பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

விமான அறிவிப்பு வந்தாச்சி

எமிரேட்ஸ் விமானம் நோக்கி மனம் பறந்தது. ஆனாலும் கடமை இருக்கிறதே. செந்துறை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வாரியங்காவல் சென்றேன். அங்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு ஜெயங்கொண்டம் கிளம்பினேன்.

அப்போது தான் மருதூரில் மூத்த கழகத் தோழர் இறந்த செய்தி. ஜெயங்கொண்டம் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டு, மருதூர் கிளம்பினேன். கத்தாரில் இருந்து அழைப்பு. அண்ணன் சதக்கத்துல்லா பேசினார். "அண்ணா  கிளம்பிட்டீங்களா?".

"இதோ கிளம்பிடுவேன் அண்ணா". மருதூர் சென்று மறைந்த கழகத் தோழருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். இது எதிர்பாராத நிகழ்ச்சி. அரியலூர் சென்று கிளம்பினால், விமானத்தை பிடிக்க சரியாக இருக்கும்.

திருமானூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி அழைத்தார்," காதணி நிகழ்ச்சிக்கு வந்துடுறீங்களா?". "அண்ணா லேட்டாயிடுச்சி. இப்போ கிளம்பினா தான் விமானத்த பிடிக்க முடியும்".

சென்னை கிளம்பினேன். செல்வம் போன் செய்தார்," கிளம்பிட்டீங்களா? இண்டர்நேஷனல் ப்ளைட். மூன்று மணி நேரம் முன்னாடி போயிடுங்க. இமிக்ரேஷன் இருக்கு". ஏற்கனவே டெல்லி போக விமானத்தை தவற விட்டு பெயர் பெற்றவன் நான், மூன்று முறை.

சென்னை சேர்ந்தேன். நேரத்தில் விமான நிலையம் சென்றேன். அதற்குள் கத்தாரில் இருந்து அய்ந்து அழைப்புகள், ரஷீத், குமார், அண்ணன் அரசு ஆகியோரிடம் இருந்து.

இமிக்ரேஷனில் இரண்டு முறை மேலும், கீழும் பார்த்தவர் கேட்டார்,"எதுக்கு கத்தார் போறீங்க?". "ஒரு பிஸினஸ் மீட்டிங்". விசாவை பார்த்தவர், மீண்டும் என்னை பார்த்தார், பிஸினஸ் முகமா தெரியல போல. விசா ஏற்பாடு செய்த அண்ணன் சதக் 'பிசினஸ் விசா' போட்டிருந்தார்.

விமானத்திற்கு ஒரு மணி நேரம் இருந்தது. பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ், "கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்". சிவகணேஷ் போட்டது இப்போ தானா கண்ணில் படனும். கண்ணாடி இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தேன்.

ஒரு வழியா அழைப்பு வந்தது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ். அரபு ஸ்டைல் உடையில் இருந்த விமானப் பணிப்பெண் போர்டிங் பாஸை பார்த்தார். "பர்ஸ்ட் ரைட்" என்றார். சென்னையில் வழி சொல்வது போல் சொல்கிறாரே என நினைத்துக் கொண்டு விமானத்தின் உள் நுழைந்தேன். செகண்ட் ரைட் ஒன்றும் இருந்தது.

விமானத்தில் இருக்கை அமைப்பு  மூன்று வரிசையாய் பிரிக்கப்பட்டு, நடுவில் இரண்டு வழிகள். அதனால் தான் பர்ஸ்ட் ரைட், செகண்ட் ரைட்.  50 வரிசைகளில் 450 இருக்கைகள் இருக்கும்.  ஒரு கிராமத்தையே ஏற்றலாம்.

அறிவிப்பு வந்தது, "flight is going to take off. Please switch off your mobile". அலைப்பேசியை அணைத்தேன். கத்தார் பயணம். உறுதி, இனி ஏதும் அழைப்பு வராது. விமானம் கிளம்பியது.

# கத்தார் பயணம் !