பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இனிய மனம் இசையை அனைத்து

"போன எடுத்தப் பிறகும் எப்படி காலர் டியூன் ஓடிகிட்டு இருக்கு". "ஹலோ இங்க கம்ப்யூட்டர்ல ஓடிகிட்டு இருக்குங்க". இது நேற்று இரவு. ஸ்டேடஸை போட்டுவிட்டு பாட்டை மீண்டும், மீண்டும் நான் ரசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

காலை 6.15க்கு அப்துல்லா அண்ணன் கூப்பிட்ட மிஸ்ட் காலை 7.20க்கு பார்த்துக் கூப்பிட்டேன். "அண்ணே, ஒரு க்யூரியாசிட்டி தான். காலர் டியூன் கேக்க தான் அடிச்சேன்". இது வரை அலைபேசி ஓயவில்லை. ஏதோ நம்மால் முடிந்த இசை சேவை.

"லலாலா லாலாலா" என சுஜாதா ஹம் செய்ய ஆரம்பிக்கும் போதே நாம் வசியப் பட்டு விடுவோம். மெல்ல ராஜா நம்மை மெல்லிசையால் நிமிர்த்துவார். கங்கை அமரனின் எளிய, இனிய வரிகள் சுஜாதா குரலில் தேன் மழை தான்.

"ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்"

இசை ஜாலம் துவங்கும். ஆஹா நம்மை அப்படியே ஆழ்த்தி விடும். என்ன வாத்தியத்தை வைத்து என்ன இசைப்பாரோ, நம் மனதைத் தடவிக் கொடுக்கிறது.

"ஜீவனானது இசை நாதமேன்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா...எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது ...."

சுஜாதாவின் தாலாட்டும் குரலோடு தபேலா மாத்திரமே இணைந்து பயணிக்கிறது. ஆனால் பாடுவதிலேயே நம்மை தாலாட்ட வைப்பார் ராஜா.

"மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த காலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே
அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்"

இசையை கொண்டாடும் பாடல். இசையே இசைத்து மகிழ்விக்கும் பாடல். மென்மையாக, எளிமையாக இசையமைத்து கொண்டாட வைத்து விடுகிறார். ஜானியில் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை தான். இது ஒரு வகை சிறப்பு.

பாடலை வீடியோவில் பார்த்தால், அது இன்னும் ஒரு விதமாக பரவசப்படுத்தும். மகேந்திரன் இயக்கத்தில், ஶ்ரீதேவியின் நடிப்பும், ரஜினியின் மேனரிஸங்களும் ரசிக்க வைக்கும். சின்ன, சின்ன அசைவுகளிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்கம்.

புதிய படமான 'தாரை தப்பட்டை'  இசை குறித்து எழுத வேண்டும் என்று இருந்த வேளையில், அழகர்ராஜா இந்தப் பாடல் குறித்து எழுத வைத்து விட்டார். பலரும் 80க்கே போய் விட்டார்கள்.

# ஒரு இனிய இசை மனதை அணைத்துச் செல்லும் !