பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 5 மே, 2015

இசையோடு இசைந்து வாழ்வோம்

இசை கேட்டால் வயப்படுவது இயற்கை. அதிலும் பறை இசை என்றால் கட்டுப்படாமல் கால்கள் ஆடும். தன்னை அறியாமல் தாளம் இடும்.

இசைஞானம் எல்லாம் துளியும் கிடையாது. ராகங்கள் என்றில்லை, திரைப்பட பாடல்களை கேட்கும் போது, சில வாத்தியங்களை அடையாளம் கொள்ளவே சிரமப்படுவேன்.

ஆனால் டிரம்ஸ், கீபோர்டு, கிடார் இசைகளை கேட்கும் போது, அந்தக் கருவிகளை இசைக்கத் தெரிந்தவன் போல் கைகளை ஆட்டி மகிழ்வது வாடிக்கை. பாடல் வரிகள் தெரியாமலே கூட சேர்ந்து பாடுவது வேறு.

இன்னும் சில நேரங்களில் இசைக்குழுக்களை ஆட்டுவிக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக நினைத்துக் கொண்டு கையை அசைத்து அப்படியே மூழ்கி விடுவதும் உண்டு.

சில நேரங்களில் "இது கொஞ்சம் ஓவரோ" என்று கூட தோன்றும். ஆனால் இசைஞானி அப்படி பழக்கி விட்டார், சிறுவயதிலிருந்தே. நாம் தான் இப்படியா என்ற சந்தேகமும் அவ்வப்போது வரும்.

போன வாரம் ஒரு சிறு சந்தர்ப்பத்தில், விஜய் டிவி பார்க்கும் வாய்ப்பு. "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சி. அது தான் முதல்முறையாக பார்க்கிறேன். பத்திரிக்கைகளில் பெரிய அளவில் எழுதப்படும் நிகழ்ச்சி என்பதால் கவனித்தேன்.

இருவர் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ஃபிளாஷ். நடுவர் ஒருவர் காற்றில் டிரம்ஸ் வாசித்தார். பாடல் தொடர்ந்தது . அடுத்த இசை இடைவெளி. இப்போது கீபோர்டு வாசித்தார் லயித்து.

அட நம்மாளு. நாம் செய்வதை செய்யும் ஒருவர் என்பதால் மகிழ்ச்சி. மொட்டை அடித்து, லேசாக வளர்ந்த முடி. ஷேவ் செய்யப்படாத முகம். இசையிலேயே கவனமாக எஸ்.பி.பி.சரண்.

மற்றவைகளை கவனிப்பதை விட சரணை கவனிப்பதே முக்கியமானது . பாடுவோர் பாடும்போது உடன் வாயசைப்பதும், கருவிகள் இசைக்கப்படும் போது இசைப்பதுமாக மூழ்கிப் போகிறார்.

பாடுவோர் சிறப்பிக்கும் போது தனக்குத்தானே புன்னகைத்துக் கொள்வதும், தவறினால் ஜெர்க் கொடுப்பதுமாக தனி உலகத்தில் சஞ்சாரிக்கிறார்.

"ஒவர் ஆக்‌ஷனோ?" என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அப்படி தெரியவில்லை. ரசித்து மூழ்கிப் போய் தான் காணப்படுகிறார். யூடியூப்பில் இந்த நிகழ்ச்சிகளை காணத் தூண்டுகிறார்.

          

நாடி நரம்பு ரத்தம் எல்லாம் இசையால் வெறி ஏறிப் போனவர் ஒருவரால் தான் இப்படி நடந்துக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. எஸ்.பி.பி மகனல்லவா.

# இசையால், இசையாய் , இசையும் மனிதன் !