பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 5

கண்ணிமைப்பதற்குள் வாகனத்தில் இருந்து இறங்கிய தளபதியை பார்த்தேன். உடன்  நாங்களும் வணடியில் இருந்து குதித்தோம். மேற்கு பள்ளிவாசலில் இறங்க வேண்டிய தளபதி 100 மீட்டர் முன்பே இறங்கி விட்டார்.

இந்த 'நமக்கு நாமே' பயணத்தில், மக்களை சந்திப்பதென்றால் கட்சியின் எந்த நிர்வாகியிடமும் கருத்து கேட்கவில்லை தளபதி. தானே முடிவெடுத்து சிறப்பாக செயல்படுத்தினார். இப்போதும் அதையே செய்தார்.

"தலைவர்களை அவர்கள் கட்சிக்காரர்களை தாண்டி சந்திக்க இயலாது" என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்கிறது. அதனை  உடைத்தெறிய வேண்டும் என்பது தளபதியின் நோக்கம் போலத் தெரிந்தது. இப்போது அதனை தகர்த்தும் விட்டார்.

நிற்கிறவர்களின் முகம் பார்த்தே கண்டுபிடித்து விடுகிறார், யார் கட்சிக்காரர்கள், யார் பொதுமக்கள் என்பதனை. சால்வையோடு நிற்கும் கட்சிக்காரர்களை தவிர்த்து, மனுக்களோடு நிற்கும் மக்களை நாடித் தான் சென்றார்.

இப்போதும் அப்படியே, திரளாக நின்ற இஸ்லாமியப் பெண்கள் தங்கள் குறைகளை கூற தளபதியை பார்த்து கை நீட்ட, வாகனத்திலிருந்து இறங்கி விட்டார். அவர்கள் அருகே சென்றார்.

பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படாததால் தாங்கள் அவதிப்படுவதை எடுத்துக் கூறினார்கள் அந்தப் பெண்கள். பெரும்பாலானோர் கருப்பு நிற பர்தாவில். தங்கள் குறையை காதுக் கொடுத்துக் கேட்ட தலைவனை சந்தித்த திருப்தி அவர்கள் முகத்தில். வழக்கமாக இது போல வெளியில் வந்து யாரையும் சந்திக்காதவர்கள் இந்தப் பெண்கள். தளபதி மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையால் தான் திரண்டிருக்கிறார்கள்.

அங்கிருந்து நடந்து மக்களை சந்தித்தவாறு, மேற்கு ஜமாத்தை அடைந்தார். அங்கு மனுக்கள் பெற்று செல்வதாக திட்டம். உட்கார்ந்து தங்கள் கருத்தைக் கேட்க வேண்டுமென நிர்வாகிகள் சொல்ல, உட்கார்ந்து விட்டார். இரண்டு ஜமாத் நிர்வாகிகள் பேச, அதனைக் கேட்டு பதிலளித்தார் தளபதி.

நாங்கள் கடிகாரத்தை பார்த்தவாறு இருந்தோம். தொழுகை நேரத்திற்குள் கிழக்கு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும். "நடந்து போயிடலாமா?" என்று கேட்டார் தளபதி. அடுத்தக் கட்ட நடைபயணம்.

ஒரு முதியவர் தளபதியை காணும் ஆர்வத்தில் வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் வர, தளபதி 'டக்' என திரும்பி அந்த வீட்டை நோக்கி சென்றார். நான்கு படிக்கட்டுகள் ஏறி முதியவரை நெருங்கினார். மகிழ்ந்துப் போன முதியவர் தளபதி கரம் பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து தளபதி நடக்க, நாங்கள் ஓடினோம். ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் தளபதி. உயரமான காம்பவுண்ட் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து இரண்டு சிறுவர்கள் ஆர்வமாக கையசைக்க, அவர்களிடம் சென்றார். எக்கி அவர்கள் கரம் பிடித்துக் குலுக்கினார். வாழ் நாளுக்கும் மறக்க மாட்டார்கள் அந்த சிறுவர்கள்.

ஆங்காங்கே நின்ற இஸ்லாமிய பெண்களிடம் குறைகளை கேட்டவாறே நடந்தார் தளபதி. ஒரு மாற்றுத் திறனாளி இளைஞர்  கையில் மனுவோடு நிற்பதைப் பார்த்து கிட்டே சென்றார். அவர் சொன்னதற்கு காது கொடுத்து மனு பெற்றுக் கொண்டார். அந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு சமூக ஆர்வலர்.

இவ்வாறு நடைபயணம் கிழக்கு பள்ளிவாசலை அடைந்தது. அங்கே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஜமாத் நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்கள் கருத்தை தெரிவிக்க, பேச கையில் மைக்கை எடுத்தார் தளபதி. பாங்கு ஒலிக்க ஆரம்பித்தது. பாங்குக்கு இடைவெளி விட்டு பிறகு பேசினார். இஸ்லாமியர்களுக்கு கழகம் பாதுகாவலாக இருப்பதை விளக்கி, அவர்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.

வழியெங்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள் நின்று கையசைத்து உற்சாகமாக, வணங்கியவாறே பயணம் தொடர்ந்தார் தளபதி.

(பயணம் தொடரும் 5....)