பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஊருக்கு உழைத்தவருக்கு மரியாதை

"காலையில் ஒன்பது மணிக்கு தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து வாங்குவதாக திட்டம். ஆனால் ஒரு மணிக்கு தளபதியே அவரை பார்க்க வர்ற நிலைமை ஆயிடுச்சே", சொல்லும் போதே வழக்கறிஞர் அண்ணன் கண்ணதாசனுக்கு கண்ணீர் கட்டுப்படாமல் ஓடுகிறது.

இன்று (18.12.2015) சென்னை வந்த உடன் வழக்கறிஞர் கவிகணேசன் இடமிருந்து குறுந்தகவல். "நமது ஆரோக்கியதாஸ் அண்ணன் நம்மை விட்டு பிரிந்து விட்டார்". அலைபேசியில் அழைத்தேன். "போஸ்ட்மார்ட்டம் முடியப் போகுது அண்ணா", என்பதை கூட அவரால் சொல்ல முடியவில்லை. உடைந்து அழுகிறார்.

திருவொற்றியூர் நோக்கி பயணித்தேன்.  ஆகஸ்ட் மாதம் தான் அவரை சந்தித்தேன். அண்ணன் கண்ணதாசன் அவர்களோடு ஆய்வுப் பணிக்கு வந்தார் அண்ணன் தாஸ், திருவொற்றியூர் நகர துணை செயலாளர். இரண்டு முறை கவுன்சிலராகப் பணியாற்றியவர். இவர் மீண்டும் கவுன்சிலராகக் கூடாது என்பதற்காக, பெண்கள் வார்டு ஆக மாற்றப்பட்டது.

மிக எளிமையான மனிதராக இருந்தார். இரண்டு நாட்கள் அங்கு இருந்ததில் எங்களோடு அன்னியோன்யமாகி விட்டார்.

"நீங்க அமைச்சர் கே.பி.பி.சாமி அழைப்பில் திருவொற்றியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பார்த்தேன். அதில் இருந்து உங்கள் சட்டமன்ற உரைகளை படிப்பேன். என் மகள் உங்கள் பேஸ்புக் தகவல்களை காட்டுவார். சென்னை வரும் போது அவசியம் வீட்டுக்கு வர வேண்டும்" என அழைப்பு விடுத்தார். "எனக்கும் திருவொற்றியூருக்கும் தொடர்பு நீடிக்குது. அவசியம் வர்றண்ணே",என்றேன்.

ஆனால் இப்படி அவர் வீட்டுக்கு செல்ல நேரிடும் என நினைக்கவில்லை. திருவொற்றியூர் அடைந்தேன். கடற்கரைக்கு எதிர்புறம். ஆம்புலன்ஸ் வந்தது. ஓ' வென்று அழுகுரல். சாலையில் இருந்து பிரியும் சிறுசந்து. இரண்டு பேர் சென்றால் உரசிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

பெரும் கூட்டம். தாஸ் அண்ணன் இளைய  மகள் ப்ரீஸர் பெட்டி மீது ஓங்கி அறைந்து அழுது கொண்டிருந்தார். மூன்று மகள்கள். பெண்கள் கூட்டம்  தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு இருந்தனர். "தாஸு, புள்ளையோல இப்படி விட்டுட்டு போயிட்டியே", ஒரு பெண்மணி கதறினார்.

அண்ணன் பொள்ளாச்சி உமாபதி கலங்கிய கண்களோடு மாலை வைத்தார். நிற்க இடமில்லை. வெளியில் வந்தோம். இளைஞர் கூட்டம். வருபவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். உழைக்கும் மக்கள் வாழும் இடம். அண்ணன் தாஸ் மீதான அந்த மக்களின் பேரன்பு வெளிப்பட்டது.

அண்ணன் கண்ணதாசன் அடுத்த தெருவிற்கு அழைத்து சென்றார். ஒரு தளம் கொண்டப் பழையக் கட்டிடம். அதன் மொட்டை மாடியைக் காட்டி,"இங்கிருந்து தான் விழுந்து விட்டார். ஓடுகளை நகர்த்தும் போது, காலை பின்புறம் தவறி வைத்திருக்கிறார்".

ஒரு முதிர்ந்த இஸ்லாமியப் பெண்மணி,"தாஸு விழுந்தப்ப நாங்க தான் இருந்தோம். இந்தக் கல்லு மேல தான் தலை பட்டுடிச்சி. நாங்க வந்து தூக்கிப் பாத்தோம். ஆனா...", என்று சொல்லும் போதே அவருக்கு கண்கள் குளமானது.

"வெள்ளம் வந்தப்ப காலையிலேயே பால் பாக்கெட்டோடு, இடுப்புயர நீரில் என்னைப் பார்க்க ஆதிகுருசாமியோட வீட்டுக்கு வந்துட்டார். அப்புறம் சமைச்சு எடுத்துக்கிட்டு நாங்க போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுத்தோம்"என்று அந்தப் படங்களைக் காட்டினார் அண்ணன் கண்ணதாசன்.

"வெள்ளப் பணிகளில் இறந்துப் போன மாணவன் இம்ரான் பக்கத்து தெரு தான். என் கிட்ட அத சொல்லி வேதனைப் பட்டார் தாஸ். நாங்க தான் அத மீடியாவுக்கு தெரிவிச்சோம். தளபதிக்கு சொல்ல சொன்னார். தளபதி ஆறுதல் கூற வந்தாங்க. தன் மகள் நகையை அடமானம் வச்சி, அந்தக் குடும்பத்துக்கு அம்பாதயிரம் ரூபா குடுத்தாரு தாஸ். இவ்ளோ நல்ல மனசு கொண்ட மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமை", அதற்கு மேல் அண்ணன் கண்ணதாசனால் பேச முடியவில்லை.

இப்போது வீட்டிலிருந்து அவரது உடலை பொது இடத்தில் கொண்டு வந்து வைத்தார்கள். சுற்றிலும் சவுக்குக் கட்டையால் கழகத் தோழர்கள் பேரிகார்ட் அமைத்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளே, அவரை அந்த எளிய மக்கள் எப்படி ஒரு தலைவனாக வரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

# ஊருக்கு உழைத்தவருக்கு ஊரே கூடி மரியாதை செய்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக