பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 டிசம்பர், 2015

முறுக்கு பாய்

சர்புதீன் அலைபேசியில் பதற்றமாக பேசினார்," நம்ம கட்சிக்காரர் ஒருவர் ரயில் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார். திருச்சியில் போஸ்ட்மார்ட்டம் நடக்குது. மாலை உடல் செந்துறை வந்துடும். வந்துட்டு போங்க".

அவர் இருந்தப் பதட்டத்தில் இறந்தவர் யார் என்பதை கூறவில்லை. ஞாயிற்றுக்கிழமை. துறையூர், திருமானூரில்  இரண்டு திருமணங்களில் கலந்துக் கொண்டு, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி  தாயார் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போது தான் இந்த அழைப்பு.

அன்று அது ஒன்பதாவது இறப்பு செய்தி. மற்ற இடங்களுக்கு சென்று மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு செந்துறையை அடையும் போது இரவு மணி 7.00. உடல் அடக்கம் முடிந்து அவர்கள் இல்லத்தார் வீடு திரும்பிய நேரம்.

காரில் இருந்து இறங்கி, சந்தில் நடந்தோம். "யார் இறந்தது ?" என்று கேட்டேன். "நம்ம முறுக்கு பாய்" என்றார் உடன் வந்த சர்புதீன். நினைவு கூர்ந்து பார்த்தேன், எனக்கு புரியவில்லை. அதற்குள் சந்தின் இறுதியை அடைந்தோம்.

எளிமையான ஓட்டு வீடு. வீட்டுக்கு வெளியில் மரத்தடியில் நாற்காலி போடப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள் இருந்தனர். "எப்படி விபத்து நடந்தது". "திருச்சி ஜங்சனுக்கும் பொன்மலை ஸ்டேஷனுக்கும் இடையில் நடந்திருக்கு. எப்படி விழுந்தார்னு தெரியல".

"கால்ல ரயில் ஏறியிருக்கு. மற்ற பயணிகள் பார்த்துட்டு போலீஸில் சொல்லி தான் போய் பார்த்திருக்கிறார்கள். அப்புறம் எங்களுக்கு தகவல் வந்து போனோம்"என்றார் அவரது உறவினர்.

நான் வந்துள்ளதை கேள்விப்பட்டு வந்த அண்ணன் சின்னத்தம்பி, "நம்ம முறுக்கு பாயா செத்து போனது?. எனக்கு தெரியாம போச்சே. ரயில்ல ஏறுனா, முறுக்கு விக்கிறாரோ இல்லையோ, கட்சிய பத்தி தான பேசிகிட்டு இருப்பாரு. தலைவர யாராவது குறை சொல்லிட்டா சண்டை தான்" என்றார்.

உடன் வந்த பாஸ்கர்,"காலையில் எழுந்து கிளம்பிடுவாரு. பக்கத்துல ஆபிஸ் இருக்கறதுன்னால பார்த்திருக்கேன். நான் கூட வேலையில் இருக்கிறாருன்னு நினைச்சேன். அப்புறம் தான் முறுக்கு வியாபாரம்னு தெரிஞ்சுது. கையில் தினகரன் பேப்பரோடு போவாரு".

"பல நாள் பாசஞ்சர்ல பார்த்திருக்கேன். கட்சிப் பேச்சு தான்", என்றார் பைலட் பழனிசாமி. "ஒரு கூட்டம் விடமாட்டாரு. கடைசி வரிசைல தான் உக்காருவாரு",என்றார் சர்பு. முகத்தை யோசித்துப் பார்த்தேன். வரவில்லை.

சந்தின் அடுத்த முனையில் சாலை பக்கம் பார்த்து ப்ளெக்ஸ் பேனர் தெரிந்தது. போகும் போது, அதில் முகம் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

வீட்டினுள் இருந்து ஒரு இளைஞர் வந்தார். "இவர் தான் அவர் மருமகன். ஒரு பொண்ணு, ஒரு பையன். பையன் வெளிநாட்டில் இருக்கிறார்"என்றார் சர்பு.

வணங்கிய மருமகன்  சொன்னார், "வீட்டில் இருந்தார்னா கலைஞர் டிவி சேனல் தான் ஓடனும். அவர் உடலுக்கு பக்கத்தில் கிடந்த அவர் மணி பர்ஸ எடுத்துப் பார்த்திருக்காங்க. பத்துப் படம் கலைஞர் படம் தான் இருந்திருக்கு". என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து, ஆறுதல் கூறி கிளம்பினேன். மறக்காமல் பேனரைப் பார்த்தேன்.  செந்துறை பகுதியில் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர்  நான். ஆனால் என் கண்ணில் பட்டதே இல்லை இவர். "சையது முகம்மது கனி".

"யார் கிட்டயும் எதுக்கும் வரமாட்டாரு. தான் உண்டு, யாவாரம் உண்டு. ஆனா கட்சியும், கலைஞரும் உயிர். அவர் பாட்டுக்கு பிரச்சாரம் பண்ணிகிட்டு இருப்பாரு", என்றார் சர்பு.

# "முறுக்கு பாய்"கள் தான் கழகத்தின் அடித்தளக் கற்கள் !