பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

இவ்ளோ அக்கப்போரா ?

வழக்கமாக சென்னை என்றால் பேண்ட், சர்ட் தான். அதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கியக் காரணம் சட்டமன்றக் கூட்டம் தான். அடிக்கடி என்னை  வெளியேற்றுவது சபாநாயகருக்கு பொழுதுபோக்கு என்பதால், ஒரு பாதுகாப்புக்கு பேண்ட். 2001-06ம் ஆண்டு சட்டமன்றத்தில் அண்ணன் பரிதி, வேட்டி இழந்து வெளியேறி, அன்றோடு பேண்ட் போட ஆரம்பித்தவர் தான். அது தான் காரணம்.

அன்று சட்டமன்றத்திற்கு கலர் சட்டையை எடுத்துப் போட்டேன். "என்ன சட்டசபைக்கு கலர் சட்டை போட்டுகிட்டு போறீங்களா?", என்று வினவினார் இல்லத்தரசி. "வலைதளக் கருத்தரங்குக்கு செல்ல வேண்டும். அதனால் தான்" என்றேன். "சட்டை லூசா தெரியுது. இன்சர்ட் செஞ்சிக்கிங்க",என்றார். பெல்ட்டை தேடினேன், அரியலூரில் கிடப்பது நினைவு வந்தது. ரொம்ப நாளாகி இருந்தது, இன் செய்து.

இன்சர்ட் செய்தால், கொஞ்சம் டிரிம்மாகவே தெரிந்தது. "பெல்ட் வாங்கி போட்டுடுங்க", ஆலோசனை வழங்கினார். அண்ணாசாலையில் கடைகள் திறக்கப்படவில்லை. தியாகராய நகர் சென்று பெல்ட்டை பிடித்தேன். கடையிலேயே இன்சர்ட் செய்து, பெல்ட்டை மாட்டிக் கொண்டேன். மடித்து விட்டிருந்த முழுக்கை சட்டையை நீட்டிவிட்டு, பொத்தான் போட்டேன். நேரே சட்டமன்றம் சென்றேன். காரில் இருந்து இறங்கும் போதே தேவராஜ் பார்த்து சிரித்தார்.

தினமலர் போட்டோகிராபர் ரமேஷ் கிளிக் செய்தார். "ஏன் சார்?" என்றேன். "டிபரண்ட் கெட்டப். புரொபைலுக்கு ஆகும்" என்று சிரித்தார். தளபதியை வரவேற்க வெளியில் வந்தார் கொறடா அண்ணன் சக்கரபாணி. மேலும், கீழும் பார்த்தவருக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை.

அண்ணன் தங்கம் தென்னரசு ஒரு நிமிடம் திகைத்துப் பார்த்தார். "தம்பி, என்ன ஆச்சு? பெல்ட்டு, இன்சர்ட், அடடே ஷூ வேறயா?"என்றார். "ஏண்ணே, காலேஜ்ல ரேகிங் பண்ணாத சீனியர், இப்ப ஏண்ணே ?",என்றுக் கேட்டேன். "ஆரம்பத்தில் செஞ்சிருந்தா சரி. இப்ப கடைசி காலத்தில் ஏன் இந்த வேலை?", என்று சிரித்தார்.

வலைதளக் கருத்தரங்குக்கு செல்வதை சொன்னேன். "இங்க பாருங்க. போற கூட்டத்துக்காக கெட்டப் மாத்திக்கிறாரு" என சொல்ல, சுற்றி கழக எம் எல்.ஏக்கள் நின்று சிரிக்க, மூன்று நிருபர்கள் எங்கள் கூட்டத்தை புகைப்படம் எடுத்து கலாய்த்தனர். அந்த நேரத்தில் தளபதி வந்துவிட்டார்கள். உடன் வந்த அண்ணன் ஏ.வ.வேலு,"ஏம்பா, இன்ஸ்பெக்டர் கெட்டப்?",என்று சிரித்தார். விஷயத்தை சொன்னேன்.

அறிவாலயம் போனால், அங்கு அதற்கு மேல். "என்ன அய்.டி எம்ப்ளாயின்னு எண்ணமா ?", அம்பாக ஒரு அண்ணன். செல்பி எடுத்த ஒரு தம்பி காதோடு,"அண்ணே, கிளாஸ் எடுக்கறதுக்காக, காலேஜ் புரொபசர் மாதிரி கெட்டப்பா?".  ஒரு சீனியர் புகைந்தார்,"யூத்ன்னு நெனப்பா?".

மறுநாள் நீலநிற சட்டை போட்டு இன் செய்தேன். சட்டமன்றம். இன்றும் கலாட்டா, " இப்படியே கண்டினியூ பன்ற ஐடியாவா?".  "டி.ஆர்.பி.ராஜாவுக்கு கம்பெனி",என்றேன். "அப்ப இனிமே இப்படிதானா?". "அண்ணே 1200 ரூபா குடுத்து பெல்ட் வாங்கிருக்கேன், நாலு நாளைக்கு போடக்கூடாதா? விடுங்கண்ணே",என்றேன்.

பேரவைக்குள் நுழையும் போது சபைக்காவலர் நிறுத்தப் பார்த்தவர், அடையாளம் தெரிந்து அனுமதித்தார்.  காரிடரில் எதிர்புறம் அமைச்சர் ஓ.பி.எஸ் வந்தார். உற்றுப் பார்த்தவர்,"இது என்ன மாறுவேஷம்?"என்றுக் கேட்டார். "சும்மா ஜாலியாண்ணே",என்றேன்.

வீட்டுக்கு வந்ததும், முதலில் பெல்ட்டை கழட்டி பீரோவில் வைத்து விட்டேன்.

# ஒரு இன்சர்ட், பெல்ட்டுக்கு இவ்ளோ அக்கப்போரா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக