பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

புத்தகம் ரிலீஸ் ஆகுமா ?

காலை 7 மணிக்கு எழுந்திருக்கும் நபருக்கு, அன்று விடிகாலை 04.30க்கு விழிப்பு. இதற்கு படுத்ததோ நள்ளிரவு 12.30, பொதுக் கூட்டம் முடித்து. தண்ணீர் குடித்து விட்டு புரண்டு, புரண்டு படுத்தும் உறக்கம் பிடிக்கவில்லை.

காலை கடலூர் புதுச்சத்திரம் வேறு செல்ல வேண்டும். ஏதோ மனக்குழப்பம். யோசித்தேன். 17 புத்தகத் திருவிழா துவங்குகிறது. நன்கொடை தருவதாக சொன்னோம், தரவில்லை. ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தப் புத்தகக்காட்சிக்கு வேறு என்ன செய்யலாம்?. நேரடியாக களம் இறங்கினால், விழாக் குழுவினருக்கு அரசு ஒத்துழைப்பு குறைந்து விடும். உதவி செய்யலன்னாலும், உபத்திரம் செய்யாம இருப்போம் என முடிவெடுத்தேன்.

அப்போது தான் ஒரு மின்னல் வெட்டு. நீண்ட நாட்களாக நலம் விரும்பிகள் சொல்வது போல, ஒரு புத்தகம் போடும் யோசனை இருக்கிறதே, அதை இப்போது செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது.

நம்ம ஊரில் அரங்கேற்றுவது தானே சரியாக இருக்கும். நான் சிறு குழந்தையாக தவழ்ந்த ஊர் அரியலூர் தான். இங்கேயே நம் புத்தகமும் தவழட்டுமே. அதுவும் முதல் புத்தகக்காட்சியில் என்றால், காலமெல்லாம் நினைவிருக்கும். முடிவெடுத்தாகி விட்டது. உருக் கொடுக்க வேண்டும்.

புதுச்சத்திரம் சென்று அன்றைய பொழுது கழிந்துவிட்டது. அன்று ஜூலை 1. எஞ்சி இருப்பது 16 நாட்கள்.

ஜூலை 2, 
கழகத் தோழர் இல்ல நிகழ்ச்சி. மாலை உட்கார்ந்து பிளாகில் ஆராய்ச்சியில் இறங்கினேன். எந்தப் பதிவுகளை அச்சுக்கு தெரிவு செய்யலாம் என்ற ஆராய்ச்சி. மாலை துவங்கி அதிகாலை 2.00 வரை போராட்டம். குறிப்பிட்ட சில பதிவுகளின் தலைப்புகளை நோட்டில் குறிப்பெடுத்தேன்.

ஜூலை 3. 
காலையில் எழுந்ததும் எப்படி பதிப்பிக்கலாம் என்ற அடுத்த பிரச்சினை. சொந்தமாக பதிப்பிப்பதா அல்லது பதிப்பகம் மூலமாகவா. முதல் புத்தகம், பதிப்பகம் மூலம் வெளியிடுவதே நல்ல அறிமுகமாக அமையும் என முடிவெடுத்தேன்.

எந்தப் பதிப்பகம் என்றதும் விகடன், நக்கீரன், கிழக்கு நினைவுக்கு வந்தன. இவர்கள் தான் எளிய மக்களிடம் உடனே ரீச் ஆகக் கூடியவர்கள்.

இதில் விகடன், என் செய்திகளை வெளியிடவே தயங்குகிறவர்கள், புத்தகத்திற்கா ஒப்புக் கொள்வார்கள்.

அடுத்து நக்கீரன். என் சட்டமன்ற விமர்சனங்களை வெளியிட்டு, என் எழுத்தை வெகுசனங்களிடம் கொண்டு சென்றவர்கள். கேட்டால், ஒப்புக்கொள்வார்கள். ஆனால், திமுக எம்.எல்.ஏ என்பதால், நக்கீரன் புத்தகம் வெளியிட்டுள்ளது என்று போகிற போக்கில் சொல்லி விடுவார்கள். எழுத்தின் விஷயம் கவனிக்கப்படாது.

எஞ்சியிருப்பது, கிழக்கு பதிப்பகம் தான். ஆனால் அவர்கள் அறிமுகமான எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிறப்பான தலைப்புகள் என வெளியிடக் கூடியவர்கள். நாம் இரண்டு வகையறாவும் இல்லை. ஒரே நம்பிக்கை பத்ரி சேஷாத்ரி அவர்கள் என் முகநூல் நண்பர்.

ஒரு முறை சட்டமன்ற நடவடிக்கை குறித்து நான் எழுதி இருந்ததை படித்து விட்டு, "இதே தான் நடக்குதா? அலுப்பாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நான் ஒரு நீண்ட பதிலை ஸ்டேடசாகவே போட்டிருந்தேன். அது 2013 ஏப்ரலில்.

இரண்டு வருடங்கள் கழித்து நினைவிருக்குமா என்று சற்றே குழப்பம். இருந்தாலும் முயற்சிப்போம், என ஜூலை 3 மாலை முகநூல் தனிச்செய்தியில் தகவல் அனுப்பினேன்.

"சார்,
வணக்கம். நான் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர், குன்னம் தொகுதி.
முகநூலில் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.
வரும் 17ஆம் தேதி எங்கள் அரியலூரில் புத்தகக்காட்சி துவங்குகிறது. ஒரு திடீர் ஆசை. எனது முகநூல் பதிவுகளில் சிலவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட ஆசை.
தங்களது கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிட விருப்பம். அதற்கு வாய்ப்பு உண்டா?
வாய்ப்பு இருப்பின் மேற்கொண்டு தொடர்பு கொள்கிறேன். நன்றி."

இரவே பதில் வந்தது, "செய்யலாம். ஆனால் மிகக் குறைவான கால அவகாசமே உள்ளதே... நாளைக் காலை இது குறித்துப் பேசுவோமா? "

ஜூலை 4. 
அண்ணன் ஆ.ராசா அவர்களது பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பயணம்.
சுற்றுப்பயணத்தின் இடையே, நான் பத்ரியை தொடர்பு கொள்ள அவர் பிஸி.

ஜூலை 5. 
படத்திறப்பு நிகழ்ச்சிகள், தலைவர் பிறந்தநாள் கபடிப் போட்டிகள் என நாள் முழுதும் நிகழ்ச்சிகள்.

இன்று அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்ப, என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஜூலை 6. 
இன்றும் அண்ணன் ஆ.ராசா அவர்களது நிகழ்ச்சிகள்.

மதியம் பத்ரி தொடர்பு கொள்ள, நான் கிராமத்தில் இருந்தேன், சிக்னல் இல்லை, சிக்கல்.

இன்னும் எஞ்சி இருப்பது 10 நாட்கள், இது வரை பத்ரி அவர்களிடம் பேசவே இல்லை. நம்பிக்கை குறைந்தது.

மாலை நண்பர் செல்வம் இதை அறிந்து, அடுத்த முயற்சி எடுக்கலாம் என்றார். வேறு என்ன, சொந்தப் பதிப்பகம் தான். இரவு உட்கார்ந்து, ஒவ்வொரு பதிவாக எடுத்து மெயில் போட்டேன். இரவு 10.30க்கு துவங்கி அதிகாலை 01.30 ஆனது.

சென்னையில் 11 பேர் கொண்ட குழு தன் பணியை துவங்கியது.

ஜூலை 7.

"அண்ணா, என்ன ஃபாண்ட் இது? அலைன் பண்ண முடியல..."

புத்தகத்த டிராப் பண்ணிடுவோமா ?

(தொடரும்...)