிட்டார். வேற சப்ஜெக்ட் போங்க” என்று துரத்தினார்.

சபைக்கு வெளியே வந்த உடன் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார், ”நீங்க பேசினது அவங்களுக்கு புரிஞ்சுதா, இல்லை புரியாத மாதிரி உட்கார்ந்திருந்தாங்களா?”

இன்னொருவர் கேட்டார்,”நீங்க பேசியதை வைத்திருக்கிறார்களா அல்லது அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்களா?”

மறுநாள் பார்த்தேன், பேச்சு அவைக் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. சவாலுக்கு பதில் இல்லை, குற்றச்சாட்டுக்கும் எதிர்ப்பில்லை. காரணம் அவர்கள் மடியிலே கனம்.

மிக சில கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்லட்டும். அது ஜெவோ, ஓ.பி.எஸ்ஸோ, தொழில் மந்திரியோ.

1. பேடி குழு அறிக்கை என்ன ஆனது?
2. மோனோசைட் அள்ளுவதற்கு அனுமதி கொடுத்தது யார்?
3. அந்த அனுமதி வழங்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
4. தாதுமணல் வழக்குகளில் “வழக்கம்” போல் வாய்தா வாங்குவது ஏன்?
5. வைகுண்டராஜனுக்கும், ஜெயா டிவிக்கும் என்ன தொடர்பு?
6. தாதுமணல் பிரச்சினையில் சி.பி.அய் விசாரணைக்கு தயாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக