பிரபலமான இடுகைகள்

சனி, 22 ஆகஸ்ட், 2015

அவரே வாதாடினார் !

2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான "1,76,000 கோடி நட்டம்" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.

"Mind boggling", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று "நட்டம்" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது. கோர்ட்டில் கதகளி ஆடியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த்தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.

கீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது. இவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, "ஒற்றை மனிதரை" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.

ஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை.  நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார். எப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய், 4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.

அது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.

சி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் "பரமாத்மாக்களின்" கண்களில் படவில்லை.

வழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.

நாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வாதத் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.

சி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்றச்சாட்டு அதே.

அனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள், வாய்தா கேட்டார்கள்.

கடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன?"

பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.

பிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.

மீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.

மூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ? விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.

அன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை.  மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.

கழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.

நேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.

அண்ணன் ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.

உண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.

# வஞ்சகம் மண் மூடிப் போகும், பொய்யோடு புதைந்து !