பிரபலமான இடுகைகள்

வியாழன், 18 ஜூன், 2015

மறுசந்திப்பும், கால மயக்கமும் !


அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பொறியியல் புலம், சிதம்பரம், மெஸ், அரசன் மியூசிக்கல்ஸ், ஆர்.டிவி.வேலு ஸ்டுடியோ, டபுள் ஏ மற்றும் வேலுகபே பரோட்டா, வாத்தியார் கடை இட்லி என அடுத்த ஒரு வாரத்திற்கு பதிவுகள்  ஒரு மயக்கத்திலேயே இருக்கும். மலரும் நினைவுகள்.

1986 - 1990 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த நண்பர்கள், 25 ஆண்டுகள் கழித்து  சந்திக்க இருக்கிறோம். வரும் சனி, ஞாயிறு (ஜூன் 20,21) அன்று சென்னையில்.

சந்திப்புக்கான இடம் எது என முடிவெடுப்பதே பெரும் வேலையானது. முதலில் சிதம்பரம் பரிசீலிக்கப்பட்டது. 150 பேர் குடும்பத்தோடு தங்க அறை வசதி ஏற்பாடு செய்வது என்பதில் சிதம்பரம் பின் தங்கியது.

அடுத்து பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி. பாண்டிச்சேரிக்கு கூடுதல் ஆதரவு வழக்கம் போல் கிடைத்தது. ஆனால் அங்குள்ள ஹோட்டல்களின் பட்ஜெட் இடித்தது. அப்படி பரவாயில்லை என்றாலும் இரண்டு ஹோட்டல்கள் தேவைப்பட்டது.  

கடைசியாக சென்னையே தஞ்சம் என்ற நிலை. நண்பர்களில் நிறைய பேர் வெளிநாடுகளில் பணிபுரிவதால், அவர்கள் சென்னை வந்து இன்னொரு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படும் நிலை. அவ்வளவு பேர் தங்கக்கூடிய அளவிற்கு அறைகளோடு பட்ஜெட்டிற்கு ஒத்து வந்தது ஹோட்டல் லீலா பேலஸ்.

இதற்கே ராம்ஸ், சீதர், ஆவிச்சி, ஹரி, ஏவிஎஸ், சந்துரு, மாணிக்ஸ், சத்யா, குப்புசாமி, ஆனந்த், வாண்டு  என ஒரு குழு இரண்டு மாதங்கள் வேலைப் பார்த்தன.

இன்னொரு புறம் நண்பர்களை தேடும் பணியும், ஒருங்கிணைக்கும் பணியும் மெயில், மொபைல், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என ஜரூராக நடந்தது. 150 பேர் கலந்து கொண்டாலும் மீண்டும் தொடர்பில் வந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ தாண்டும்.

இதைவிட சிங்கப்பூரில் ஒரு கோஷ்டி இருந்து கொண்டு, வாட்ஸ் அப் மூலம் பணிகளை முடுக்கியது. நிறைய நண்பர்கள் கலந்து கொள்ள வழி செய்தது. முகில், மீனாட்சி, கலை, மூர்த்தி, நெடு, வாசு, சுந்தரம், பிரபா, சச்சி, மணி, பாலாஜி, வெங்கடேஷ் என ஒரு நீண்ட பட்டியல் அது.

இவர்கள் குடைக் கடை முதல் பீச் கேண்டி வரை கூடிக்கூடிப் பேசியதில் சிங்கப்பூர் அரசே உளவுப்படை போட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கிறதாம், ஏதாவது புரட்சி நடவடிக்கையோ என. அதற்கு ஆன செலவில் அனைவரையும் சிங்கப்பூருக்கே அழைத்து இந்த நிகழ்வை நடத்தி இருக்கலாம் எனவும் தகவல்.

நிகழ்விற்கு  லோகோ, சந்திப்பின் போது தீம் மியூசிக் எனவும்  ஒரு டீம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது நானும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் பங்கேற்றேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்களோடு இணைந்து பணியாற்ற இருக்கிறேன். அதனால் தவிர்க்க இயலாமல் டைம் மெஷினில் ஏறி பறந்து விடுவேன்.

# பொறுத்தருள்க, கால மயக்கத்தையும், மயக்க நேர உளறல்களையும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக