பிரபலமான இடுகைகள்

திங்கள், 6 ஜூலை, 2015

உதட்டை லேசாக அசைத்து...

எனக்கு இருந்த ஆதங்கத்தை கமெண்ட்ரி வழங்கிக் கொண்டிருந்த அண்ணன் ஹென்றி வெளிப்படையாகவே மைக்கில் சொல்லிவிட்டார்.

"நாங்க விளையாடும் போதெல்லாம் மூச்சக் கட்டிக்கிட்டு 'கபடி, கபடி'ன்னு பாடி விளையாடுவோம். நீங்க என்னன்னா, பாடுறது தெரியாமலே  விளையாடுறீங்க".

அவர் சொன்னது உண்மை தான். சிலர் லேசாக வாயை அசைத்து விளையாடினார், சிலர் உதட்டை லேசாக அசைத்து விளையாடினர், சிலருக்கு முகத்தில் எந்த அசைவுமே இல்லை, சிலை போல 'ரைடு' சென்று வந்தனர்.

நாங்கள் விளையாண்ட போது, மூச்சு விடாமல் 'கபடி' சொல்ல வேண்டும். மூச்செடுத்து செல்லும் போது, எதிரணியினர் சுற்றி வளைத்து அழுத்திப் பிடித்தாலும், மூச்சை விட்டு விடாமல் தம் கட்டி, 'கபடி,கபடி' சொல்லிக் கொண்டு வந்து கோட்டை தொட வேண்டும். 'கபடி' சொல்வதை விட்டு விட்டால், அவுட்.

இடையில் கொஞ்ச காலம் "கபோச், கபோச்' என ஸ்டைலாக சொல்லி விளையாண்டார்கள். இப்போது அதுவும் போச்சி. பரவாயில்லை, எப்படியோ இன்றைய இளைஞர்கள் கபடியை விளையாடுவதே மகிழ்ச்சி தான்.

கிரிக்கெட் புகுந்த பிறகு, பாரம்பரிய விளையாட்டுகள் பல புழக்கம் குறைந்து வருகின்றன, சில வழக்கொழிந்து போய்விட்டன. கபடி அப்படி ஆகாமல், தப்பித்து தழைத்தும் வருகிறது, இன்னும் வரவேண்டும்.

இரண்டு நாட்களாக இரவு நேர 'மின்னொளி' கபடிப் போட்டிகள். தலைவர் கலைஞர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இளைஞரணி சார்பாக ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

துவக்கி வைத்து ஒரு ஆட்டம் மட்டும் பார்ப்பது என்று சென்றவனை, இரவு ஒன்பது மணியிலிருந்து அதிகாலை ஒன்றே கால் வரை உட்கார வைத்து விட்டனர், ஆட்டத்தின் விறுவிறுப்பு மூலம். 'கில்லி' சினிமா இசையை போட்டு, அணி நுழையும் போதே முறுக்கேற்றினர்.

என்ன ஆட்டம், எத்தனை விதமான நுட்பங்கள் வியக்க வைத்து விட்டனர். தொழில் ரீதியான ஆட்டக்காரர்கள் கிடையாது. மாவட்டத்தை சேர்ந்த அணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றதால், கிராமத்தை சேர்ந்த இளைஞர்களே பெருமளவில் விளையாண்டனர்.

விளையாட்டு வீரர்கள் ஆட, ரசிகர்கள் உற்சாகப் படுத்த, நகைச்சுவையான கமெண்ட்ரியுடன் ஆட்டம் களைக்கட்டியது. சில வீரர்கள் நடனமாடுவது போலவே, ரைட் சென்றனர். சில வீரர்கள் இரண்டு கைகளையும் அசைத்து விளையாண்டது,  பட்டாம்பூச்சி இறகசைப்பது போலவே இருந்தது.

சிலர் ஆள் உயரத்துக்கு துள்ளிக் குதித்து, எதிரணியினரை தொட்டு வந்தனர். சிலர் வலுவான உடல்வாகோடு பயமுறுத்துவது போல சென்று சிறுவர்களின் கைக்கோர்ப்பில், சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாக மாட்டினார்கள். குழு ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்த்தியது.

ரைட் செல்பவர், ஒரு முறைக்கு இரண்டு பேர், மூன்று பேர் என்று அவுட் ஆக்கி, தனிமனிதனாக ஆட்டத்தின் போக்கையே மாற்றி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றதும் நடந்தது. எதிரணியினரிடம் போக்குக் காட்டி, அசரும் நேரத்தில் தட்ட வேண்டும்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். உடலுக்கு வலுவேற்றும் ஆட்டம் மட்டுமல்ல கபடி, மூளைக்கும் வேலை கொடுக்கிறது.  பல வாழ்க்கை சூட்சுமங்களை கற்றுக் கொடுத்தது.

வெண்ணங்குழி அணி முதல் பரிசு. முள்ளுக்குறிச்சி அணி இரண்டாம் பரிசு. சின்னவளையம், மீன்சுருட்டி அணியினர் மூன்றாம் இடத்தை பகிர்ந்துக் கொண்டனர். பரிசளித்து கிளம்பினேன்.

பள்ளி நண்பன் குணசேகரன், பழைய நினைவுகளோடு "ஆளுக்கு ஒரு டீம்ல இறங்குவோமா?, கபடி விளையாடுவோமா?" என்றுக் கேட்டுக் கொண்டு இருந்தான். கூட்ட நெரிசலால் பதில் சொல்ல முடியாமல் போய் விட்டது.

"நான் உங்க சார்பா கபடி ஆடிகிட்டு தானே இருக்கேன், சபைக் காவலர்களோடு, சட்டசபையில்"

# கபடி, கபடி, கபடி...