பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 மே, 2015

எங்கே தேடுவேன் 'பூரி - விண்டலை'

இரண்டாவது மாடியில் இருந்து இறங்கும் போதே, முதல் மாடியில் நிற்கும் மீனாட்சி என்கிற மீனாட்சிசுந்தரத்திடம்  இருந்து குரல் வரும், "மாப்புள்ள, எங்க கூட்டமா, டீ கடைக்கா ?"

"மெஸ்ஸுக்கு". "என்னா, மெஸ்ஸுக்கு ஆறரைக்கேவா?". "ஆமாண்டா. ஆறரைக்கே தான். இன்னைக்கு கிழமை என்ன? மறந்துட்டியா?"

"ஆஹா, வியாழக்கிழமையா. இதோ ரூம பூட்டிட்டு பின்னாடியே வந்துடறன். எடம் போட்டு வை மாப்புள்ள". வியாழக்கிழமைன்னா அப்படி தான்.

இரவு மெஸ் ஏழரைக்கு ஆரம்பிக்கும். அப்போ வழக்கமா முதல் இரு வரிசை தான் நிரம்பி இருக்கும். மத்த வரிசைங்க கொஞ்சம், கொஞ்சமா தான் நிரம்பும்.

ஆனா வியாழக்கிழம, ஆறரை வாக்கிலேயே முதல் ரெண்டு  வரிசையில் ஆள் இருக்கும். ஏழரைக்கெல்லாம் மெஸ் நிறைஞ்சிடும். கல்யாண வீடு மாதிரி ஜேஜே-ன்னு இருக்கும். சில நேரங்களில் காத்திருந்து இடம் பிடிக்க வேண்டியதாகி விடும்.

அது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான நியு பிளாக், ஆர்.எம்.ஹெச், ஆர்.எஸ்.ஹெச்  ஹாஸ்டல்களின் மெஸ்.

அந்த வியாழக்கிழமை விசேஷம், அன்றைய உணவான "பூரி-விண்டல்".

பொறியியல் மாணவர்களை கட்டிப் போட்ட உணவு அது. அன்று எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம் முடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.  யாரும்' ட்ரீட் கொடுத்தாலும் 'கட்' தான்.

அப்படி ஒரு காம்பினேஷன் "பூரி-விண்டல்". அந்த விண்டல் தான் ஸ்பெஷல். அதை வேறு எங்கும் சாப்பிட்டது கிடையாது. வேறு இடத்தில் கேள்வி பட்டதும் கிடையாது.

அந்த அளவிற்கு ஒரு பிரத்யேகமான தயாரிப்பு . மட்டனில் செய்யப்படும் உணவு வகை அது. மட்டனை மிக சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டிருப்பார்கள். பூரிக்கு தொட்டுக் கொள்ளும் வகையில் தடதடப்பாகவும் இல்லாமல், நீர்த்தும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்கும்.

கொஞ்சம் பிங்க் நிறமாக இருக்கும். காரம் இல்லாமல், லேசான இனிப்புடன் அது ஒரு தனி சுவை. பூரியை சிறிதாகக் கிள்ளி, விண்டலை தொட்டு வாயில் போட்டால் கரைந்தே போகும்.

சில சைவர்கள், பூரி-விண்டலை  மட்டும் சுவைப்பதும் உண்டு.  மூன்றாம் வருடம் வெளியில் அறை எடுத்து தங்கிய என்னைப் போன்ற விண்டல் ரசிகர்களுக்கு பார்சல் வாங்கி வந்துக் கொடுத்து, நாக்கை உயிர்ப்புடன் விளங்கச் செய்த மாம்ஸ் சங்கர் போன்ற கொடை வள்ளல்களும் உண்டு.

இன்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் சந்தித்தால், மலரும் நினைவுகளில்  இடம் பிடிக்கிற டாப் 5-ல் பூரி-விண்டல் கட்டாயம் இருக்கும். சிலர் அந்த ரெசிபி குறித்த ஆராய்ச்சியில் இறங்கி இருப்பதாகவும் செய்தி உண்டு.

# எங்கே தேடுவேன், பூரி-விண்டலை எங்கே தேடுவேன்...

(அண்ணாமலைப் பல்கலைக்கழக 1990 பொறியியல் மாணவர்கள் சந்திப்புக்காக எழுதியது)