பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

என்ன வாழ்க்கை

திருமண அழைப்பிதழ் கொடுக்க வேல்மணி வந்தார், நேற்று முன்தினம். தயங்கி, தயங்கி அழைப்பிதழை கொடுத்தார். பா.ம.க பிரமுகர்கள் படம் போட்ட அழைப்பிதழ், அதனால் தான் தயங்கியிருக்கிறார். பெற்றுக் கொண்டு கேட்டேன், "முகூர்த்தத்திற்கு வரவா, உங்களுக்கு சங்கடம் இல்லையே".

"எப்போ முடிந்தாலும் வாங்கண்ணா. வந்து வாழ்த்தினீங்கன்னா சந்தோஷம்" என்று சிரித்தார். "தா.பழூர் திருமணத்திற்கு போகும் முன் வந்து விடுகிறேன்", என்று சொல்ல, மகிழ்வாய் விடைபெற்றார். அவர் பா.ம கவை சேர்ந்தவர், பொன்பரப்பியில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.

ஒரு முறை இரவு பொதுக்கூட்டத்தை ஒரு கிராமத்தில் கலந்து கொண்டு வரும் போது கடும் பசி. பொன்பரப்பி பாண்டியனிடம் தொடர்பு கொண்டு சொன்னவுடன், "வேலு கடையில் சொல்லி வைக்கிறன். வாங்க" என்றார். மணி 11.00. கடையை மூடும் நிலையில், எங்களுக்காக தோசை சுட்டுக் கொடுத்தார் வேலு. அது தான் அறிமுகம். அவர் கடைக்கு சென்று சாப்பிட்டதில், என் மீது அன்பு.

சென்னை சென்று ஒரு உணவு விடுதியில் பணியாற்றி மெல்ல, மெல்ல முன்னுக்கு வந்தவர் வேல்மணி. பிறகு சொந்த ஊர் பொன்பரப்பிக்கு திரும்பி, கடை ஆரம்பித்து நல்ல நிலையில் இருப்பவர். நண்பர்களுக்கு கணக்கு பார்க்காமல் உதவும் மனம் கொண்டவர்.

அவருக்கும் சுகந்திக்கும் திருமணம் உறுதியாகியது. அந்த அழைப்பிதழை வைக்க தான் வந்தார் வேல். 31.01.2016 அன்று  திருமணம் என்ற நிலையில் திருமண வேலைகளை பரபரப்பாக பார்த்து வந்தார் .

மணமகள் சுகந்தி அதே பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பம். திருமண செலவுகள் முழுமையையும் வேல்மணி பார்த்து வந்தார். நேற்று நண்பகல் சுகந்தியிடம் இருந்து அழைப்பு. "அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திருமண உதவி தொகைக்கு விண்ணப்பம் அளித்து வருகிறேன்", என்று தெரிவித்திருக்கிறார்.

"அம்மா சாவித்திரி மற்றும் அக்காள் கணவர் ஸ்டாலினுடன் பைக்கில் போகிறேன்" என சுகந்தி சொல்ல, வேலு காரில் போக சொல்லியிருக்கிறார். மறுத்த சுகந்தி "பைக்கிலேயே போகிறேன்" என்று சொல்லி கிளம்பியிருக்கிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் அலைபேசி அழைப்பு.

அரியலூர் நெருங்கும் முன் தாமரைக்குளம் கிராமத்தில் சிமெண்ட் லாரி, பைக் மீது மோதி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மரணம். லாரி டிரைவர் மீது தவறு.

இரண்டு ஆண்டுகள் முன், இதே சாலையில் சிமெண்ட் லாரி, பேருந்து மீது மோதி 15 பேர் மரணம். கடந்த ஆண்டு பள்ளி வேன் மீது லாரி மோதி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மரணம். இப்போது இது. இன்னும் ஆட்சி நிர்வாகம் தூங்குவதே காரணம்.

இன்று, சுகந்தி உடல் அருகே நொறுங்கி உட்கார்ந்திருந்த வேல்மணியை தேற்ற முயன்று தோற்றோம். "போகிறேன்" என்று சொல்லி போய் விட்டாளே என்று புலம்பியபடி இருந்தார். இறந்த ஸ்டாலின், நண்பர் பாக்கியராஜின் தம்பி.  ஸ்டாலினின் 7வயது, 4வயது குழந்தைகள் இருவரையும் பார்த்து எங்களுக்கும்  கண் கசிய ஆரம்பித்தது.

இறுதிப்பயணத்தில், சுடுகாடு நோக்கி மூன்று உடல்களும் ஒருங்கே பயணிக்க, ஊரே கண்ணீர் வடித்தது. சுடுகாடு சென்று கிளம்பினோம். மாலை மணி 5.30. காரின் முன்பக்கம் அந்த அழைப்பிதழ் இருந்தது. முகூர்த்தம் நாளை காலை "7.30-9.00".

# என்ன வாழ்க்கை இது.