பிரபலமான இடுகைகள்

புதன், 18 மார்ச், 2015

வீடு திரும்பவில்லை பிள்ளை...

ஒரிரு நிமிடங்களில் பள்ளி சென்ற மகன் திரும்பி வரும் நேரம் என தாய் காத்திருந்தார். வீடு நெருங்கி விட்டது என பிள்ளை தயாராகி, புத்தகப்பையை தூக்கி தோளில் மாட்டி, வேனில் நண்பர்களுக்கு டாட்டா காட்டியிருக்கிறான். 

இவர்களை முந்திக் கொண்டான் காலன். அவனையும் முந்திக் கொன்றது அந்த லாரி. பள்ளி முடிந்து, வீடு திரும்பும் பிள்ளைகளை ஒவ்வொருவராக அவர்களிடத்தில் இறக்கி விட்டுவிட்டு, கல்லங்குறிச்சி சாலை நோக்கி சென்றிருக்கிறது வேன்.

அரியலூர் புறவழிச்சாலையை கடந்து செல்ல வேண்டும். வேன் டிரைவர் புறவழிச் சாலையில் வந்த லாரியை பார்க்காமல், சாலையை கடக்க... வழக்கமாக அந்த புறவழிச் சாலையில் லாரிகள் பறந்து தான் செல்லும்.

அப்படி வந்த சுண்ணாம்பு மண் ஏற்றிய லாரி, திடீரென குறுக்கே வந்த வேனை மோதிய வேகத்தில் பக்கத்தில் இருந்த சிறுகுளத்தில் ஓடி விழுந்திருக்கிறது வேன். கட்டுபாடில்லாத லாரி, பின்னாலேயே சென்று வேன் மீது ஏறி நின்றிருக்கிறது.

   

மக்கள் கூடி வேனில் இருந்தவர்களை காப்பாற்றும் போது தான் இரண்டு குழந்தைகளும், வேன் டிரைவரும், பள்ளி ஆயாவும் இறந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்.

  

தாய் வீட்டிலேயே காத்திருக்க, மகனோ உயிரிழந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். பக்கத்தில் நூறு மீட்டரில் செய்தி தெரியாமல் தாய்.

பள்ளி பிள்ளைகள் சென்ற வேன் விபத்து என்றவுடன் அரியலூரே அலறி போயிருக்கிறது. பள்ளிக்கு பிள்ளையை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்புடன் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் விரைந்திருக்கிறார்கள்.

அப்படி தான் ஒன்றிய கழக அவைத் தலைவர் அண்ணன் மதியும் மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அடிபட்ட பிள்ளைகளில் பேரனை தேடியவர், பிணவறைக்கு செல்ல, 5 வயது பேரனின் உயிரற்ற உடல். வாலாஜாநகர் தினகரின் 4 வயது மகளும் விபத்தில் மாண்டு போனாள்.

ஆறுதல் சொல்ல, அவர்கள் இல்லம் சென்ற போது, எங்களுக்கே ஆறுதல் சொல்ல மற்றோர் தேவைப்பட்டனர். செல்லப் பிள்ளைகளை இழந்து தவிக்கும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? இது 05.03.2015 அன்று.

கடந்த 2014-ஆம் ஆண்டு மே 29 அன்று செந்துறை சாலையில் பஸ்ஸும், லாரியும் மோதி 13 பேர் இறந்த அதிர்ச்சியே இன்னும் மறையவில்லை. அதற்குள் இந்த கொடூரம்.

அப்போதே எல்லோரும் வற்புறுத்தியது போல், மாவட்ட நிர்வாகம் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்தி இருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

சுண்ணாம்பு கல் ஏற்றிய லாரிகள், சிமெண்ட் ஏற்றிய லாரிகள் என பரபரக்கும் மாவட்ட முழுதுமுள்ள சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டும்.

லாரி டிரைவர், வேன் டிரைவர் என இருவருடைய தவறும் இந்த விபத்தில் இருந்ததாக தகவல். டிரைவர்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

# இனி அந்தப் பிஞ்கள் கண் விழிக்கப் போவதில்லை. அரசு கண் விழிக்குமா ?