பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஒரு நாயகன் உதயமாகிறான்

"நான் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா திருடர்களும் ஆந்திராவிற்கு ரயில் ஏறி ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். அப்படி என்றால் அவர்கள் கிளம்பும் முன் ஜெயலலிதாவிடம் சொல்லி விட்டுப் போனார்களா?"

பேச்சை துவங்கும் போதே டாப் கியரில் கிளப்பினார் சகோதரர் வி.பி.ஆர்.இளம்பரிதி. ஏற்கனவே பல முறை பேசி இருந்தாலும், கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆக பொறுப்பேற்ற பிறகு வருவது சிறப்பு தானே.

"எல்லாத் திருடர்களும் ஒரே நேரத்தில் பேசி வைத்துக் கொண்டு கிளம்பினார்களா? அதற்கு யார் ஏற்பாடு செய்தது? எல்லோரும் ஒரே நேரத்தில் ரயிலில் செல்ல யார் டிக்கெட் ரிசர்வ் செய்து கொடுத்தது? எல்லாம் இவங்க ஏற்பாடா?"

அப்ப தான் சிலர், ஆஹா இப்படி ஒரு விஷயம் இருக்கா என்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். பேசிய ஒரு மணி நேரத்தில் இப்படி சிந்திக்க வைத்தார், சிரிக்க வைத்தார், கடைசியாக கண் கலங்கவும் வைத்தார்.

"அடடா, சின்னப் பையனா இருக்காரேன்னு பார்த்தோம். சிறப்பாக பேசினார்" என்று மூத்த முன்னோடிகள் பாராட்டினார்கள்.

எங்கள் மாவட்டத்தில் எப்போது கூட்டங்கள் ஏற்பாடு செய்தாலும், மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆகத் தான் இருக்கும். ஸ்டார் பேச்சாளர்கள், வளரும் பேச்சாளர்கள், மூத்தப் பேச்சாளர்கள், இளையவர்கள் என்று கலந்துக் கட்டி இருக்கும்.

இந்த முறை ஒரு புது பேச்சாளரை அறிமுகப்படுத்தி, தயார் செய்வோம் என்று முடிவெடுத்தேன். ஒருவர் நினைவு வந்தது. அவரை ரொம்ப நாளா கவனித்துக் கொண்டு இருந்தேன்.

சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே, நிறைய புதிய செய்திகளை சொல்வார். கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை. பொருளாதார ஞானம். நல்ல எழுத்தாளர். குழந்தைக் கவிஞர்.

அவரே தான். ஆமாம் முகநூல் மற்றும் வலைப்பூவில் பிரபல எழுத்தாளரான, குழந்தைக் கவிஞர் அண்ணன் எம்.எம்.அப்துல்லா.

அலைபேசி தேதிக் கேட்டேன். ஜெர்க் ஆனார். "என்ன கிண்டல் பண்றீங்களா?" என்றார். "சொந்த ஊர்ல பேசினாலே பத்து, பதினைந்து நிமிஷம் பேசுவேன். நான் சிறப்புப் பேச்சாளரா?" என்றுக் கேட்டார்.

அப்புறம் அப்படி, இப்படி பேசி ஒரு வழியாக, பரிதி பேசும் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுகிறேன், என்று ஒப்புக் கொண்டார்.

சில பேச்சாளர்களிடம் தேதி வாங்கினால், வருவதற்குள் பத்து முறை பேசி விடுவார்கள். எங்கே கூட்டம், எங்கே வரணும், எப்ப வரணும் என்று படுத்தி விடுவார்கள்.

அதே நிலைமை தான், அண்ணன் அப்துல்லா கிட்ட தேதி வாங்கிகிட்டு. போன் அடிப்பார். "அண்ணே, பத்து நிமிஷம் தான் பேசுவேன்" "அண்ணே, பத்து நிமிஷத்துக்கு மேல இழுக்காது" "அண்ணே, பத்து நிமிஷத்துக்கு தான் தயாரா இருக்கிறேன்"

ஒரு கட்டத்தில் அவர் போன் அடிச்சா,"அண்ணே, பத்து நிமிஷம் தான்ணே" என்று நான் சொல்லும் அளவுக்கு நிலைமை ஆயிடுச்சி.

பத்து நிமிஷம் தான் என்று நினைத்துக் கொண்டு, பேச அழைத்தோம். பேசி முடிக்கும் போது பார்த்தால், 20 நிமிஷம். அதுவும் இன்னும் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் முடித்து விட்டார்.

சுவையானப் பேச்சு, பல வித சுவைகள் கலந்து.

(அண்ணன் எம்.எம்.அப்துல்லா உரையாற்றும் காட்சி. பிட் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பவர் சகோதரர் வி.பி.ஆர்.இளம்பரிதி.)

   

இது அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியம். ஏலாக்குறிச்சி கிராமம். ஒரு முக்கியத் தகவல், ஏலாக்குறிச்சி தான் வீரமாமுனிவர் தமிழ் பணியாற்றிய ஊர்.

"அம்மா உணவகத்தில் விக்கிற இட்லி ஒரு ரூபாய். நெல்லை விளைவித்து, அரிசியாக்கி, மாவாக்கி, இட்லி சுட எவ்வளவு செலவாகும். அது ஒரு ரூபா. இலவசமா கிடைக்கிற தண்ணீரை, ஒரு லிட்டர் பத்து ரூபாய்க்கு அரசாங்கம் விக்குது. என்ன பொருளாதாரம்." என பொருளாதாரத்தில் ஆரம்பித்து,

“டேய் சிவசங்கர், டேய் அப்துல்லா என்று அழைக்கப்பட்டவர்கள், இன்று மரியாதையோடு அழைக்கப்படுமளவுக்கு வாழ்கிறோம் என்றால், காரணம் பெரியார்” என்று பெரியாருக்கு போய்,

“தளபதியின் தியாக வாழ்வு எங்கே, உமர் அப்துல்லா, அகிலேஷ்யாதவ், நவீன் பட்நாயக் ஆகியோர் எந்த தியாகமும் செய்யாமல் வந்து முதல்வரானார்களே, எது வாரிசு அரசியல்?” என இந்திய அரசியலை அலசி,

இன்னும் சில சப்ஜெக்ட்களை தொட்டு, தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகளையும், அமைச்சர்கள் செயல்பாடுகளையும் கலகலப்பாக சொல்லி, கலக்கி விட்டார் கூட்டத்தை. 

வேறு மாவட்டத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல், தன்னை ஆளாக்கி, வழிநடத்துபவர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன்.அரசு என்பதையும் குறிப்பிட்டார்.

"நான், எங்க மாவட்ட செயலாளர் அண்ணன் அரசு சொல்ற வேலைய செய்யற களப் பணியாளன். அண்ணன் சிவசங்கர், என்ன இங்க கொண்டு வந்து பேச விட்டுட்டாரு"

அதே போல தனது வளர்ப்புத் தந்தை கீரை தமிழ்செல்வன் என்பதை குறிப்பிட்டார். "அவர் தான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர். நான் அவர் வீட்டில் வளர்ந்தவன். அவர் தான் முதன்முதலாக சென்னையையும், சட்டமன்றத்தையும் கொண்டு போய் காட்டியவர்". இது மெனக்கெட்டு சொல்லாமல், இயல்பாக பேச்சு வாக்கில் வந்தது.அது தான் நன்றி உணர்வு.

நல்ல மனம் வாழ்க.

இது ஒரு பக்கம்.

இன்னொரு விஷயம். அண்ணன் சும்மாவே தகதகன்னு இருப்பாரு. அன்னைக்கு லைட் கனகாம்பர கலர்ல சட்டைய போட்டுக்கிட்டு அட்ராக்க்ஷனா வந்தாரு. பிரேம் லெஸ் ஸ்பெக்ஸ். செம லுக்.

கூட்டம் முடிந்து கொடியேற்றப் போனேன், மாவட்ட செயலாளர் என்ற முறையில். அங்கே ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தவர் கேட்டார், “செவப்பா ஒரு தம்பி பேசுச்சே, அது எங்கே ?”

# ஒரு நாயகன் உதயமாகிறான் !