பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஜூலை, 2015

கனவு காண்வோம், அய்யா கலாம்...

அடடா, கடந்த வாரம் தானே பார்த்தேன். அரியலூர் வந்தாரே, புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தாரே. அப்போதே கொஞ்சம் தளர்ந்து தான் இருந்தார். மைக் முன் வர, நடக்கும் போதே சற்று தடுமாறிப் போனார்.

என் இணையர் காயத்ரி, "கலாமை பார்த்து உங்கள் புத்தகத்தை அளியுங்கள்", என்றார். நண்பர் போஸ், கலாமின் ஆலோசகர் பொன்.ராஜ் எண்ணை அனுப்பினார். "அவரை தொடர்பு கொள் அண்ணா. கலாமை சந்திக்க ஏற்பாடு செய்வார்",என்றார்.

ஆனால் முன்னாள் குடியரசு தலைவரின் பயணம் புரோட்டோக்கால் படி தயாரிக்கப் பட்டிருக்கும் என்பதால், அதை மீற விரும்பாமல் விட்டு விட்டேன். ஆனாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் அமர்ந்து, அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன்.

நிகழ்வின் முடிவில் கலாமை நான் சந்திக்க, அரியலூர் நகராட்சித் தலைவர் முருகேசன், அதிகாரிகளிடம் சென்றார். நான் தடுத்து விட்டேன். இன்னொரு முறை, அவருக்கு இடையூறு இல்லாமல் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். பொய்யாகிப் போய்விட்டது.

தமிழகத்தின் கடைகோடியில் காற்புள்ளி போன்ற அந்தத் தீவு. ராமேஸ்வரம். அதில் இருந்து கிளம்பி தன் அறிவு பலத்தால் விஞ்ஞானி, கல்வியாளர், குடியரசுத் தலைவர் என பல உயரங்களை அடைந்த எளிய மனிதன்.

எதெல்லாம் பலவீனமோ, அத்தனையும் கொண்டவர். ஆம், கிராமத்தில் பிறந்தவர், எந்தப் பின்புலமும் இல்லாதவர், அரசுப் பள்ளியில் படித்தவர், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர், மிக மிக எளிய மனிதர்.

ஆனால் அது எதுவும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அவர் திட்டமிடாத உயரங்களை, பதவிகளை எதிர்பாராமல் அடைந்தார். ஆனாலும் தன் குணம் மாறாமல், அப்படியே இருந்தார், அதே எளிமையாய்.

குடியரசு தலைவராக இருந்த போது, குடியரசு தலைவர் தங்கும் மாளிகையை பொதுமக்களுக்கு திறந்து விட்டார். 'இது உங்களுடையது' என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்த, தன் அலுவலகத்தை பயன்படுத்தினார்.

சோமராஜூ என்ற மருத்துவரோடு இணந்து, ராக்கெட்'க்கு பயன்படுத்தும் உலோகத்தை வைத்து, குறைந்த விலையிலான, இருதய சிகிச்சைக்கான "Coronary stunt" தயார் செய்தார். விண்வெளி விஞ்ஞானி மட்டுமல்ல, எளிய மக்களின் நலன் நாடிய அறிவாளி தான், தான் என்பதை நிரூபித்தார்.

மாணவர்களின் மனம் கவர்ந்தவர். இளைஞர்கள் வாழ்விற்கு வழிகாட்டியானவர். கிராமத்து மனிதர்களின் ஆதர்ச நாயகன் ஆனவர். அரசியலில் குதித்து, அரசியல் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொண்டவர். சில, பல விவாதங்கள் இருந்தாலும், பதில் சொல்லாமல் விலகி நின்றவர்.


                       

"கனவு காணுங்கள்" என்று வலியுறுத்தியவர், பாடம் நடத்தியவர், நம் புத்தியில் புகுத்தியவர். கனவு கண்டு, செயல்படுத்தி பார்த்தவர்.

# கனவு காண்வோம் அய்யா கலாம், உங்கள் எளிமையை கைக்கொள்ள !