பிரபலமான இடுகைகள்

திங்கள், 13 ஏப்ரல், 2015

பிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் !

பதினைந்து வருடமா எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருந்த தொகுதியில் எம்.எல்.ஏ-வுக்கு நிற்கும் போதே தெரியும், கோரிக்கை நிறைய இருக்கும்னு. ஓட்டுக் கேட்க போகும் போதே, கோரிக்கைகள் குவிய ஆரம்பிச்சுது. எதிர்கட்சி எம்.எல்.ஏ-ன்னா பெரிய அளவில் வேலை நடக்காது.

அது 2006 சட்டமன்றத் தேர்தல். ஆண்டிமடம் தொகுதி. வெற்றி பெற்று ஆட்சி அமைந்து விட்டது. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளில் தான் முக்கியமாகப் பணி நடக்க வேண்டும். அமைச்சர்கள் யார்,யார்-னு பார்த்தேன். நம்பிக்கை பிறந்தது.

      

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சீனியர். சற்றே தெம்பு வந்தது. சட்டமன்றத்தில் எனக்கு முன் இருக்கை அண்ணனுடையது. மனுக்கள் கொடுக்க வசதியா போச்சு.

முதல்நாளே பிடிச்சிக்கிட்டேன். “1991-ல் இருந்து 2006 வரை மூன்று முறையா எதிர்கட்சி தொகுதியா போயிடிச்சி. நிறையக் கோரிக்கைகள் தேங்கியிருக்கு. 15 வருடமா நடக்காதத இந்த 5 வருசத்தில் நடக்கனும்னு எதிர்பார்க்கிறாங்க.

நிறைய பள்ளிகள் தரம் உயர்வுக்கு காத்திருக்கு. முடிந்த வரை செய்து கொடுக்க, அண்ணன் மனசு வைக்கனும். நிறைய மனுக்கள் இருக்கண்ணா. அப்பப்போ கொடுக்கிறேன். பார்த்துக்கங்க” என்று சில மனுக்களை முதற்கட்டமாக நீட்டினேன்.

சிரித்தபடியே தட்டிக் கொடுத்தார். “கவலைப்படாத சங்கர் பார்த்துக்கலாம்” என்றார் அண்ணன். அதற்கு முன்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அண்ணன் தென்னரசு அவர்கள் அப்போது தான் அமைச்சராகிறார். அமைச்சர் பணி புரிபடவே சில காலம் ஆகும்.

ஒரு வாரம் கடந்தது. அண்ணன் என்னை அழைத்தார், “சங்கர் உங்க மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமா இருக்கே. தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர் (அப்போது அரியலூர் மாவட்டம் அதில் அடக்கம்) மாவட்டங்கள் நிலைமை ரொம்ப மோசம். நீங்க சொன்னது சரி தான். அதுக்கு தனியா கவனம் எடுக்கனும், எடுப்போம்” என்றார்.

ஒரு நிமிடம் ஆடிப் போனேன். அமைச்சரான ஒரு வாரத்தில் வாழ்த்துக்களை பெறவும், அதிகாரிகளுடன் அறிமுகம் ஆகவுமே நேரம் போதாது. இடையில் தொகுதிக்கு வேறு சென்று வர வேண்டும். இதற்கிடையில் எப்படி இதில் கவனம் செலுத்தினார் என ஆச்சர்யம்.

பிறகு தான் தெரிந்தது. அண்ணன் "Straight to Business" என்பது.

இரண்டே மாதம் தான். பெரமபலூர் வந்தார். அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நானும் பங்கெடுத்தேன். முழு விபரங்களைக் கேட்டறிந்தார். பட்டியலிட்டுக் கொண்டார், என்னென்ன வசதிகள் தேவை, எவ்வளவுக் காலியிடங்கள் என.

அடுத்த அடுத்த அறிவிப்புகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நபார்டு திட்டத்தில் கூடுதல் கட்டிடங்கள். ஆய்வக வசதிகள். அடுத்து பள்ளி தரம் உயர்வு பட்டியல் தயாராகியது.

செந்துறை ஒன்றியத்தில் நான்கு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த கோரிக்கை அளித்திருந்தேன். இரண்டு ஊர்கள், பட்டியலில் இடம் பெற்றன. மொத்தம் நூறு பள்ளிகள் (234 தொகுதிகளுக்கு). அதில் இரண்டு (சோழன்குடிகாடு, அங்கனூர்) கிடைத்து விட்டது. மகிழ்ச்சி தான்.

ஆனால் ஊரிலோ நிலைமை சிக்கல். உயர்நிலைப்பள்ளி பெறுவதில் சோழன்குடிகாடுக்கும், மணப்பத்தூருக்கும் போட்டி. அங்கனூருக்கும், சன்னாசிநல்லூருக்கும் போட்டி. இதில் சோழன்குடிகாடும், அங்கனூரும் வந்ததில், மணப்பத்தூரிலும், சன்னாசிநல்லூரிலும் போராட்டம் துவங்கியது.

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டம், பள்ளியை இழுத்துப் பூட்டும் போராட்டம், கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், பேருந்து மறியல் என போராட்டம் உஷ்ணமாகியது.

என் நிலையோ தர்மசங்கடம். இரண்டு பள்ளிகள் கிடைத்ததே அதிகம். அமைச்சரிடம் இதற்கு மேல் கேட்கமுடியாது, நியாயமில்லை. ஆனால் மக்கள் கேட்பதும் நியாயம். அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.

வேறு வழி இல்லை. போராட்டம் நடத்திய ஊர்க்காரர்களை சமாதானம் செய்து, சிலரை அழைத்துக் கொண்டு போய் அமைச்சரை பார்த்தேன். பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டார்.

“விட்டுப் போன ஊர்கள் அண்ணா...” என்று ஆரம்பித்தேன். “தெரியும். உன்னை எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றியவர்கள் தானே இவர்கள். அவங்களுக்கு பரிந்துரையா?” என்று சிரித்தார்.

“பாருங்க சார், அவரை எதிர்த்து போராட்டம் பண்ணீங்க. ஆனால் அப்பவும் அவர் உங்களுக்காகக் கேட்கிறார். இந்த ஆண்டே கொடுக்க முடிந்தால் கொடுக்கிறேன். இல்லை என்றால் அடுத்த ஆண்டு அவசியம் கொடுத்து விடுகிறேன்.” என்றார் அவர்களைப் பார்த்து.

“இனிமே சங்கரை தொந்தரவு பண்ணாதீங்க. ஏற்கனவே அவர் கேட்டார். 234 தொகுதி இருக்கு. 100 பள்ளிகள் கொடுத்தோம், அதில் ஒன்று தான் கிடைக்க வேண்டும். உங்கள் தொகுதி நிலையால் தான் இரண்டாகக் கொடுத்தேன்.” என்று விளக்கினார்.

அடுத்த ஆண்டு அந்த இரண்டுப் பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தித் தந்தார்.

அதற்கு அடுத்து மருதூர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.

அடுத்த ஆண்டு செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூருக்கு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் பெரியத் தத்தூருக்கு உயர்நிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள்.

ஆண்டிமடத்திற்கு புதிதாக “பெண்கள் உயர்நிலைப் பள்ளி” வழங்கினார்.

ஆரம்பப் பள்ளிகள் கிட்டத்தட்ட 55-ஐ, நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.

(மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மற்ற பள்ளிகளின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை.)

ஆண்டிமடம் தொகுதிக்கு பள்ளிக்கல்வியில் அது ஒரு “மறுமலர்ச்சிக் காலம்”. படைத்தவர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள்.

அவருக்கு, என்னாளும் (மறு சீரமைப்பில் கரைக்கப்பட்ட) ஆண்டிமடம் தொகுதி மக்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

# அவரை பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளிலும் வாழ்த்துவோம் நாங்கள் !