பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 3 மார்ச், 2015

கையை பிடித்து இழுத்த நம்பிக்கை !

காலை YMCA திடலை நோக்கி செல்லும் போதே டிராபிக். 9 மணிக்கு இறங்கி வேடிக்கை பார்த்து, பந்தல் முகப்பை அடைந்தோம்.

               

தளபதி பிறந்தநாள். காலையிலேயே தலைவர் கலைஞரிடம் ஆசி பெற்று மேடைக்கு வந்திருந்தார் தளபதி.

பார்வையாளர்கள் வரிசையை சேர்ந்தோம். வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி நின்று கொண்டிருந்தார். அவரோடு இணைந்து நின்றோம்.

மணி 9.30. "நீங்கள் வி.ஐ.பி வழியில் போயிடலாமே" என்றார் ஒன்றியம். "இல்லை. பொதுவழியில் செல்வதே என் வழக்கம்." என்றேன்.

எங்களுக்கு பின்னால் மிகப்பெரிய கூட்டம் சேர்ந்தது. வரிசை நகரக் காணோம். திடீரென பின்னால் இருந்தவர்கள் வேகமாக ஓடினார்கள் .

இன்னொரு வாயில் வழியாக நுழைந்தார்கள். "அந்த வழியில கியூ வேகமா நகரல" என்றார்கள் முன்னால் நின்றவர்கள்.

சரி, இங்கேயே நின்று விடுவோம் என்று முடிவெடுத்தோம். எங்கள் வரிசை மெல்ல நகர்ந்தது. பந்தலுக்குள் நுழைந்தோம்.

நாங்கள் நின்று வரிசை நேராக மேடையை நோக்கி சென்றது. பக்கத்து வரிசை வளைந்து, வளைந்து சென்றது.

அந்த வரிசையில் இப்போது தஞ்சை மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் கூட்டமாக வந்து நின்றார். அந்த வரிசை சற்று வேகமாக நகர்வது போல் தோன்றியது.

எங்கள் வரிசை மெல்ல்ல்ல நகர்ந்தது . மேடையில் தளபதி அவர்களை தொண்டர்கள் சந்திப்பது, பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. பார்த்து ரசித்தவாறே நின்றோம்.

எங்கள் வரிசையில் இருந்து, அந்த வரிசைக்கு சென்றவர்கள் ரொம்பவே முன்னேறி இருந்தார்கள். இப்போது எங்கள் வரிசையில் லேசான நெருக்கல் ஆரம்பித்தது.

எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த முகநூல் செயற்பாட்டாளர் அண்ணன் அருள்பிரகாசம் பாதுகாவலாக நின்று கொண்டார்.

       

மணி 11-ஐ தாண்டியது. நாங்கள் பாதி வரிசை தாண்டவில்லை . அந்த வரிசையில் அண்ணன் துரை.சந்திரசேகர் மேடையை நெருங்கிக் கொண்டிருந்தார்.

தளபதி அவர்கள் தனது பிறந்த நாள் செய்தியை வழங்கினார்கள். மார்ச் 1-ஐ அய்.நா மன்றம் அறிவித்தபடி Zero Discrimination day ஆகக் கொண்டாடுவோம. கழகத் தோழர்கள் ஒரு லட்சம் யூனிட் ரத்தம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டினார்.

      

மீண்டும் வாழ்த்து பெற ஆரம்பித்தார். வரிசை நகர ஆரம்பித்தது. அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம். கிராமியக் கலைஞர்கள் நடனமும் இடம் பெற்றது.

மணி 12.00. மெல்ல முன்னேறினோம். மேடை கண்ணில் தெரிய ஆரம்பித்தது. தளபதியை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

திருவண்ணாமலையும் மேடை ஏறிவிட்டார்கள். அந்தப்பக்கம் அண்ணன் அருள்பிரகாசம், இந்தப் பக்கம் தம்பி லூயிகதிரவன், திருமானூர் கலை என பாதுகாப்போடு நகர்ந்தேன்.

        

எங்களுக்கு ஒரு மணி நேரம் பின்னாடி அந்த வரிசையில் வந்தவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.

மணி 12.30. மேடையை நெருங்கிக் கொண்டிருந்தோம். பாதுகாப்பு வளையம் தகர்ந்தது. சட்டை கசங்க ஆரம்பித்தது.

தம்பி நொச்சிக்குளம் கருணாநிதி தடுப்பை தூக்கினான். நாங்கள் உள்ளே நுழைந்தோம். "விடு" என்றேன். கேட்கவில்லை. தலையில் தட்டினேன், விட்டான்.

மேடை பின்புலம் அருமை. தளபதி பிறந்த நாள் செய்தியாக வெளியிட்ட படம். அதில் இடம்பெற்ற வாசகங்கள். "ஓர் இனம், ஒரே ரத்தம். உங்களில் ஒருவன்".

கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை தொண்டர்கள் திரண்டிருந்தார்கள். எந்த மதம், எந்த சாதி, எந்த ஊர், என்ன வசதி எதுவும் தெரியாது.

எல்லோரும் ஓர் இனம், திராவிட இனம். எல்லோரும் ஒரே ரத்தம், தமிழ் ரத்தம். தலைவர், தளபதிக்கு உறவினர்கள். எந்த சந்தேகமும் இல்லை.

கூட்டம் தள்ளியதில், தானாக மேடையேறினேன். மணி 12.30. அட, தளபதியை நெருங்கி விட்டேன். சட்டமன்றத்தில் நெருக்க்மாக பார்க்கிற தலைவர் தான், ஆனால் இன்று சந்திப்பதில் விசேசம்.

மந்திரித்து விட்ட கோழியை போல், தளபதியை வணங்கி வேட்டியை கொடுத்தேன். விரைவாய் நகர்ந்தேன் . ஒரு "கை" என்னை இழுத்து பிடித்தது. நின்று, திரும்பிப் பார்த்தேன். அந்தக் கை நாட்டின் நம்பிக்"கை". புகைப்படத்திற்கு நின்றால் தாமதமாகும் என்று நகர்ந்தவனை, புகைப்படத்திற்காக இழுத்து நிறுத்தினார்.

           

மெய் சிலிர்ததது. எவ்வளவு எளிய மனிதர்.

# ஆம், அவர் எங்களில் ஒருவர், நம்மில் ஒருவர்  !