பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

பாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் !

"பாரீஸ் போயி வில்ஸ் பாக்கெட் வாங்கிகிட்டு வாடா". சரி, இதுவும் ரேகிங்கில் ஒரு பகுதி என நினைத்தேன். என்ன சொன்னால் அடி விழாது என்று யோசித்தேன்.

            

பிளாஷ்பேக் ரிவைண்டினேன். "பேர் என்னா ?", "சிவசங்கர்", பொளிச், கன்னம் உள்வாங்கியது. "அப்பா இல்லாமலா வந்துட்ட, இனிஷியல் சேர்த்து சொல்லுடா"

அடுத்த முறை. "பேர் என்னா?", "எஸ்.சிவசங்கர்", பொளிச். "பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா?". "சாரி சார்".

ஜாக்கிரதையாக பதில் சொன்னேன், இப்போது. "என் கிட்ட பாஸ்போர்ட் இல்லிங்க சார்". "அதுக்கு என்னா?". "பாரீஸ் போக பாஸ்போர்ட் வேணுங்களே சார்". இப்போதும் பொளிச்.

"கிண்டல் பண்றீயாடா. பாரிஸ் கார்னர் போய்ட்டு வாடா". கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாள். பாரீஸ் கார்னர் இப்படி தான் அறிமுகமானது.

அட்மினி கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால், வழியில் தமிழ்துறை, இசைத்துறை எனக் கடப்போம். அந்த சாலையின் கடைசியில் வேளாண் கல்லூரி. வழியில் இருக்கும் கடைவீதி தான் நம்ம "பாரீஸ் கார்னர்".

போகப்போக பாரீஸ் வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகியது. அதுவும் முதலாண்டு ஹாஸ்டலான முல்லை இல்லத்திற்கு அருகில் இருந்ததால், மாலை நேரம் அங்கு தான் கழியும்.

இந்த பாரீஸ் கார்னர் பெயரில் தான் பாரீஸ், பாரீஸ் நகர் போல கேளிக்கை மையமும் கிடையாது, பணக்கார மையமும் கிடையாது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை மையம்.

கையிருப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மாணவர்களின் பொழுதுபோக்கு மையம் அது தான். ஒரு டீயை குடித்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு கதை நீளும். இன்னும் கொஞ்சம் காசிருந்தால், ஒரு ஆம்லேட்.

டைப்பிங் , ஜெராக்ஸ் என சிதம்பரம் நகருக்கு செல்லத் தேவை இல்லாமல் இங்கேயே பல பணிகள் முடியும். இப்படி ஒரு மினியேச்சர் சிதம்பரம் நகரம். அங்கேயே ஒரு கோவிலும் உண்டு. பசுபதீஸ்வரர் கோவில். 

இரண்டாம் ஆண்டு. கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதிக்கு ஜாகை மாறிய பிறகு, பாரீஸ் தூர தேசமானது. மெல்ல மெல்ல அவுட் ஆப் போகஸில் போனது.

எப்போதாவது அக்ரி, கலை, அறிவியல் துறை நண்பர்களை சந்திக்கும் மையப் புள்ளியாக மாறிப் போனது.

ஆனால் ஒரு குருப்புக்கு எப்போதும் அது கோடை வாசஸ்தலம் தான். காரணம், ஒரு விதத்தில் அந்த பாரீஸ் நகரை ஒத்து போகும் இந்த பாரீஸ்.

அந்த பாரீஸில் ஃபேஷன் ஷோ பிரபலம். இந்த பாரீஸில் அப்படி இல்லை என்றாலும், அருகில் தான் தாமரை இல்லம். அதனால் சாதாரண காட்சி உண்டு.

தாமரை இல்லம், பெண்கள் விடுதி என்பது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி.

பாரீஸ் பல ரோமியோக்களை, தேவதாஸ்களை, ஜாக்கிசான்களை, கமலஹாசன்களை, செந்தில்களை உருவாக்கிய இடம்.

# எப்படியோ எல்லோர் மனதிலும் நிறைந்த பாரீஸ் !