பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தலைவர் இருக்கிறார் தயங்காதே !

சற்று மலைப்பாகத் தான் இருந்தது. சின்ன மாவட்டம், அதிலும் வறட்சி மாவட்டம், மூன்று ஆண்டுகளாக மழையும் இல்லை. இப்படி நெகட்டிவ் பாயிண்ட்களாக மனதில் ஓடியது.

ஆமாம், தேர்தல் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு வந்த உடன் தான் இப்படி சிந்தனை. ஆனால் தலைவர் சொல்லி விட்டாரே, இது தான் தலையாயப் பணி.

இன்னொரு புறம் தலைவர் சொல்லி விட்டார் என்பதை விட நமக்கே முக்கிய கடமை இருக்கிறதே. மக்கள் விரோத அரசாக செயல்படுகிற, ஒரு குற்றவாளிக்கு புகழ் பாடுகிற ஓ.பி.எஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை முன்னால் நிற்கிறதே.

இந்த சூழ்நிலையில் மீன்சுருட்டி இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். அண்ணன் சபாபதிமோகன் அவர்கள் சிறப்புரை. வழக்கம் போல் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அன்று காலை தான் தலைவர் அறிக்கை அளித்திருந்தார்,"இனி சால்வைக்கு பதில் தேர்தல் நிதியாக அளித்திடுங்கள்". அதையே நானும் மேடையில் அறிவித்தேன்.

சகோதரர் தன.அருள், தேர்தல் நிதி வழங்கி துவக்கி வைத்தார். அடுத்து சேட்டு வழங்கினார். நம்பிக்கை துளிர் விட்டது.

அடுத்த நாள் இரவு தா.பழூர் பொதுக்கூட்டம்.. லப்பைக்குடிகாடு பொதுக்கூட்டதில் முன்னதாக பேசி விட்டு கிளம்பினேன். 80 கி.மீ பயணம்.

ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தார். 9.30க்கு மேடை ஏறினேன். கண்ணன் ஒரு பையை பிரித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டினார்.

"முதல் தவணை தேர்தல் நிதியாக ரூபாய் 50,000/- வழங்குகிறேன்" என்று அறிவித்து கொடுத்தார். தெம்பு வந்தது. காலையிலேயே துணிச்சல் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.

அன்று காலை, அரியலூர் ஒன்றியத்தில், தளபதி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.

ஒரு பள்ளிக்கு சென்றோம். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினோம்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பினோம். தலைமை ஆசிரியரை காணோம். விடை பெற தேடினோம். மற்றொரு ஆசிரியர் தேடி சென்றார்.

ஒரு அறைக்குள் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பார்வையாளர் குறிப்பேடோ என்று பார்த்தால், ஒரு கவரோடு வந்தார். மனுவாக இருக்கும் என நினைத்து வாங்கினேன்.

கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது,"தேர்தல் நிதி". அரசு பள்ளி ஆசிரியர் கேட்காமலே நிதி தருகிறார். மாற்றம் நிச்சயம். துணிச்சல் வந்தது.

அடுத்து அவர் பெயர் எழுதியிருந்தார். அதை படித்த உடன், புது வேகம் பிறந்தது. அவர் பெயர், கருணாநிதி.

     

# நம் தலைவர் இருக்கிறார் தயங்காதே !