பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மகராசியே, மக்களை காத்திடுக இல்லை எனில்

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கம்.

இந்தக் கடிதம் தங்களை விமர்சிப்பதற்காக அல்ல. ஒரு சில யோசனைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது தான் நோக்கம். அதன் மூலமாக இந்த சமூகத்திற்கு சிறு துளியாவது உதவிடலாம் என்ற எண்ணம் தான் காரணம்.

சென்னை மாநகரமும், கடலூர் மாவட்டமும் தண்ணீரில் மட்டுமல்ல, கண்ணீரிலும் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள். உதவிக்கரத்திற்காக அவலக் குரல் கேட்ட வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான தனிமனித உதவிக் கரங்கள் உங்களை எதிர்பார்க்காமல் நீண்ட வண்ணம் தான் உள்ளன.

ஆனால் இதைத் தாண்டிய ஒற்றைக் கரம் உங்களிடம் தான் உள்ளது. அதிகாரக் கரம், அரசுக் கரம்.

திருச்சி, மதுரை, கோவை மாநகராட்சி ஊழியர்களை கொண்டு வந்து சென்னையில் இறக்கினால், மூன்றே நாட்களில் சென்னையில் சேர்ந்துள்ள வெள்ளக் கழிவுகளை சுத்தப்படுத்தி விடலாம்.

மழை பாதிக்காத சேலம், கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களை கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரம் பணிபுரிய சொன்னால், வெள்ள நீரை வடிக்கும் பணியை துரிதப்படுத்தலாம்.

தனியார் மருத்துவமனையான கோவை பி.எஸ்.ஜி அய்.எம்.எஸ் மருத்துவர்கள் சென்னை வந்து தன்னார்வலர்களாக சேவை செய்யும் போது, அரசு மருத்துவத் துறை மருத்துவர்களை கடலூர், சென்னையில் பேரிடர் காலப் பணியாற்ற செய்ய அரசால் இயலாதா.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சரி, ஏற்கனவே நடந்ததை கொஞ்சம் பார்ப்போம்.

பொதுப்பணித் துறை முறையாக செயல்பட்டிருந்தால் இத்தகைய பிரச்சினையே வந்திருக்காது. செயல்படாததற்கு யார் காரணம் என்று சற்றே ஆராய்ந்தேன். செம்பரம்பாக்கம் ஏரியின் லஸ்கர் (கரைக்காவலர்) தான் இவ்வளவுக்கும் காரணம்.

அவரது நண்பரை சந்தித்துக் கடிந்து கொண்டேன். "ஏரி நிரம்பப் போவதை முன் கூட்டியே உதவிப் பொறியாளரிடம் சொல்லி இருந்தால் இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்காதே" என்று கேட்டேன்.  அவர் ஓங்கி கன்னத்தில் அறையாதக் குறையாக கேட்டார்,"உனக்கு தெரியுமா, அவர் சொல்லவில்லை என்று ?"

"அவர் உதவிப் பொறியாளரிடம் சொல்லி விட்டார். அவரும், அவர் கடமையை செய்து விட்டார். தகவல் முறைப்படியாக துறை மேலிடம் வரை சென்று, அமைச்சர் அலுவலகத்தையும் அடைந்து விட்டது. அங்கிருந்து சரியான வழிகாட்டுதல் கடைசி நிமிடம் வரை வரவில்லை.".

"இப்போதும் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் முதல்வர் அறிவிப்பதாகத் தானே வருகிறது.  நிரம்பிய பாபநாசம் அணை திறந்துவிடுவது கூட முதல்வர் அறிவிப்புப்படி என்று தானே வந்துள்ளது. அப்படி என்றால் இதற்கு யார் உத்தரவு வழங்கியிருக்க வேண்டும்".

"முன்னமே ஆராய்ந்து முடிவெடுத்திருந்தால், தினம் கொஞ்சம், கொஞ்சமாக திறந்து விட்டிருக்கலாம். ஒரேடியாக சேர்ந்த பிறகு திறந்ததனால் தான் இந்த பெரும் அவலம்" என்றார் அவர்.

"ஆமாம் ஒரேடியாக 25,000 கன அடி திறந்துவிட்டால் ஆறும் கொள்ளாது தானே"

"அடப்பாவமே, திறந்து விட்டது 50,000 கன அடி"

"என்னது ?"

"பதறாதீங்க. உண்மை இது தான். முன்னாடியே முடிவெடுத்திருந்தா ஒவ்வொரு நாளும் 10,000 கன அடியா திறந்து விட்டிருக்கலாம். இப்படி ஆயிருக்காது"

இதில் இருந்து மூச்சு தெளிவதற்குள், இன்னொரு மருத்துவ நண்பரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல் . 'தேங்கியிருக்கும் தண்ணீரில் இறந்து கிடக்கும் எலி, நாய் போன்ற பல்வேறு  விலங்குகளால் பெருமளவில் நோய் பரவ இருக்கிறது. ஆனால் அரசு பயிற்சி மருத்துவர்களை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக பேர் செய்து கொண்டிருக்கிறது. இனியும் விழிக்கவில்லை என்றால் சிரமம் தான்.'

உங்கள் உடல்சூழலுக்கு தண்ணீரில் இறங்கிப் பார்வையிடுவது என்பதோ, மாநிலம் முழுதும் வெள்ளம் பாதித்த இடங்களை சுற்றிப் பார்த்து ஆறுதல் கூறுவதோ இயலாத காரியம். இதை நான் நன்கறிவேன்.

ஆனால் நீங்கள் எளிதாக இரண்டு விஷயங்களை செய்திருக்கலாம். ஒன்று, அரசு அலுவலர் போல காலை 10.00 மணிக்கு தலைமை செயலகம் வந்து மாலை 05.00 மணி வரை சும்மா உட்கார்ந்துவிட்டு அரசு இயந்திரம் அசுர வேகத்தில் சுழலும், சுழன்றிருக்கும். மற்றொன்று, தொலைக்காட்சியில் தோன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கும் வகையில் உரையாற்றி இருக்கலாம்.

சரி, இதை எல்லாம் விடுங்கள். இப்போதாவது முன்னெச்சரிக்கையாக இருங்கள். மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கவாவது குறைந்தபட்ச நடவடிக்கை எடுங்கள்.

மாசியில் பிறந்த மகராசியே, மக்களை காத்திடுக. இல்லை என்றால்...

அன்புடன்
தமிழக வாக்காளன்
சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக