பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காற்றினிலே வந்த கீதம்

தேனீ மாவட்டம் தேவாரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு. பண்ணைபுரத்திற்கு பக்கத்து ஊர் தான் தேவாரம்.  கிளம்பும் போது மறக்காமல் வாக்மேனை எடுத்துக் கொண்டேன். தேவாரத்தில் இருந்து மலையடிவாரம் செல்ல ஜீப் ஏறினோம்.

4 வீல் டிரைவ் ஜீப். காட்டுப் பாதை. தண்ணீர் ஒடாத காட்டு ஓடையில் ஜீப் செல்ல ஆரம்பித்தது. மணலில் மிதந்து சென்றது ஜீப். உள்ளே உட்கார்ந்திருப்போர் மீது இழையும் அளவிற்கு செடி, கொடிகள். முட்செடிகளும். வாக்மேனை காதில் மாட்டினேன். "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

ஜீப் பாதை முடிந்த இடத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். தலையை சுடும் வெயில், ஆனால் இதமான காற்று. பரவசப் படுத்தியது. "இங்க கிளம்புற காற்று தான் தேனீ மாவட்டத்த குளுமையாக்குறது". பெரும் பாறைகள் மீது ஏறினோம். "மலைக்கு அந்தப் பக்கம் கேரளா. அதோ அந்தப் பக்கம் பண்ணைபுரம்".

ஓங்கி வளர்ந்த மரங்கள். இதமான நிழல். குளிர்ச்சியான காற்று. அப்போது தான் வாக்மேனில் அந்தப் பாட்டு துவங்கியது. ஜானகி குரலில் ஹம்மிங் மனதை வருட ஆரம்பித்தது. ஆ.......

ஹம்மிங் முடிந்து ஒரு இசைக் கோர்வை வரும். அது அப்படியே அங்கு வீசிய காற்றை பிரதிபலித்தது.

"கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்"

அப்படியே உண்மையான சித்தரிப்பு, அந்தப் பகுதியை. நேரில் உணர்ந்தேன். காற்றில் ஆடும் காட்டு மலர்கள். தொட்டுத் தொட்டு பேசும் தென்றல். பாடலை எழுதிய கண்ணதாசன் அந்த மலையடிவாரத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உணர்ந்து எழுதியது போன்ற வரிகள்.

கண்ணதாசனை எழுத வைத்தது இளையராஜாவின் இசைக் கோர்வையாகத் தான் இருக்க வேண்டும். இந்த மலை சார்ந்தப் பகுதிகளில் நிச்சயம் உலவியிருப்பார் ராஜா. பாடல் தொடர்ந்தது .

"காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அங்கே அன்று இங்கே இன்று"

ஒரு பாறை மீது ஏறி உட்கார்ந்தேன். கண்களை மூடி ரசித்தேன். சுற்றிலும் இப்போது இசைஞானியின் ட்ரூப். தபேலா சற்று அழுத்தம்.
 
"வண்ணக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவளுது முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு"

இந்த இடத்தில் புல்லாங்குழல் சற்று விளையாடும். அங்கு வீசும்
காற்றே அப்படி தான் இருக்கிறது.

"கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம சொந்தம் கொள்ள"

பாடலை ரீவைண்ட் செய்தேன். மீண்டும் துவக்கத்தில் இருந்து ஜானகி பாட ஆரம்பித்தார். அடுத்து ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் கேட்டேன். தூரத்தில் மலை உச்சி தெரிந்தது. பறவைகள் ஒலி.

அந்தப் பகுதி காற்றின் மொழியை உள்வாங்கி அதை இசையாக்கி நம்மை மகிழ்விக்கும் ராஜா. அந்தக் காற்றை அளைந்திருக்கும் ராஜாவின் விரல்கள். நானும் அளைந்தேன், அந்தக் காற்றை என் விரல்களால். ராஜாவாய் உணர்ந்தேன்.

# அதிசயம் ஆனந்தம். காற்றாய்  வரும் ராஜா !