பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

கர்வமாய் சொல்கிறேன்,"இவர் எங்கள் தலைவர் !"

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தான் எழுப்ப இருந்த, நாட்டை உலுக்கும் மிக முக்கிய பிரச்சினையை ஒரு இளைய (ஜூனியர்) எம்.எல்.ஏ-விடம் ஒப்படைக்கும் தலைவர்.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு அலைபேசியில் சொல்லியபடி தளபதி அவர்களை சந்தித்தேன். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள திமுக அலுவலகம்.

தளபதி அவர்கள், தனது பைலில் இருந்து  ஒரு ஆங்கில நாளிதழை எடுத்துத் தருகிறார்கள். தாதுமணல் குறித்த விபரங்கள்.

இரண்டு நாட்களாக இந்த முக்கிய பிரச்சினை குறித்து அரசின் விளக்கத்தை பெற தளபதி  முயன்றார்கள். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

"சங்கர், இன்றும் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்க மாட்டார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நீங்கள் பேசும் போது, தாதுமணல் குறித்து வினா எழுப்புங்கள்" என்றார்கள் தளபதி அவர்கள்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இதே அவையில் தான், தன் அமைச்சர்களை கூட பேச விடாமல், ஒரு ரூபாய் அறிவிப்பை கூட தானே வெளியிட்ட ஒரு முதலமைச்சரும் இருந்தார்.

அவையில் தாதுமணல் பிரச்சினை  குறித்து பேசினேன். அமைச்சர், முதல்வர் என என்னோடு மல்லுக்கட்ட, தளபதி எனக்கு துணையாக வாதிட்டார்கள்.

தளபதி எழுந்ததால், முதல்வர் ஓ.பி.எஸ் வியர்க்க விறுவிறுக்க ஒரு நீண்ட அறிக்கையை படித்து சமாளித்தார்.

அவை முடிந்து வெளியே,"சங்கர், கரெக்டா பிடிச்சிங்க" என்று பாராட்டினார் தளபதி .

மறுநாள் முன்னாள் அமைச்சர் கோசி.மணி அவர்களது பெயரன் திருமாவளவன் திருமணத்தை தலைமை ஏற்று நடத்த கும்பகோணம் சென்று விட்டார்.

வெள்ளிக்கிழமை , புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாதுமணல் பிரச்சினையில் விவாதம். கலந்துக் கொண்டேன். 

திங்கட்கிழமை மீண்டும் அவை. தொலைக்காட்சி விவாதத்தில் மக்கள் கருத்து அரசுக்கு எதிராக இருந்ததை கழக கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

"தளபதி அவர்களிடம் சொல்லிட்டியா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "போய் சொல்லு" என்றார்.

மூத்த எம்.எல்.ஏக்கள் சூழ தளபதி அமர்ந்திருந்தார்கள். தயங்கியபடியே ஆரம்பித்தேன்,"புதிய தலைமுறை தொலைக்காட்சியில்". இடைமறித்தார்கள் தளபதி.

"ஆமாம் சங்கர், திருச்சியில நானும் பார்த்தேன். நல்லா வாதம் வச்சீங்க. அதிமுக சார்பாக பேசியவர் பதில் சொல்ல தடுமாறினார்". தளபதி அவர்களது பாராட்டில் வானத்தைத் தொட்டேன்.

"நான் முதல் அத்தியாயத்தை எழுதினேன், இரண்டாம் அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்" என்ற அண்ணாவை கேள்விப்பட்டிருக்கிறேன்.

மாநாடுகளிலும், சட்டசபையிலும் தனது தம்பிமார்களை பேசவிட்டு, கேட்டு ரசித்து, பாராட்டும் தலைவர் கலைஞரை பார்த்திருக்கிறேன்.

தளபதி அவர்களிடம் உணர்ந்தேன்.

# கர்வமாய் சொல்கிறேன்,"இவர் எங்கள் தலைவர் !"

_எஸ்.எஸ்.சிவசங்கர்.