பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 15 மார்ச், 2016

பிணம் தின்னும் ஃபைனான்ஸ்கள்

அழகர். 26 வயது இளைஞர். திருமணமாகி மூன்று வருடம் தான் ஆகிறது. நேற்றைய முன்தினம் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். காரணம் டிராக்டர் வாங்க கடன் அளித்திருந்த தனியார் நிதிநிறுவனத்தார் செய்த கொடுமை .

அரியலூர் வட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி மகன் அழகர். தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கி இருக்கிறார். வாங்கிய கடனில் 5 லட்சத்தை திருப்பி செலுத்தியிருக்கிறார். இன்னும் 2.25 லட்சம் செலுத்த வேண்டி இருக்கிறது.

10.03.2016 அன்று வி.கைகாட்டி கடைவீதியில் இருந்திருக்கிறார் அழகர். அப்போது அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பத்து பேர் அழகரிடம் சென்று வம்பிழுத்திருக்கிறார்கள். அவரது சட்டையை பிடித்து இழுத்து பணம் கட்ட வேண்டும் என மிரட்டியிருக்கிறார்கள். ஒரு மாதம் டைம் கொடுங்கள் என்று அழகர் கேட்டிருக்கிறார்.

டைம் கொடுக்க முடியாது, உடனே பணத்தை கட்டவில்லை என்றால் ஜப்தி செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அழகரும் அவர்களிடத்தில் பேசிப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர்கள் ரவுடிக் குழு போல் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் மூன்று பேர் தாங்கள் போலீஸ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தரக்குறைவான வார்த்தைகளை தாங்க முடியாத அழகர், அடுத்து தாக்குவார்களோ என பயந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நிதி நிறுவனத்தை சேர்ந்த அந்தக் கும்பல் அழகர் வீட்டிற்கு சென்று மிரட்டி டிராக்டரை எடுத்து சென்று விட்டார்கள். அங்கிருந்து தப்பித்த அழகர் அரியலூருக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டார். பிறகு தனது நண்பர் முருகானந்தத்திற்கு போன் செய்து பேசியிருக்கிறார். "எனக்கு அவமானம் தாங்கல. விஷம் குடிச்சிட்டேன். இனி பிழைக்க மாட்டேன் " என்று சொல்லியிருக்கிறார்.

அழகர் பயந்து போனதற்கு காரணம் இப்படி நடந்தது முதல் முறை அல்ல. ஏற்கனவே வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் சென்று பெண்கள் இடம் தரக்குறைவாகப் பேசி இருக்கிறார்கள், மிரட்டியிருக்கிறார்கள். அதனால் தான் அழகர் இந்த முடிவிற்கு போயிருக்கிறார்.

அழகரை தேடி அலைந்த குடும்பத்தினர் நிறைய நேரம் கழித்து கைகாட்டி பகுதியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பைக்கிலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விடியற்காலை 3.30 அளவில் இறந்து விட்டார் அழகர்.

வீட்டிற்கு உடலை எடுத்து வந்து மாலை எரியூட்டியிருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தான் காவல் நிலையம் இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் அந்தப் பக்கம் தலைக்காட்டவில்லை. வழக்கமாக தற்கொலை செய்தி கிடைத்தால் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.

அழகரை தவிர குடும்பத்தில் இருப்போர் கல்வி அறிவு இல்லாதவர்கள். ஏழை விவசாயக் குடும்பம். 26 வயது மகன் இறந்த சோகத்தில் அவர்களும் காவல்துறைக்கு செல்லவில்லை. இன்று அந்தப் பகுதியில் வேறு ஒரு துக்க நிகழ்விற்கு சென்ற நேரத்தில் இந்த செய்தியை என்னிடத்தில் சொன்னார்கள். அவர் இல்லம் சென்று ஆறுதல் கூறினேன். அப்போது  இதை எல்லாம் சொல்லி அவர் தாயும், தந்தையும் அழுதார்கள்.

நான் அங்கு சென்றிருக்காவிட்டால் இந்த செய்தி மீடியா பார்வைக்கு வராமலே போயிருக்கக் கூடும். வெளி உலகை எட்டியிருக்காது. நான் சென்ற செய்தி கிடைத்து தான், வருவாய் துறையினரும், உளவுத் துறையினரும் வந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

வேறு யாராவது மிரட்டியிருந்தால் காவல்துறைக்கு செல்லலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தஞ்சை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் பாதுகாப்போடு சென்று, இதே போன்று விவசாயியை மிரட்டி அடித்த செய்தி. இங்கேயும் வந்தவர்களில் மூவர் காவல்துறை என சொல்லியிருக்கிறார்கள். இது அழகரின் முடிவுக்கு முக்கிய காரணம்.

டிராக்டர் விற்கும் போது எல்லா ஆசை வார்த்தைகளையும் சொல்லி விற்கிறார்கள். விற்ற பிறகு கந்துவட்டி கும்பல் போல் நடந்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே பணம் கட்டாமல் இருந்தாலும் காரணம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அழகர் ஏற்கனவே 5 லட்சம் கட்டியும் இருக்கிறார்.

மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் விவசாயி கடனாளி ஆகி இருக்கிற நேரத்தில் தனியார் நிறுவனங்கள் இந்தக் கொடுமையை தொடர்ந்தால் இந்தப் பலி தொடர செய்யும். ஆண்ட அரசாங்கத்திற்கு விவசாயி மீது அக்கறை இல்லை. இருந்திருந்தால் இந்தக் கடன்கள் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப் பட்டிருக்கும். அரசு ஒத்துழைப்பு இல்லை என்றால், தனியார் நிதி நிறுவனங்கள் இந்த தாதா ராஜ்ஜியம் நடத்த முடியாது.

விஜய மல்லையாவுக்கு ஒரு நியாயம், அப்பாவி விவசாயிக்கு ஒரு நியாயம்.

நாளை அந்தப் பாக்கி பணத்தைக் கட்டிவிடலாம், போன உயிரை மீட்க முடியுமா?

இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் திரள்வார்கள்.

# பிணம் தின்னும் நிறுவனங்கள், துணை நிற்கும் அரசாங்கம் !