பிரபலமான இடுகைகள்

சனி, 9 ஜனவரி, 2016

நான் தனுஷ்

நான் எங்கு சென்றாலும் சிறுவர்களை, இளைஞர்களை கண்டால் நின்று அளவளாவுவது வழக்கம். அப்படி தான் இந்தப் படமும். ஆனால் இந்தப் படம் செம ஹிட் ஆகி விட்டது. என்ன நடந்தது எனத் தெரிந்துக் கொள்ள எல்லோருக்கும் ஆர்வம். கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.

கனமழையில் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருந்தேன். வங்காரம் கிராமத்தில் இருந்து அலைபேசி அழைப்பு. "ஏரி நிரம்பிடுச்சி. தண்ணி போக்குப் பாதை அடைபட்டு இருக்கு. அதனால தெருவுல தண்ணி ஏறுது. ஏதாவது நடவடிக்கை எடுங்க."

செந்துறை வட்டாட்சியரிடம் பேசினேன். உடனே நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். பிறகு ஊர்க்காரர்களிடம் இருந்து அழைப்பு. "தாசில்தார் ஜே.சி.பி அனுப்பிட்டார். வேலை நடக்குது. பக்கத்தில் இருந்தா வந்தீங்கன்னா பரவாயில்ல". சென்றேன்.

பார்வையிட்டு ஆலோசனைகள் கூறிவிட்டு, அயன்தத்தனூர் கிளம்பினேன். வழியில் இருக்கும் தெருவையும் பார்த்து விடலாம் என இறங்கினேன். காரில் இருந்த ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததால் இறங்க தாமதம்.

அடுத்தக் கார் வந்து சேரவில்லை. ஊர்க்காரர்களும் முதல் இடத்தில் இருந்து வந்து சேரவில்லை. அப்போது தான் படத்தில் இருக்கும் இந்தப் பெரிய மனிதர்கள் கண்ணில் பட்டார்கள். கிட்டேப் போனேன். இயல்பாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

"பள்ளிக் கூடம் போகலையா?" என்றுக் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு பதில் வந்தது,"மழை பெய்யுதுல்ல. லீவ் விட்டுட்டாங்க". இது தெரியாம இருக்கியே என்பது போல ஒரு அலட்சியப் பார்வை. இந்தப் பல்புலாம் நமக்கு பெரிய விஷயமா.

"எந்த ஸ்கூல்?". "செந்துறைல". "செந்துறைல எங்க?". இப்ப கேள்வி என் மீது பாய்ந்தது,"செந்துறைல ரெயில்வே ஸ்டேஷன் தெரியுமா?". "தெரியும்". "அதுக்கு பக்கத்துல". "தெரஸா ஸ்கூலா?". "ஓ, தெரியுமா?"

"சரி. உன் பேர் என்னா?". " தனுஷ்". "ஓகோ சினிமா நடிகரா". இப்போது பார்வை கொஞ்சம் கூர்மையானது. பக்கத்தில் நின்றவரிடம், " உன் பேர் என்ன சிவகார்த்திகேயனா?". "இல்ல சார். வெறும் கார்த்தி தான்". சட்டை போட்டிருப்பவர் தனுஷ், சட்டை போடாதவர் கார்த்தி.

இந்த சமயத்தில் அண்ணன் ஞானமூர்த்தி வந்துவிட்டார். "என்ன பேட்டி" என்றுக் கேட்டார். "இவரு தனுஷ் ண்ணே"என்றேன்.  கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் தனுஷை பார்க்க, அவன் என்னை ஒரு பார்வை பார்த்தான். அதன் அர்த்தம் இதுவாகத் தான் இருக்கும்,"இது தேவையா?"

அதற்கு மேல்,  தனுஷ் ஹீட்டாகலாம் என்பதால் நடையைக் கட்டினேன்.

# VIP தனுஷ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக