பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத "புத்தாண்டு" வாழ்த்துக்கள் !

நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுளிடம் முறையிடுவது இயல்பு தானே. அப்படி தான் நாரதரும் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டார்.

     

“பரமாத்வே இது நியாயமா?” என்றார் நாரதர்.
“எது?” என்றார் கிருஷ்ண பரமாத்மா.
“60,000 காதலி வைத்திருக்கிறீர்களே” நாரதர்.
“சரி, அதற்கென்ன நாரதரே?” கிருஷ்ணபரமாத்மா.
“நான் ஒரு காதலி கூட இல்லாமல் அவதிப்படுகிறேன். எனக்கு ஒரு காதலி அளித்து உதவக்கூடாதா?” நாரதர்.
“ஒன்று செய்யுங்கள் நாரதரே. என்னை மனதில் நினைக்காத பெண் இருந்தால் முயற்சியுங்கள்” கிருஷ்ணபரமாத்மா.

நாரதரும் கிளம்பினார். சுற்றிச் சுற்றி வந்தார். 60,000 வீட்டுக்கும் நேரடியாக போனார். எல்லோரிடமும் வினவினார், “யாராவது கிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைக்காமல் இருக்கிறீர்களா?”

எங்கே போனாலும் ஒரே பதில் தான். எல்லா ஸ்திரிகளும் அதையே கூறினார்கள். 

“கிருஷ்ணபரமாத்மா தான் எம் மனம் முழுதும் நிறைந்திருக்கிறார்” என்ற பதில் தான் திரும்ப, திரும்ப ஒலித்தது. அது நாரதர் காதில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

நாம் பார்த்த 60,000 பெண்களாலும் காதலிக்கப்படுகிறவர் என்றால் கிருஷ்ண பரமாத்மா எத்தகைய ஆண் மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், நாரதரின் மனதில் வேறு சிந்தனையை உருவாக்கியது.

இப்போது அவர் கிருஷ்ணர் மேல் காதல் கொண்டார். கிருஷ்ணனிடம் சென்றார். 

“இவ்வளவு பேர் உன் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, நானும் மையலானேன். என்னை பெண்ணாக்கி 60,001-வது காதலியாக ஏற்றுக் கொள்” என்று வேண்டினார்.

“யமுனையில் சென்று குளித்து வா, நீ பெண்ணாவாய். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் கிருஷ்ண பரமாத்மா. நாரதரும் அவ்வாறே யமுனைக்கு சென்று நீராட, அழகியப் பெண்ணாய் மாறினார்.

பெண்ணான நாரதர் கிருஷ்ணரை சந்தித்தார். காதலனானார். கரம் பிடித்தார். காலம் எல்லாம் வாழ்ந்திட்டார். இல்லறத்தின் நல்லறமாய் 60 ஆண்டுகளில், 60 பிள்ளைகள் பிறந்தன.

முதல் பிள்ளைக்கு பிரபவ என பெயர் சூட்டினர். அடுத்த அடுத்த பிள்ளைகளுக்கு பின்வரும் பெயர்களை சூட்டினர்.

விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய.

அந்த அந்த பிள்ளைகளின் பெயரிலேயே அந்த ஆண்டுகளுக்கும் பெயர் சூட்டினார் கிருஷ்ண பரமாத்மா. இந்த அறுபது பெயர்களிலான ஆண்டுகள்., ‘பிரபவ’-வில் துவங்கி ‘அட்சய’வில் முடிந்தவுடன் மீண்டும் ‘பிரபவ’-வில் துவங்கும்.

அப்படி கிருஷ்ண, நாரத தம்பதிகளின் ஒரு பிள்ளையான “மன்மத” பெயர் தாங்கிய ஆண்டு தான், இன்று பிறக்கின்ற ஆண்டு. இது தான் “மன்மத” புத்தாண்டு.
(ஆதாரம்- இந்து ‘அத்தாரிட்டி’ எழுத்தாளர் “ஜெயமோகன்”, “முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம்” என்று சிலாகிக்கும் “அபிதான சிந்தாமணி” நூல்)
உலகிலேயே 60,000 காதலிகளை கொண்ட “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.
பெண்ணாய் மாறிய “முதல்” ஆண், “நாரதர்”.
பெண்ணாய் மாறிய ஆணை மணந்த “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.
வேற்று மொழியில் ஆண்டுகளின் பெயர்களை கொண்ட “முதல்” மொழி “தமிழ்”

(“நான் இன்னும் பனை ஓலையிலேயே எழுதுகிறேன், பூமி தட்டை என்பதே சரி, ஆதிகாலமே எனக்கு பிடிக்கும், அந்தப் பாரம்பரியத்தை விடமாட்டேன்” என்று மக்களின் முதல்வர் “அம்மா” மீண்டும் இந்தப் புத்தாண்டை கொண்டாட பணித்திருக்கிறார்)

# கிருஷ்ணபரமாத்மா-நாரத இணையரின் மகன் “மன்மத” புத்தாண்டு வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக