பிரபலமான இடுகைகள்

வியாழன், 1 அக்டோபர், 2015

வெளிநடப்பும் பத்திரிக்கைகளும்

முதலில் பத்திரிக்கை முதலாளிகளுக்கு பாடம் நடத்த வேண்டும் போல...

சட்டசபையில் வெளிநடப்பு செய்வது என்பது, எதிர்கட்சிகள் பின்பற்றக் கூடிய ஒரு ஜனநாயக நடவடிக்கை. அதிலும் எதிர்கட்சிகளை பேசவே விடாத சபாநாயகர் இருந்தால், வேறு வழியே இல்லை.

சட்டமன்றத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து, அவைக்கு வெளியே வந்து, பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து, செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது எதிர்கட்சியின் கடமை. இது தான் வெளிநடப்பு என்பது.

பிறகு, மீண்டும் சட்டப்பேரவைக்கு திரும்பி அவை நடவடிக்கையில் கலந்து கொள்வது மரபு. ஆனால் இன்று பத்திரிக்கைகள் வெளி நடப்பு என்றால், சட்டசபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவது போல் சித்தரிக்கப் படாதபாடு படுகிறார்கள்.

அதில் குறிப்பாக தினத்தந்தி. எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் குறித்து "வெளிநடப்பு செய்கிறார்கள். அதனால் தொகுதி வளர்ச்சி பணி பாதிக்கப்படுகிறது" என சிலரிடம் பேட்டி "வாங்கி"ப் போட்டிருந்தார்கள்.

சட்டசபையில் முழு நேரம் இருந்து பணியாற்ற வேண்டிய முதலமைச்சர் அரைமணி நேரத்தில் வெளியேறுவது குறித்து வாய் திறப்பதில்லை இந்தப் பத்திரிக்கைகள்.

இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள், சட்டமன்றம் நடக்கும் நேரங்களில் முழுதும் பங்கேற்பாளர்கள். அத்தோடு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

முதல்வர் ஜெயலலிதா தனது துறையான காவல்துறை மானியத்தில் கலந்து கொள்வதையே செய்தியாக போட்டது தந்தி. "உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்கிறார்" எனத் தலைப்பு செய்தி வேறு. அது முதல்வராக இருப்பவரது  கடமை.

இதுவே நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னும் வித்தியாசமானது. அங்கே சபையின் மையப் பகுதிக்கு சென்று எதிர்குரல் எழுப்பவும் அனுமதி உண்டு. சபாநாயகரை முற்றுகை இட்டும் போராடுவார்கள். கடந்த காங்கிரஸ் அரசு நடந்த போது, பாதிக்கு மேற்பட்ட நாட்கள் அவையை நடத்த விடாமல் முடக்கியது பா.ஜ.க.

ஆனால் இங்கு உறுப்பினர்  தனது இருக்கை அருகே நின்று குரல் எழுப்பினாலே, சபாநாயகர் "ஒக்காருங்க, ஒக்காருங்க" என்று கதறுகிறார். இல்லை என்றால் பேசுவதற்கு மைக் இணைப்பு தர வேண்டும். மைக் தரவும் பயம், காரணம் பதில் சொல்ல அமைச்சர்களுக்கு தெளிவு கிடையாது.

இதுவே கடந்த திமுக ஆட்சியின் போது, தினம்தினம்  அதிமுக வெளிநடப்பு செய்வதே வேலையாக இருந்தார்கள். அப்போது தினத்தந்தி இப்போது போல் புலனாய்வு கட்டுரை எழுதவில்லை .

# ஜெயலலிதா என்றால் தினத்தந்தியின் முதுகெலும்பு 'வெளிநடப்பு' செய்யும் போல  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக