பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கத்தார் வந்தாச்சி

விமானம் கிளம்பியது. மணி 09 45. முகம் துடைக்க நீராவியில் சூடு செய்யப்பட்ட சிறு டவல் கொடுத்தார்கள். முகம் துடைத்து பிரஃஷ் ஆனேன். முன்புற டீவி ஈர்த்தது. துழாவினேன்.

பல சேனல்களில் ஆங்கிலம்,  அரேபி, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களும், பாடல்களும் குவிந்திருந்தன. தமிழ் திரைப்படங்களை ஆராய்ந்தேன். ஒன்றும் ஈர்க்கவில்லை.

தெலுங்கு பட்டியலைப் பார்த்தேன். எல்லாம் ஆக்‌ஷன் மசாலாக்கள். 'டெம்பர்'. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படம். கரம் மசாலா. பரபரவென படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் பூரி ஜெகநாத்.

நல்ல பிரியாணி கொடுத்தார்கள். சுவையான உணவு. உணவை விட அதற்கு முன்பாக கொடுத்த மெனு கார்டு 'டாப்'. வழவழ அட்டையில் ஒரு பக்கம் ஆங்கிலம், ஒரு பக்கம் அரபி, ஒரு பக்கம் தமிழ் என அச்சிட்டிருந்தார்கள். ஒவ்வொரு உணவுப் பதார்த்தம் குறித்தும் தனித்தனி தகவல்கள். அது சிறப்பு .

4.15 மணி நேரம் கடந்து துபாய் விமான நிலையத்தை அடைந்தது. நம் நேரம் அதிகாலை 02.00. துபாய் நேரம் 12.30.  துபாயில் இருந்து தோகா செல்லும் விமானத்திற்கு மாற வேண்டும். அது. 02.30க்கு கிளம்பும். டிரான்சிட்.

விமானத்தில் வந்து, அதே விமான நிலையத்தில் இன்னொரு விமானத்திற்கு மாறினாலும் பரிசோதனை நடந்தது. வரிசையில் முதல் ஆளாக சென்றவர் திருப்பி அனுப்பப்பட்டார். பெல்ட்டை கழற்றி விட்டு மீண்டும் பரிசோதனைக்கு சென்றார். இன்னொருவர் ஷூவை கழற்றி ஸ்கேனர் டிரேயில் வைத்தார். இதை பார்த்த நானும் அலைபேசி, ஷூ, பேனா என எல்லாவற்றையும் டிரேயில் கழற்றி வைத்தேன். இப்போது முதல் ஆள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் இடுப்பில் இருந்து வெள்ளி அரைஞாண் கொடியை உருவிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டி செக் முடிந்து உள்ளே சென்றேன்.

துபாய் ஏர்போர்ட்டை தெரிந்து கொள்ள தனியாக நாள் ஒதுக்க வேண்டும். A1-A50, B1-B50, C1-C50 என என் கண்ணில் 150 வாயில்கள் தென்பட்டன. தோகா விமானத்திற்கான வாயிலை நோக்கி நடந்தேன். ஒரு கிலோமீட்டர் இருக்கும். வழி எங்கும் இருபுறமும் நாற்காலிகளில் பயணிகள் தூக்கத்தில்.

இந்தப்புறமும் அந்தப்புறமுமாக மக்கள் விமானம் பிடிக்க வேக நடையில். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல், தீபாவளிக்கு திமிரும் மக்கள் வெள்ளத்தை இங்கு பார்த்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் முகங்கள். வேறுவேறு நாட்டு முகம், வேறுவேறு நிற முகம் என திணற வைத்தது.

எழுத்தாளர் சுஜாதா அனுபவ நினைவு ஒன்று இப்போது வந்தது. ஒரு விமான நிலையப் பணியாளரை அழைத்து கேட்டேன்," சென்னையில் இருந்து தோகா செல்கிறேன். இங்கு டிரான்சிட். பெட்டிகள் பாதுகாப்பாக வந்துவிடுமா ?". அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். "it will come", என்றார் அரேபிய ஆங்கிலத்தில் அலட்சியமாக.

02.30க்கு துபாயில் விமானம் ஏறி, 02.35க்கு தோகாவில் இறங்கினேன். குழப்புதா?. துபாய்க்கும் கத்தாருக்கும் ஒரு மணி நேர வித்தியாசம். ஒரு மணி நேரப் பயணம். இங்கு இமிக்ரேஷன். கண்ணை படம் எடுத்து, பாஸ்போர்ட்டில் சாப்பா குத்தி துரத்தி விட்டார்கள்

லக்கேஜ் எடுக்க கன்வேயர் பெல்ட் அருகில் சென்றேன். அங்கு நின்ற பணியாளர்கள் மூன்று பையை காட்டி "இதில் உங்களுடையது இருக்கிறதா?" என வினவினர். இல்லை என்றேன். "நேராக சென்று வலதுப் பக்கம் திரும்புங்கள். கம்ப்ளெயிண்ட் செக்‌ஷன். உங்கள் பெட்டி துபாயில் தங்கி விட்டது. புகார் கொடுத்து விடுங்கள்". மாற்றக் கூட கையில் உடை இல்லாத சோகத்தோடு ஒரு கிலோ மீட்டர் நடந்து கம்ப்ளெயிண்ட் பிரிவை அடைந்தேன்.

உள்ளே போனதும் மகிழ்ச்சி. விமானத்தில் பார்த்த 20 பேர், பெட்டி வரவில்லை என்று நின்றார்கள். பொறுமையாக விபரம் கேட்டு புகாரை கணினியில் பதிந்து ரசீது கொடுத்தார்கள். இடையில் ஃப்ரீ வை பையில் குமாருக்கு வாட்சப் செய்தேன். அவர், "நாங்கள் வாயிலில் நிற்கிறோம். கவலைப் படாதீர்கள். பெட்டியை வரவழைத்து விடலாம்"என செய்தி அனுப்பி, ஒரு விமான நிலைய செக்யூரிட்டியையும் அனுப்பி வைத்தார், என்னை வெளியில் அழைத்து வர.

ஒரு வழியாக தோகாவில் கால் வைத்தேன். கருப்பு சிகப்பு டீஷர்ட்டில் அப்துல் ரஷீத் கையசைத்தார். 15க்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் திரண்டிருந்தனர். சால்வை போட்டு வரவேற்க, மற்ற பயணிகள் வினோதமாக பார்த்தனர்.

# கத்தார் வந்தாச்சி !